பெண் அதிகாரம் அளித்தலின் (Women empowerment). அணுகுமுறைகள்.
பல சர்வதேச மாநாடுகள், உச்சிமாநாடுகள், கருத்தரங்குகள்,மற்றும் பெண்களுக்கான பட்டறைகள் என்று பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக உலகம் முழுவதும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து பேசப்படுகின்றன.என்றாலும்,
பெண்களுக்கான அதிகார பகிர்வு மற்றும் பெண்களின் சமூக பங்களிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் முக்கியமானது என்று குறுக்கி அளவிட முடியாது.
அல்லது அவர்களையும் நிர்வாகங்களில் இணைத்துக் கொண்டோம் என்று பெருமை கொள்வதோடு நிறுத்திவிட முடியாது.மாறாக
தற்போதுள்ள வளர்ச்சி மாதிரிகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல் சீர்திருத்த ரீதியிலான வளர்ச்சியை உருவாக்குவதும் வேண்டும்.
அதிகாரத்தில் உள்ள பெண்களானாலும் சரி,சுய தொழில் செய்யும் பெண்களானாலும் சரி
குடும்பத்திலிருந்து சுதந்திரம் பெற்று தன்னிறைவு அடைவதை விட, குடும்ப நிர்வாகத்தில் திறம்பட செயல்பட்டு தன்னிறைவு பெறுவதே சிறப்பானது என்பதை பெண்கள் விரும்புகின்றனர்.
எனவே வீட்டில் குடும்ப வேலைகள் முதல் சமூகத்தின் பிற துறைகளில் கூலி மற்றும் உற்பத்தி வேலைகளில் ஈடுபடுவதில் பெண்களே அதிகம் உள்ளனர்.இவர்களுக்கான வருமானம் மற்றும் பாதுகாப்பு மிக குறைவாகவே உள்ளது. இதை களைவதற்கும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் குடும்ப உறுப்பினர்கள் முதல் சமூக அதிகாரத்தில் உள்ள அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
எனவே கள ஆய்வுகளின் அடிப்படையில் தொழில் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
மாநில மற்றும் மாவட்ட வாரியான தொழில்சார் திட்டங்கள் சமூக வளர்ச்சியின் இலக்கை நிறைவு செய்வதற்கு பெண்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம்.வகுக்கப்படும் திட்டங்கள் எல்லா பெண்களுக்கும் எளிதில் கிடைக்க கூடியதாகவும் பின்பற்ற தகுந்ததாகவும்,பாதுகாப்பை உறுதி செய்யவதாகவும் இருக்க வேண்டும்.
பெறுகாலத்திற்கு பின் வேலைக்கு செல்லும் பெண்களின் குழந்தைகளை பாதுகாக்க வழிவகைகளை ஏற்படுத்துவது சமூக முன்னேற்றத்தின் அடையாளமாகும்.
உலகம் முழுவதும் பெண்களுக்கான அதிகார பகிர்வு என்பது போராட்டமானது தான்.பல்லாயிரம் ஆண்டுகளாக கோலோச்சி இருக்கும் ஒரு பாலினத்திடம் தன் தேவை என்ன என்று விளக்கிச்சொல்லி பெற முடியாத ஒரு பாலினம் தான் பெண் சமூகம்.காலணி ஆதிக்கத்திற்கு பிறகு பெண்ணுரிமை மற்றும் பெண்கள் அதிகாரம் பெறுவதும் மூன்றாம் உலகில் வேறு வடிவமெடுத்தது.கல்வியின் மூலம் விழிப்புணர்வு பெற்று சமூகத்தின் மீது தனக்கும் பொறுப்புகள் உள்ளது என்பதை உணர்ந்ததன் விளைவாகவே பெண்ணியம் பிறந்தது.
தனக்கான இடத்தில் அவள் அமர்வர்வதற்கே தடைகள் இருந்தன.அமர்ந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பின் அடிப்படையில் சுதந்திரமாக செயல்படுவதற்கென்றும் முடிவுகள் எடுப்பதற்கும் பல முட்டுக்கட்டைகள் இருந்தது.இப்படி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் தான் பெண் அதிகாரம் முழுமையடையாமல் உள்ளது.
பெண்களின் முன்னேற்றம் என்பது தேசத்தின் முன்னேற்றத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.எனவே
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறதில் உள்ள பெண்கள் வாய்ப்புகளை எளிதில் பெற வேண்டுமென்றால் தங்களின் முன் முயற்சிகளால் விழிப்புணர்வோடு செயல்படும் பட்சத்தில் எளிதில் பலன் பெறலாம்.
சற்று பின்னோக்கிப் பார்த்தால்,விவசாய பெண் கூலிகள் தங்கள் சம்பளத்தை உயர்த்தி கேட்டதை எண்பதுகளின் பெண்ணிய புரட்சியாக நான் பார்க்கிறேன்.இது எளியவர்களிடமிருந்து எழுந்த குரல் என்று கடந்து சென்று விட முடியாது.
இந்த குரல் பொருளாதாரத்திற்காக எழுந்தது மட்டுமல்ல,பாலின சமத்துவத்தை பெறுவதற்கான குரல் என்பதை எளியவர்களுக்கும்,ஒடுங்கி கிடந்தவர்களுக்கும்,அதிகாரத்திற்கும் உணத்தியது.
இது போன்ற சிறு சிறு அணுகுமுறைகள் தான் பெண்கள் வரலாற்றில் தன்னம்பிக்கையை அதிகரித்து அவர்களின் அதிகாரத்தையும் வலுப்படுத்தி விரிவுபடுத்துகிறது. ஆகவே அதிகாரம் பெற்ற பெண்கள் பிற்போக்குத்தனமில்லாத சிந்தனையால் முன்னேற விழையும் பெண்களுக்கு கரம் நீட்ட வேண்டும்.
பெண்கள் தரப்பில் புதிய வழிகளில் சிந்திப்பதும், பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் வழங்குவதும்,தோல்விகளை எதிர்கொண்டு புதிய முயற்சிகள் செய்வதன் வழியாகவும் பெண் சுயாதிகாரம் பெற முடியும்.
களத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் பெண்கள் பள்ளி கூடங்கள்,தொண்டு நிறுவனங்கள்,விளம்பரங்கள்,சமூக ஊடகங்கள் மூலமாக பாலின சமத்துவ செய்திகளை பகிர்வது போன்ற எளிமையான அணுகுமுறைகள் மூலமாகவும் பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளை குறைப்பது மட்டுமின்றி திறமையான பெண்கள் பொருளாதாரம் சார்ந்த நலவுகளை அடைய வாய்ப்புகளை உருவாக்க முடியும்.இதன் மூலம் சமூகம் தானாகவே வளர்ச்சி இலக்குகளை அடையும்.பாலின பாகுபாடு இல்லாமல் அனைவரின் ஆற்றலும் ஒன்று சேர்க்க பட வேண்டும்.
பெண்கள் வளர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்று மல்டி மீடியாவை வைத்தோ அல்லது அரசியல் மற்றும் ஒரு சில சமூக சாதனையாளர்களை வைத்து மட்டும் நாம் முடிவு செய்து விட முடியாது.பெண்கள் தங்களுக்கான வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் மட்டுமல்லாமல் தங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள் பலப்படுத்த பட வேண்டும் என்பதில் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.குரல் கொடுக்க வேண்டும்.உரிமைகளை கேட்டு பெறுவதற்கு தொடர் முயற்சி செய்ய வேண்டும்.
மேலும் தகவல் பெறும் அறிவை வளர்த்துக் கொள்ளவது அவசியம்.தகவல் பகிர்வின் மூலம் சமூக அதிகாரத்தில் உள்ளவர்கள் மூலம் உதவிகள் பெற்று இடர்களை சரி செய்ய முடியும்.வேண்டாத தகவல்களை பேசி ஆற்றலை இழப்பதை விட,நம் ஆற்றல்களை தகவலாக மாற்றுவதன் மூலம் நாமும் நம் சமூகமும் பயனடைய உதவும்.எனவே பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.
பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதும், முடிவு எடுப்பதில் பங்கேற்பதும் அவசியம் ஆகும். பெண்கள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் அறிவு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் தனித்துவமான சிந்தனைகளும் சமூகத்தை புதிய வளர்ச்சி பாதையில் பயணிக்க உதவுகிறது.அப்போது தான் பாலின பாகுபாடின்றி சமூக வளர்ச்சியின் இலக்கை நிறைவு செய்ய முடியும்.
தொழில் நிறுவனங்கள் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் வருமானம் ஈட்டுவதில் சேமிப்பு செய்வதற்கான வாய்ப்புகள், செயல்திறனுக்கேற்ற வேலைகள் மற்றும் கலாச்சார வரம்புகளை அடையாளம் கண்டு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.கலாச்சார மீறலாகிவிடுமோ என்ற அச்சத்தினால் நிறைய பெண்களின் திறமைகள் முடங்கி கிடக்கிறது.ஆகவே அவர்களுக்கான வரம்புகளுக்குள் செயல் பட தொழில் சார் அமைப்புகள் இவ்வாறான பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும்.இதன் மூலமாகவும் பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு மற்றும் பாலின சமத்துவம் ஆகியவை புதிய இலக்குகளை தொட முடியும் .
இந்திய சூழலில் இது மிக முக்கியமானதாகவும், உணர்வு ரீதியிலானதும் கூட.சமூக பண்பாட்டோடு தொடர்புடைய பாரம்பரியமான சிறு தொழில் முனைவோர் போன்றோர் இதில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.
எனவே பெண்களின் திறன்கள் இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படாமலேயே வளர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது.
வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் மோசமான விளைவுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள்
விவசாயம் செய்பவர்களாகவும் கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு சுகாதார மையங்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் நிவர்த்தி செய்து விவசாயம் சார்ந்த புதிய பயிர்சாகுபடி மேம்பாட்டு திட்டங்கள் கொண்டுவர வேண்டும்.இதன் வழியாக நாட்டின் முதுகெலும்பு பலம் பெரும்.மற்றும் அவர்கள் நிறைவான தன்னிறைவு பெற்றவர்களாக மாறுவார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பெண்ணதிகாரம் அல்லது வளர்ச்சி என்பது பொருளாதாரம் மற்றும் சமூக மாற்றத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல .கலாச்சார களங்களில் பரவியிருக்கும் சிக்கலான உணர்வுகளை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுப்பது ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த யோசனையாக இருக்கும் என்று கருதுகிறேன்.
சில குடும்பங்களில் பெண்கள் பொருளாதார ரீதியாக ஆண்களை நம்பியிருக்கிறார்கள்.இவர்கள்
சமத்துவம் என்ற அணுகுமுறையில் இருந்து வேறுபட்டு
பெண்கள் சமூகத்தில் பின்தங்கியவர்களாக உள்ளனர்.
உதாரணத்திற்கு நடுத்தர வர்க்க பெண்கள் வேலை செய்வதும்,சமூக பணிகள் மற்றும் பொறுப்புகளில் அதிகம் ஈடுபடுவதில்லை.ஆண்களுக்கு அடிபணிய வேண்டும் என்ற மேலோங்கிய சிந்தனை சிக்கலினால் இவர்கள் வாய்ப்புகள் கிடைத்தாலும் பயன்படுத்தி கொள்ளாமல் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றனர்.
இதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உருவாகும் பொருளாதார சமத்துவமின்மை வறுமையுடன் இணைகிறது.
இவர்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.பொருளாதாரத்தை கடந்து தங்கள் திறன்களை சமூகத்துக்கு பயனளிக்கும் விதமாகவும்,தன்னிறைவு பெற்றவர்களாகவும் வாழ முன் வரவேண்டும்.அவர்களுக்கான சுயமரியாதை மற்றும் அங்கீகாரத்தை பெற வேண்டுமானால் வசதிகளை உடைத்தால் மட்டுமே பெற முடியும்.இவ்வாறு செயல்படுவதன் மூலம் பாலின சமத்துவத்தில் உள்ள இடைவெளியையும் சரி செய்ய முடியும்.
சிலருக்கு
முன்னேற்ற பாதையில் சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் பொருளாதார ரீதியாக பயனடைந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.
ஒரு பெண்ணின் கரம் முன்னேற்ற பாதையில் நீளும்பொது மறு கரம் பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசின் தார்மீக உதவிகள் தான்.இவை இரண்டும் இணைந்து தான் வலிமையான ஆற்றலாக மாற முடியும்.ஆகவே பெண்கள் அரசின் நலத்திட்டங்கள்,மானியம்,தள்ளுபடிகள் போன்ற சலுகைகளை பயன்படுத்தி கொண்டு தன்னிறைவு பெற முயல வேண்டும்.
பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீதும் அவர்களின் பாதுகாப்பு,சுகாதாரம் ஆகியவற்றை சீர்படுத்தி கொடுப்பது தார்மீக கடமையாகிறது.வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் இருக்கிறதா என்பதை உறுதி படுத்தி கொண்டு செல்வது சிறந்தது.ஒரு வேளை
அங்கு நீங்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற செயல்கள் நடந்தால் அனைவரும் ஒன்றிணைந்து தயங்காமல் உங்கள் குரல்களை ஓங்கி ஒலிக்க வேண்டும்.இது தீவுகளுக்கும்,மாற்றங்களுக்கும் வழி வகுக்கிறது.
கல்வி பெற்ற பெண்களால் மட்டுமே சமூகத்தில் பொருளாதாரம் மற்றும் உயர் தகுதிகளையும் அதிகாரத்தையும் பெற உதவுவது மட்டுமல்லாமல் சிந்தனைத் திறனை வளர்த்தெடுத்து, சுயசார்புடையவர்களாக மாறவும் உதவுகிறது.ஆகவே பெண்கள் கட்டாயம் கற்க வேண்டும்.கற்கும் கல்வியை முழுமைபடுத்தி முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும்.தான் இருக்கும் இடத்தில் தன்னை சிறப்பான நிர்வாகிகளாக வளர்த்தெடுத்து கொள்ள வேண்டும்.
மட்டுமல்லாமல் பெண்கள் தங்களின் ஆரோக்கியமான உணர்வுகள் மூலம் தேசத்தின் வளர்ச்சிக்கும் தனது பாதுகாப்பான வாழ்க்கைக்கும்,பாலியல் கொடுமைகள் மற்றும் சமூக சீர்கேடுகளில் இருந்து எதிர்கால தலைமுறையை ஆரோக்கியமாக உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
பெண் சுதந்திரம் என்பது தங்கள் வாழ்க்கையை தாங்களே கட்டுப்படுத்தும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவதே.அதுவே பெண்ணதிகாரம் பெற வழி வகுக்கும்.
பணி இடங்களில் எதிர் பாலினத்துக்கான கண்ணியத்தை உணர்ந்து செயல்படுபவர்களாக இருக்கவேண்டும்.அதிகாரத்தோடு அறம் பேணி வாழும் பெண்ணதிகாரம் சமூகத்தை ஆரோக்கியமான கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் சமூக குற்றங்கள் குறையும்.
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றங்களுக்கு பெண்களே காரணமாகி விட கூடாது என்ற கவனமே உண்மையான பெண்அதிகாரத்தின் (women empowerment ) அடையாளம் ஆகும்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
திருக்குறள்:அறத்துப்பால்
Comments
Post a Comment