திறன் வழி கல்வியின் தேவை.
கல்வி கற்கும் நோக்கமே நம் தனி திறனை மெருகூட்டி கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பது தான்.ஒரு காலத்தில் இலக்கிய படிப்புகள் அரசவயை அலங்கரிக்க மட்டுமே என்ற கருத்து மக்களிடம் இருந்தது.இன்று இலக்கிய துறை எழுத்து துறை,பேச்சாற்றல் மிக்கவர்கள் ஆகியோருக்கான களம் வர்த்தக ரீதியாக விரிவடைந்து விட்டது.
மருத்துவ பட்ட படிப்புகள்,பொறியியல் பட்டப்படிப்புகள் போன்றவற்றுக்கு செலவுகள் அதிகரிப்பதால் அதை கற்கும் வாய்ப்பு பெரும்பான்மையான மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.அப்படியே கிடைத்தாலும் பல அளவுகோல்களை கடந்து செல்வது எளிதானதாக இல்லை.
பொருளாதர ரீதியான சமூக அழுத்தங்களை எதிர்கொள்ளவும், வேலைவாய்பின்றி வழிகேட்டில் செல்லும் இளம் தலைமுறையை சற்று பொறுப்போடு மாற்றுவதற்கும் இந்த திறன் வழி கல்வி இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் திறன் வழி கல்வி பயனளிக்கும் என்றாலும்,இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க இது மிகவும் அவசியாகிறது.
உலக நாடுகளில் திறன்களை வளர்க்கும் கல்வித் திட்டம் பல்வேறு விதங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சில நாடுகள் தொழில் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன, சில நாடுகள் மென் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன.
இதனால் பொருளாதார மேம்பாடு மட்டுமல்லாது ஆரோக்கியமான சமுதாயம் உருவாகிறது.உழைக்க தொடங்கும் இளைஞர் சமூகத்தில் குற்ற செயல்கள் மிகுதம் குறைந்து விடுகிறது.
நம்முடைய நெகிழ்வற்ற ஒரே வகையிலான பாடத்திட்டங்கள் மாணவர்களை கடுமையான மனநிலைக்கு தள்ளுகிறது.அதிக கட்டணங்களை செலுத்தினால் தான் தரமான கல்வி பெற முடியும் என்ற மனநிலை மற்றும் பொருளாதார அழுத்தம் பெற்றோர்களுக்கு சவாலாக உள்ளது. குழந்தைகள் விரும்பியும் விரும்பாமலும் பொதிகளை சுமந்து பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறார்கள்.
மதிப்பெண்களே மாணவர்களின் திறமைகளை தீர்மானிக்கும் என்கிற நிர்பந்தம் குழந்தைகளின் சிந்தனை திறனையும் மற்ற திறமைகளையும் சுருக்கிவிடுகிறது.மட்டுமல்லாது மதிப்பெண் பெறும் குழந்தைகளே வாழ்வில் வெற்றி பெறுபவார்கள் என்ற பொது புத்தி சிந்தனையில் சிலர் அளவுகோல்களை வைத்துள்ளார்கள்.
அப்படி அல்ல.நாம் இன்று படிக்கும் ஃபார்முலாக்களும், தியரிகளும் ஒருவரின் திறமையால் உருவானது தான்.அதை போன்ற திறனை வளர்க்கும் வாய்ப்புகளை இன்றைய மாணவர்களுக்கு கல்வி வாயிலாக கற்பிக்கும் பாடத்திட்டங்கள் நடைமுறை படுத்த வேண்டும்.
மாணவர்களின் தொடக்கப்பள்ளி பருவத்திலேயே கண்டறிந்து ஊக்கம் அளிக்க வேண்டும்.
உயர்கல்வி பருவத்தில் மாணவர்கள் தங்களின் குறிப்பிட்ட திறமைகளை மேம்படுத்தும் விதமாக தொழில் விருப்பங்களுடன் ஒத்துப்போகும் படிப்புகளை தேர்வு செய்வதன் மூலமே
சாத்தியமாகும்.
மேலும் பிராந்திய மொழிகளில் தரமான கல்வியை வழங்குவதன் மூலம், மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வது மட்டுமல்லாது அனைத்து மாணவர்களும் கல்வி பெற வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக ஆங்கில மொழியை ஒரு திறன் மொழியாக கற்றுக்கொள்வதன் மூலம் மாணவர்கள் உலகளாவிய வாய்ப்புகளை பெறலாம்.மட்டுமல்லாது
வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் புதிய தொழில் தொடங்கவும் இக்கல்வி ஊக்கமளிக்கிறது.பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இந்த திறன் வழி கல்வி முறை சமூகத்தில் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது.
சிறப்புத் தேவைகள் கொண்ட மாணவர்களுக்கு ஏற்றவாறு திறன்சார் கல்வி முறைகளில் வசதிகளை ஏற்படுத்தவதன் மூலம் அவர்களும் தன்னிறைவு அடைய முடியும்.
மேலதிகமாக கல்வித் திட்டங்களில் உள்ள பாகுபாடுகளை சரிசெய்ய சில யுக்திகளை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு அவர்களின் திறமைகளை கண்டறிந்து இலவச கல்வி வழங்குவதன் மூலம், அவர்களின் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சலுகைகளை வழங்குவதன் மூலம், அவர்களின் கல்விச் செலவுகளை குறைக்கலாம்.
கிராமப்புற பள்ளிகளில் திறன் வழி கல்விக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தரமான ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம், நகரப்புற பள்ளிகளுக்கு இணையான கல்வியை வழங்கலாம்.
ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களின் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
பெண் குழந்தைகள் திறன் வழி கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்துவது அவசியமாகும்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொழில்நுட்பக் உயர் கல்வி கற்க அச்சமற்ற சூழலை உருவாக்குவதன் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்கலாம்.திறன் வழி கல்வி மாணவிகளுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாகும்.இது பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாது பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கிறது.
மேற்கண்ட கனவுகள் நனவாக வேண்டுமானால் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிப்பதன் மூலமே முடியும்.எனவே ஆசிரிய பயிற்சியில் திறன் வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இந்த யுக்திகளை செயல்படுத்துவதன் மூலம், கல்வித் திட்டங்களில் உள்ள பாகுபாடுகளை குறைத்து, அனைவருக்கும் சமமான கல்வி,மற்றும் வாய்ப்புகளை வழங்க முடியும்.
வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் திறன் மேம்பாட்டுக் கல்வி மிகவும் முக்கிய தேவையாக இருக்கிறது.
வேலைவாய்ப்புகள் பெறுவதற்கு போட்டி நிறைந்த சந்தைகளோடு போராட வேண்டியுள்ளது. திறமையான நபர்களை பெரும் நிறுவன முதலாளிகள் தேடுகின்றனர்.திறன் மேம்பாட்டாளர்களால் நிறுவனமும் பணியாளர்களும் இருவருமே இலாபம் அடைய முடிகிறது.
தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப கல்வி திட்டத்தில் மாறுதல் கொண்டு வர வேண்டும்.
சிறப்புத் திறன்களைக் கொண்ட டிஜிட்டல் கல்வி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
திறன் மேம்பாட்டு கள்விக்கேற்ப பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த பட வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவையான கல்வியை ஊக்குவிப்பது இன்றைய தலைமுறைக்கு அவசியமாகிறது.
இதன் மூலம் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை நீங்கி வணிக ரீதியாக பொலிவான சமூகம் உருவாகிறது.
புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது மூலமாக தன்னம்பிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாது புதிய வாய்ப்புகளும் கிடைக்கிறது.
மாறி வரும் உலகில் திறன் மேம்பாட்டுக் கல்வி மக்களை மிகவும் தகவமைப்புத் திறன் கொண்டவர்களாகவும், வேலைச் சந்தைக்கு ஏற்ப மாறக் கூடியவர்களாகவும் தகுதிபடுத்துகிறது.
திறன் மேம்பாட்டுக் கல்வி என்பது உருமாறும் போட்டி நிறைந்த உலகில் தனிநபர்கள் செழித்து வளரவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை அடையவும் இன்றைய தலைமுறைக்கு அவசியமான ஒன்றாகும். சுருங்கச்சொன்னால் மனப்பாடம் செய்வதை விட மாணவர்களின் திறமைகளுக்கும் ஆர்வத்துக்கும் மதிப்பு கொடுத்து அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவம் கள்விதிட்டமே எதிர்காலத்தின் தேவையாக இருக்கிறது.
Comments
Post a Comment