இஸ்லாம் வலியுறுத்தும் ஜனநாயகம்.


"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். பின்னர் நீங்கள் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை இனங்களாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் உங்களில் மிக கண்ணியமானவர், உங்களில் (அவனை) மிகவும் அஞ்சுபவர்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், உட்நோக்குபவனாகவும் இருக்கிறான்."குர்ஆன் 49:13:

இந்த வசனம் மனித குலத்தின் அடிப்படை ஒற்றுமையையும், அதே சமயம் அதன் பன்முகத்தன்மையையும் வலியுறுத்துகிறது. வெவ்வேறு குழுக்களாக மனித சமூகம் இருப்பதன் காரணம் ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொண்டு, உறவுகளைப் பேணுவதற்குதானே தவிர நிறம், மொழி, இனம் போன்ற கூறுகள் வேறுபாடுகளை கொண்டு பெருமை கொள்வதற்காக அல்ல, மாறாக இதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் மக்கள் ஒற்றுமையோடு வாழ தகுதியான சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டும். என்ற மாற்று சிந்தனையை இஸ்லாம் எடுத்துரைக்கிறது.                         

முஹம்மது நபி (ஸல்) மற்றும் அவர்களின் தோழர்களின் ஆட்சிக் காலத்திலும் மதீனா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு இனக்குழுக்களும், மதக் குழுக்களும் வாழ்ந்து வந்தன. இஸ்லாமிய சமூகத்தில் முஸ்லிம்கள் மட்டுமின்றி, யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்த பல தெய்வ வழிபாட்டாளர்களும் இருந்தனர்.இந்த சூழலில் இஸ்லாம் ஒவ்வொரு சமூகத்திற்கும் மத சுதந்திரத்தை அளித்தது மட்டுமல்லாமல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாக கடைப்பிடிக்கவும் அனுமதித்தது.

முஹம்மது நபி ஸல் அவர்களின் காலத்தில் "ஜனநாயகம்" என்ற பெயரோ இன்றைய நவீன அரசியல் கருத்துருவம் ஆகியவை முழுமையாக இல்லை என்றாலும் அக்கால சமூக அமைப்பு மற்றும் அரசியல் கோட்பாடுகள் இன்றய நவீன ஜனநாயகத்தை ஒத்த கூறுகளை உள்ளடக்கியதாக இருந்தது.அவை
அத்ல் (நீதி), மஸ்லஹா (பொது நலன்), மற்றும் ஹுர்ரியா (சுதந்திரம்) ஆகிய முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாகவும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஒத்த வலுவான அடிப்படைகளையும் இஸ்லாம் ஆட்சி அதிகாரத்தில் வந்த பின்பு நடைமுறையில் செய்து காட்டியது .
இந்த கொள்கைகளே இன்றைய நவீன ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முன்னோடியாகவும் கருதப்படுகிறது. 

நபிகளாரின் மறைவுக்குப் பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒரு ஜனநாயகத் தேர்தலுக்கு முழுமையாக ஒத்ததாக இல்லாவிட்டாலும், சமூகத்தின் முக்கிய தலைவர்கள் கூடி ஆலோசனை செய்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தனர். இது பரம்பரை ஆட்சி முறைக்கு மாறாக, தலைமைத்துவத்தை மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு வடிவமாக அமைந்தது.இஸ்லாம் மன்னராட்சி முறையையும் ஒழித்தது கவனிக்க தக்கது.

இஸ்லாமிய ஆட்சி காலத்தில் மக்களுக்கு துணிச்சலுடன் ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இது இஸ்லாமிய ஆட்சியின் தனித்துவமான ஒரு அம்சமாகும்.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான கலீஃபாக்களில் ஒருவர். அவருடைய ஆட்சிக்காலத்தில ஒரு தலைவராக இருந்தாலும், சாதாரண மக்களைப் போலவே வாழ்ந்தார்கள். அவருடைய எளிமையும், மக்களின் தேவைகளுக்கு செவிசாய்க்கும் பண்பும் அவரை மக்களிடையே மிகவும் பிரபலமாக்கியது.

உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்தபோது நடந்த ஒரு பிரபலமான நிகழ்வு இது. ஒரு முறை, உமர் (ரலி) அவர்கள் மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மூதாட்டி எழுந்து, "உமர்! நீங்கள் அணிந்திருக்கும் ஆடை எப்படி இவ்வளவு பெரியதாக இருக்க முடியும்? பொது நிதி உழைப்பால் கிடைத்த வருமானத்தில் எல்லோருக்கும் சம அளவில் தானே ஆடை கிடைக்கிறது. உங்களுக்கும் அதுதானே கிடைத்திருக்க வேண்டும்?" என்று நேரடியாகக் கேட்டார்.
இதற்கு உமர் (ரலி) அவர்கள் கோபப்படாமல், அமைதியாகப் பதிலளித்தார்கள். அவர், "என் ஆடை சிறியதாக இருந்ததால், என் மகன் அப்துல்லாஹ் தனது பங்கில் ஒரு பகுதியை எனக்குக் கொடுத்தார்" என்று விளக்கினார். இந்தச் சம்பவம், உமர் (ரலி) அவர்கள் மக்களின் கேள்விகளை எவ்வளவு மரியாதையுடன் அணுகினார் என்பதையும், அவர் வெளிப்படைத்தன்மை கொண்ட ஆட்சியாளர் என்பதையும் காட்டுகிறது.

மேலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல்வேறு பின்னணியிலிருந்து வந்த தனிநபர்களை முக்கிய பதவிகளுக்கு உயர்த்தினார். உதாரணமாக, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் அடிமை நபரான பிலால் இப்னு ரபா, இஸ்லாத்தின் முதல் முஅத்ஸின் (தொழுகைக்கு அழைப்பவர்) ஆனார், இது மிகவும் மதிக்கப்படும் பதவியாகும். பரம்பரை அல்லது இனம் அல்ல, தகுதி மற்றும் இறையச்சமே மரியாதை மற்றும் தலைமைக்கான அளவுகோல்கள் என்பதை இஸ்லாம் நடைமுறையில் செய்து காட்டியது.

மேலும் போர் போன்ற வெளிப்புற அச்சுறுத்தல் காலங்களின் போது அனைத்து சமூக மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே செயல்பட வேண்டும் என்று நபிகளார் ஆட்சியாளர்களை ஏவினார்கள்.ஒரு ஆட்சியாளராக மட்டுமல்லாமல் இறை நம்பிக்கையாளராகவும் பல்வேறு குழுக்களிடையே அமைதியான வாழ்வு மற்றும் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கினார்கள்.

இன்றைய ஜனநாயக மக்களாட்சி முறையில் சில சட்டங்கள் பன்முகத்தன்மையின் மெல்லிய உணர்வுகளை காயப்படுத்தி விடுகிறது.இன்றைய
சர்ச்சையான அரசியல் போர்களத்தில் பெரும்பாலும் முஸ்லிம்கள் பிற்போக்குத்தனமானவர்கள் என்பது போன்ற சிந்தனைகள் மக்கள் மத்தியில் கட்டமைக்கப்படுகிறது.

முத்தலாக் சர்ச்சைகள்,பொது சிவில் சட்டம் சிறுபான்மை கலாச்சாரங்களை விமர்சிப்பது அல்லது ஓரங்கட்டுவது மற்றும் கலாச்சார நடுநிலையில் இரட்டை நிலைகளை கையாளுவது போன்ற பதட்ட நிலை இன்றைய ஜனநாயகத்தில் ஊடுறுவுவது சிறுபான்மை சமூகங்களை கவலைக்கு உள்ளாக்குகிறது.ஏனெனில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதம், இந்திய மதச்சார்பின்மைக்குள் ஒரு அடிப்படை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

நபிகளார் காலத்தில் அரபு மண்ணிலும் இது போன்ற பழங்குடிவாதம் மற்றும் இனவெறி ஆகிய இரண்டாலும் இஸ்லாம் வருவதற்கு முன்பு அரேபிய சமூகம் பிளவுபட்டிருந்தது. இது பெரும்பாலும் மோதல் மற்றும் பாகுபாட்டிற்கு வழிவகுத்தது. நபிகள் நாயகம் மக்களின் இந்த மொளட்டீக எண்ணங்களை தகர்த்து மக்கள் விழித்தெழ வெளிப்படையாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். 

நபிகள் நாயகத்தின் (ஸல்) இந்த
கடைசி பிரசங்கம் இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பிரபலமானது.
"ஒரு அரபியருக்கு அரபியல்லாதவரை விட எந்த மேன்மையும் இல்லை, அரபியல்லாதவருக்கு அரபியரை விட எந்த மேன்மையும் இல்லை; மேலும் ஒரு வெள்ளையருக்கு கருப்பினரை விட எந்த மேன்மையும் இல்லை,இறையச்சம் மற்றும் நல்ல செயல்களைத் தவிர வேறு எந்த மேன்மையும் இல்லை." இந்த அறிக்கை மக்களின் இனவெறி மற்றும் பழங்குடிவாதம் போன்ற மேட்டிமை குணங்களை தகர்த்து சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் மீதான முக்கியத்துவத்துவத்தை இஸ்லாம் மக்களுக்கு உணர்த்தியது.

ஜனநாயகம்" என்ற கருத்து 7 ஆம் நூற்றாண்டில் இல்லை என்றாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவெடுப்பதில் ஆலோசனை (ஷுரா) கொள்கைகளை வலியுறுத்தினார்கள். பல்வேறு விஷயங்களில் அவர் தனது தோழர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டு செயல்பட்டார்கள்.ஏனென்றால் சமூகநீதியை பேண வேண்டுமெனில்
சமூகத்தின் ஒருமித்த கருத்து என்பது இஸ்லாமிய சட்டத்தில் முக்கிமானதாக கருதப்படுகிறது. அதற்கு முன்னுதாரணமாக ஹூதைபியா உடன்படிக்கை (The Charter of Medina) விளங்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா நகருக்கு வந்தபோது அங்கு பல மதக் குழுக்கள் வாழ்ந்து வந்தன. இந்த பலதரப்பட்ட சமூகங்களுக்கு இடையே அமைதியான சகவாழ்வை உறுதிப்படுத்த நபிகளார் மதீனா சாசனத்தை உருவாக்கினார்கள். இது உலகின் முதல் முதலாக எழுதப்பட்ட அரசியலமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
* அனைத்து சமூகங்களுக்கும் மத சுதந்திரம் வழங்கப்பட்டது.
   * மதீனாவின் பாதுகாப்பு மற்றும் பொது நலனில் அனைத்து குழுக்களுக்கும் பொதுவான பொறுப்பு இருந்தது.
   * குழுக்களுக்கு இடையே சச்சரவுகள் ஏற்பட்டால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீதிமன்ற அதிகாரியாக செயல்படுவார் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
   * ஒவ்வொரு குழுவும் தங்கள் சொந்த சட்டங்களைப் பின்பற்றும் உரிமைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
 
இந்த ஹுதைபியா உடன்படிக்கைக்கு பிறகு அனைத்து தரப்பு மக்களிடையே இஸ்லாம் பெரிய அளவில் நன்னம்பிக்கை பெற்று பரவியது.
பல்வேறு சமூககுழுக்களுக்கு இடையில் ஒரு முடிவெடுக்கும் நிலை வரும்போது அந்த சமூகத்தின் பிரதிநிதிகளை அனுமதிப்பதன் மூலம் நீதியை உறுதி செய்வது மட்டுமல்லாமல் ஒரு தனி நபரின் தன்னிச்சையான அல்லது பாகுபாடான முடிவுகளைத் தடுக்கிறது, மேலும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் குரல் கொடுக்க வாய்ப்பளிக்கிறது.
ஒரு ஆட்சியாளர் மக்களை பதட்ட நிலையிலிருந்து மீட்டு அமைதியான சூழலில் வைத்திருப்பது அவர்கள் மீது தார்மீக கடமை என்று இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
மேலும் பன்முக சமூகத்தில் கூட்டு ஒப்பந்தத்திற்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் உணர்ந்துகிறது.

நபிகளார் பழிவாங்கும் எண்ணம் கொள்ளாமல் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.மக்கா வெற்றியின் போது இறுமாப்பு கொள்ளாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடந்தகாலத்தில் தன்னைத் துன்புறுத்தி நாட்டைவிட்டு வெளியேற துணை புரிந்த மக்களையும், எதிரிகளையும் மன்னித்தார்கள்.அவர் மக்காவிற்குள் நுழைந்தபோது, பழிவாங்குதல் அல்லது அடக்குமுறைக்கு பதிலாக சொன்ன வார்த்தை இது.
"இன்று உங்கள் மீது எந்த பழியும் இல்லை.நீங்கள் சுதந்திரமானவர்கள்!" என்று கூறினார்.இஸ்லாத்தில் இந்த நடைமுறைகள் நவீன ஜனநாயக செயல்முறைகளுக்கு ஒத்ததாக இல்லாவிட்டாலும் இந்த நிகழ்வு பல்வேறு சமூகங்களின் பாதுகாப்பு உணர்வையும்,மரியாதையையும் கருத்தில் கொண்டு இஸ்லாம் செயல்படுகிறது என்பதை பிரதிபலிக்கிறது.

இந்த நவீன யுகத்திலும் சாதிய மோதல்கள் பிரிவினைவாதம் போன்ற நிகழ்வுகள் நித்தமும் உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் பிரச்சனைகள் அன்றும் இன்றும் ஒன்று போல்தான் உள்ளது.சமூக குற்றங்கள் மற்றும் சாதிய பிரிவினைகள் போன்றவையும் ஒன்று போலத்தான் இருக்கிறது. வேண்டுமானால் சற்று வடிவம் மட்டும் மாறி இருக்கிறது.

நபிகளார் (ஸல்) அவர்கள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் மிகுந்த உறுதியுடன் இருந்தார்கள். அவர்களின் ஆட்சிக்காலம், சமத்துவம், பாகுபாடின்மை மற்றும் மத சுதந்திரம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தது.
ஒரு உயர்குலத்தைச் சேர்ந்த பெண்மணி திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டார். இவரைத் தண்டிக்கும்படி கொண்டுவரப்பட்டபோது, சமுதாயத்தில் உள்ள சிலர், அவர் ஒரு உயர்குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று விரும்பினர். அவர்கள் நபிகள் நாயகத்தின் அன்புக்குரியவரான உசாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களை அணுகி, தண்டனையைக் குறைக்க அல்லது ரத்து செய்ய பரிந்துரைக்குமாறு வேண்டினர்.
உசாமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கோபமடைந்தார்கள். "முந்தைய சமுதாயத்தினர் அழிவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அவர்களில் ஒரு பெரியவன் திருடினால் அவனை விட்டுவிடுவார்கள்.ஒரு சிறியவன் திருடினால் அவனைத் தண்டிப்பார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மதுவின் மகள் ஃபாத்திமாவே திருடினாலும், அவருடைய கையையும் நான் துண்டிப்பேன்!" என்று கூறினார்கள்.

இந்த நிகழ்வு, இஸ்லாத்தில் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை அழுத்தமாக நிலைநிறுத்தியது. உயர்வு தாழ்வு, செல்வம், சமூக அந்தஸ்து போன்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல், குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நீதி வழங்கப்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நிகழ்வின் மூலம் தெளிவுபடுத்தினார்கள்.

இஸ்லாமிய ஜனநாயகம்" என்பது மேற்கத்திய ஜனநாயகத்தின் அச்சு அசல் பிரதி அல்ல. இருப்பினும் இஸ்லாமிய ஆட்சிமுறைக் கொள்கைகள் குறிப்பாக ஷூரா, நீதி, சமத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பு போன்ற நவீன ஜனநாயகத்தின் பல நேர்மறையான அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய கோட்பாடுகளுக்குள் மக்களாட்சிக்குரிய கூறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

மட்டுமல்லாமல் இறைவனின் இறையாண்மைக்கு உட்பட்டு சமூகத்தில் நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநிறுத்திசமூகத்தை சீர்கெடுக்கும் தீமைகளான ஓரினச்சேர்க்கை, மது,வட்டி,விபச்சாரம் போன்றவற்றை எதிர்க்கிறது.இதனால் நவீன ஜனநாயகத்துக்கும் இஸ்லாம் கூறும் ஜனநாயகத்துக்கும் இடையே ஒரு உறவுசிக்கல் இருப்பதாக சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள் நினைக்கிறார்கள்.இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறி. அது ஆட்சிமுறை, சமூக உறவுகள், பொருளாதாரம் என மனித வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் வழிகாட்டுகிறது. 

மோசமான சமூக குற்றங்கள் நடக்கும்போது குற்றங்களை குறைத்து சமூக ஒழுக்கம் பேண இஸ்லாம் வரையறுத்த தண்டனைகள் அமல் படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கான நீதி ஏழை,பணக்காரர் என்ற பாரபட்சமில்லாமல் வழங்க வேண்டும் என்றும் மக்கள் குரல் எழுகிறது.
இது மக்களுக்கு இஸ்லாத்தின் மீதான புரிதலை காட்டுகிறது.மற்றும் இன்றைய அறிஞர்கள் இஸ்லாமிய சமூகத்தோடு ஒரு உறவு பாலத்தை அமைத்து கொள்வது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.இஸ்லாமிய ஜனநாயகத்தின் முக்கிய அம்சம்.ஷரியத் சட்டத்தை (இறைச்சட்டம்) மையப்படுத்தி செயல்படுவதாகும்.மனிதர்கள் தன்னிச்சையாக சட்டம் இயற்றுவதை விட, இறைச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதே ஒழுக்கமான மற்றும் குற்றமற்ற சமநீதியான சமூகம் அமைய முடியும் என்பதே இஸ்லாமிய ஜனநாயக கொள்கை ஆகும்.

Comments

Popular posts from this blog

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்.

பெண் அதிகாரம் அளித்தலின் (Women empowerment). அணுகுமுறைகள்.