சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்.
பெண்களை இறைமைக்கு சமமாக காலம் காலமாக இந்த சமூகம் பொற்றுவதை பார்க்கிறோம். செல்வங்களை அள்ளிகொடுப்பவளாக,கலைகளை கற்றுகொடுப்பவளாக,பாவம் செய்பவர்களை வதம் செய்பவளாக,அண்ணப்பூரணியாக போற்றுகிறது.ஆனால் அடுக்களை தாண்டிய பல கலைகளுக்கு சொந்தக்காரர்கள் பெண்கள் என்பதை நிரூபிக்க அவள் படிப்படியாக போராடித்தான் அடைய முடிந்தது.அரசியர்கள், சமூக போராளிகள்,மருத்துவர்கள்,அரசியல் பிரமுகர்கள், இராணுவ அதிகாரிகள், படைப்பாளிகள்,விளையாட்டு வீராங்கனைகள், மென் பொறியாளர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்,விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் என பட்டியல் சொல்லிகொண்டே போகலாம். பெண்கள் தங்களின் களங்களை தேர்வு செய்பவராகளாக மட்டும் இல்லை.காத்து கிடக்கும் சமூக களங்களின் தேவையை நிறைவு செய்துகொண்டும் இருக்கிறார்கள். பேரிடர் காலங்களில் தாயாகவும், காருண்யாவாகவும் பெண்களை பார்க்கும் இந்த சமூகம் பாதுகாப்பில்லாத ஒர் சூழ்நிலையில் ஓநாய் போல் அவளை வேட்டையாடிவிடுகிறது.பெண்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள்,மாதவிடாய் சிரமங்கள்,பேறுகால சிரமங்கள் போன்றவை இருந்தாலும் பணிச்சுமைகளுக்கிடயே சமூக ஏற்றதுக்காக பாடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பும், நலத்திட்டங்களும் மிக குறைவாகவே உள்ளது.பெண்கள் பணிக்கு செல்வதால் அவர்களின் குடும்பம் மட்டும் பொருளாதார முன்னேற்றம் அடைவதில்லை.மாறாக தன் நாட்டின் பொருளாதார ஏற்றதிலும் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.தங்களின் சாதனைகளால் பண்னாடுகளையும் தன் நாட்டை திரும்பி பார்க்க வைத்து விடுகிறார்கள். ஆனால் சமூகத்தை பொறுத்தவரை பாதுகாப்பற்ற தன்மை தான் பெண்களுக்கு உள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. திருட்டு கூட ஆண்களிடம் அதிகம் நடப்பதில்லை. பெண்களின் பொருளாதாரத்தில் தான் கை வைக்கிறார்கள்.நகை பறிப்பு சம்பவங்கள் பெண்களை குறிவைத்தே நடத்தப்படுகிறது.பாலியல் அச்சுறுத்தல், வியாபாரத்திற்காக பெண்களை கடத்துதல்,பாலியல் சீண்டல்கள் போன்றவை பேரிடர் காலங்களில் கூட இரக்கமில்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.கோபம் வந்தால் கூட பெண் உறுப்புகளை, அவள் நடத்தை யை குறியீடாக வைத்து ஏசுதல் போன்றவை இன்னும் சமுதாயத்தில் புரையோடி போன புற்றாக உள்ளது.கலாச்சாரங்களை கடைபிடிப்பதில் தொன்மை காட்டும் ஒரு சமூகம் பெண்களை இப்படி எல்லாம் நடத்துவது எந்த அறத்தின் அடிப்படையிலோ புரியவில்லை. இவை ஒருபுறமிருக்க.. பெண்களின் உணர்வுகளை கையிலெடுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றை வியாபார கருவிகளாக மாற்றுகிறது. திரைப்படங்களில் மேன்மையாக்கி காட்டுவதானலும், மிச்சத்தை போல் காட்டுவதானாலும் சரி, தனக்கான விளம்பரங்களானாலும் தனக்கு சம்மந்தமே இல்லாத விளம்பரமாக இருந்தாலும் பெண் தான் அதற்கு முதலீடாகிறாள்.தனக்கான பாதுகாப்பை தேடி தேடி புரட்சி, பெண்ணியம்,நாகரீக உடைகள்,மது என்ற பெயரில் ஆணுக்கு இணையாக பரிணாம வளர்ச்சியடைய காலம் காலமாக பெண் இனம் தங்களை தற்காத்து கொள்ள அலைக்கழிந்து கொண்டு தான் இருக்கிறது.ஒரு தீர்வும் கிடைத்தபாடில்லை.தன்னை கூட்டுப்புழுவாக உருமாற்றி கொள்ளுவதா அல்லது சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாக்கி கொள்வதா என்ற குழப்பத்தில் தான் சமூகம் பெண்களை வைத்துள்ளது. கூட்டுப்புழுவின் தியாகமும் பயனாளர்களின் தேவை நிறைவடையும் வரை தான் நினைவில் இருக்கும்.அந்த கூட்டு புழுக்களை சமூகம் குடும்ப பெண்கள் என்ற பெயரில் செமித்து விடுகிறது.கரிக்கும் கண்ணீரை விழுங்கி தினமும் கால் கடுக்க நடந்து போய் வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு தன் சம்பள அட்டை கூட சொந்தமில்லை. மதுவும்,போதையும் சமூகத்தை நிதானமிழக்க வைத்ததால் தான் இந்நிலை.ஒரு பெண் பட்டாம் பூச்சியை போன்று பறக்க நினைத்தால் அதை விட ஆபத்துகளை சமூகத்தில் அவள் எதிர்கொள்ள நேரிடும் நிலை.சுதந்திரமாக பறக்க நினைக்கும் அவற்றை கையில் பிடித்து முடக்க நினைக்கும் சிலர். அதன் வண்ணங்களை வழட்டி பார்த்து வக்கிரம் செய்யும் சிலர். இறக்கைகளை பிடுங்கி வன்மத்தொடு சிதைக்கும் சிலர். இப்படி பலரையும் கடந்து உயரே பறந்து இலக்கை அடையும் ஒரு சில பெண்கள் மட்டுமே சமூகத்தால் தவிர்க்க முடியாத அடையாளமாக போற்றபடுகிறார்கள். இந்த போராட்ட நிலையிலிருந்து சமூகம் பெண்களுக்கு விடுதலை தர வேண்டும்.பெண்கள் பகட்டு உலகின் நுகர்வோராகவும் முரண்பாடுகளை அழகாக்கி கொள்பவர்களாகவும் வாழ்வதன் மூலம் சமூக பாதுகாப்பும் அந்தஸ்தும் கிடைத்து விடுவதில்லை. மாறாக வலைதளங்களுக்கு நொறுக்கு தீனிகளாகி விடுகிறார்கள். விஞ்
யானமும்,புதுமைகளும் கால மாற்றத்தினால் நிகழ்வதை தடுக்கவோ மறுக்கவோ முடியாது. என்றாலும் அந்த காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் குப்பை கூளங்களை போல் தங்களின் வாழ்வை பெண்கள் ஆக்கி கொள்ளக் கூடாது. மாறாக நம்முடைய கேள்விகளும், புரட்சிகளும், புதுமைகளும் நம் ஒழுக்கதிலிருந்து பிறக்க வேண்டும்.அசைக்க முடியாத ஒழுக்க விழுமங்களின் விருட்சமாக சான்று பகர வேண்டும்.அரசாங்கமும் பெண்களுக்கான திட்டங்களில் வலிமையான பாதுகாப்பு சட்டங்களையும்,திறன் கொண்ட நலதிட்டங்களையும் கொண்டு வர வேண்டும்.வேலியே பயிரை மேயும் நிலை தான் இந்த நூற்றாண்டிலும் பெண்களுக்கு சமூகத்தில் உள்ளது. சகிப்புத்தன்மைக்கே சவால் விடும் நிலை வந்தாலும் குரலெழுப்பாமல் இருப்பவள் தான் பெண்ணுக்கான இலக்கணம் என்றும்,குரல் எழுப்பினால் அவள் அகங்காரி என்றும் தப்பிதம் கற்பிக்கும் சமூகம் மாற வேண்டும்.உலகத்தில் வாழும் எல்லா உயிரினங்களின் சமூகத்திலும் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் பெண்ணினம்.தன் குடும்பத்திலும் சமூகத்திலும் தறிகேடாக திரியும் ஓர் ஆண் பறவையை தன் அலகுகளால் கொத்தி தள்ளி வெளியேற்றும் பறவயான மைனா சமூகத்தில் கூட பெண்ணுக்கான அறம் நிலை நாட்டபடுகிறது.தைரியத்தையும், முடிவெடுக்கும் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும்,உறுதுணையையும் ஒரு பறவை சமூக கட்டமைப்பு உருவாக்கி உள்ளது ஆச்சர்யம் தான். தனக்கான மணக்கொடயை நிர்ணயிக்க கூட சுதந்திரம் இல்லாமல், வரதட்சணையைக் கொட்டி கொடுத்து வாழ்க்கையை பேரம் பேசும் சமூகம் மாற வேண்டும்.உலகை ஆளும் ஓர் சமூகம்,பகுத்தறியும் அறிவு கொண்ட மனித சமூகம் அவள் குரலின் வலியை உணரும் சமூகமாக என்று மாறுமோ அன்று தான் அபலைகளின் குரலுக்கான தீர்வும் கிடைக்கும்.
Comments
Post a Comment