இணைய பாதுகாப்பும் இன்றைய இளைஞர்களும்.

சமூக ஊடகங்களை இளைஞர்கள் பயன்படுத்துவதில் நன்மைகள் பல உண்டு என்றாலும் குறிப்பிடத்தக்க நெறிமுறைகளோடு அணுக வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் சமூக ஊடகம் என்பது நுணுக்கமானது மற்றும் வெளிப்படை தன்மை இல்லாத ஒன்று.எனவே தொழில்நுட்ப மாற்றத்தின் விரைவான வேகம் காரணமாக இளம் தலைமுறையினருக்கு ஏற்படும் நன்மைகளை விட,பாதிப்புகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பல சவால்களையும் முன்வைக்கிறது. ஆகையால் நாம் நேர்மறையான அணுகுமுறைகள் மற்றும் சமூகத்தின் நல்வாழ்வில் கவனம் செலுத்தி, இதை பொறுப்புடன் அணுகுவது மிகவும் அவசியமாகிறது.

1997 மற்றும் 2012 க்கு இடையில் பிறந்த டிஜிட்டல் தலைமுறையின் சுவாரசியமான பெயர் ஜெனரேஷன் Z என்று சமூகம் குறிப்பிடுகிறது.இதற்கு பிறகு பிறந்தவர்கள் gen alpha,gen beta என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு முந்தைய தலைமுறையினரிடமிருந்து இந்த டிஜிட்டல் தலைமுறையினர் வேறுபட்டவர்கள்.இவர்கள் டிஜிட்டல் யுகத்தில் முழுமையாக மூழ்கி வளர்ந்தவர்கள்.இவர்களால் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழ்க்கையை ஒருபோதும் அனுபவிக்கவோ நகர்த்தவோ முடியாது என்று கூறுவார்கள்.தகவல்களை நிதானமாக பகுப்பாய்வு செய்து உள்வாங்கும் பழக்கம் குறைந்தவர்கள். குறைந்தபட்சம் மூன்று நபருடைய தொலைபேசி எண்களை கூட நினைவில் வைத்து கொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள்.ஆனால் அபாகஸ் வகுப்பில் முதல் மாணவர்களாக சான்றிதழ் வாங்கி விடுவார்கள். இப்படிதான் இன்றைய இளைஞர்களின் அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தை பரவலாக நாம் காண்கிறோம்.

இவர்களுக்கு சமூக ஊடக தளங்கள் வெறும் தகவல் தொடர்பு கருவிகளாக மட்டும் இல்லை.ஆரோக்கியமான செயல்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.உதாரணமாக சமூக தொடர்பு, தகவல் பெறுதல் மற்றும் அடையாளங்களை உருவாக்கி கொள்வது,தனிப்பட்ட அடையாளம் அல்லது செல்வாக்கை ஏற்படுத்திகொள்ளவும்,சமூக பிரச்சனைகளை விவாதம் செய்வது போன்ற ஆரோக்கியமான செயல்களுக்கும் டிஜிட்டல் உலகை பயன்படுத்துகின்றனர்.
இந்த டிஜிட்டல் தலைமுறை இளைஞர்கள் பன்முகத்தன்மை வாய்ந்த உணர்வு உடையவர்களாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமத்துவம்,கலாச்சார ஒருங்கிணைப்பு போன்றவற்றில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பது மகிழ்ச்சி தான்.ஆனால் இது மிக சிறிய அளவில் தான் உள்ளது.

பெரும்பாலான இளைஞர்கள் சோஷியல் மீடியாக்களில் செல்வாக்கு உடையவர்களை நண்பர்களாக ஆக்கிகொள்வது அல்லது முன்மாதிரிகளாக எடுத்துக்கொள்வது, போன்ற உணர்வு ரீதியான தொடர்பை ஏற்படுத்திகொள்கிறார்கள்.குறிப்பாக சமூக வலைதளங்களில் அடிமையாகின்றனர்.சமூக வலைத்தளங்களில் மற்றவர்களைப் போலத் தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சமூக அழுத்தம் போன்றவை காரணமாக இளைஞர்கள் தங்கள் தகவல்களை பகிர்கின்றனர்.தாம் சார்ந்துள்ள சூழலும் குறுஞ்செய்திகள் பகிரவும் இதன் பக்கம் இளஞர்களை உந்துகிறது.

இளைஞர்களுக்கு இணைய தனியுரிமை(privacy) மற்றும் தரவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக அவசியம். இதில் உள்ள யதார்த்தமற்ற வாழ்க்கை முறை பதிவுகள் மற்றும் சில பதிவுகள் சந்தாதாரர்களை(subscribers) மேம்படுத்துவதற்காகவும் இளைஞர்களின் உணர்வுகளை, ஆசைகளை தூண்டுவது போன்ற பதிவுகள் ஆகியவை பாதுகாப்பின்மை மற்றும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. வெளி இடங்களுக்கு சென்றாலும் உறவினர் வீடுகளுக்கு சென்றாலும் வீட்டுக்கு உறவினர்கள் வந்தாலும் சற்று நேரம் கடந்த பின் இவர்கள் மீண்டும் மொபைலை கையில் எடுத்து விடுகிறார்கள்.இப்படிபட்ட சூழலில் நம் நினைவுகளை பின்னோக்கி பார்க்க வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் சிறுவர்கள் பென்சிலை சீவி கழனியில் ஊற வைத்தால் காலையில் ரப்பராகி விடும் என்றும் மயில் இறகை புத்தகத்தில் மூடி வைத்தால் குட்டி போடும் என்ற 90's கிடஸ் ன் வெகுளித்தனமான கண்டுபிடிப்புகள் சிரிப்பை வரவழைத்தாலும் அவர்களிடம் இருந்த நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் இன்றைய இளைஞர்களிடம் வெகுவாக குறைந்து விட்டது.வாழ்வின் எதார்த்தங்கள்,ரசனைகள், இயற்கையுடனான பிணைப்பு, கட்டுப்பாடுகள்,சமூக ஒழுக்கம் போன்றவை அலட்சியபடடுத்தபடுகிறது.

இணையத்தில் உலாவும் 
பதிவுகளுக்கு அல்லது உரையாடல்களின் போது எதிர்மறை விமர்சனங்களை சமாளிக்க தெரியாமல் தங்களின் சுயமரியாதை குறைந்து போல் வருந்தி இளைஞர்கள் பல விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள்.இணைய அங்கீகாரமே தங்களின் மதிப்புக்கான அளவுகோல் என்று நினைக்கின்றனர். எப்போதுமே தாங்கள் அழகாகவும், மகிழ்ச்சியாகவும்,வெற்றிகரமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.இணைய அங்கீகாரத்தை நம்பாமல் தங்களின் தன்னம்பிக்கை மற்றும் திறமைகளை வளர்த்து கொண்டு தனிப்பட்ட சாதனைகள் செய்ய முன்வர வேண்டும்.                        

ஸ்மார்ட் போன்களின் அதிகமான திரைநேரத்தால் இளம் தலைமுறை மனநலம் சம்பந்தபட்ட உணர்வுகளை பாதிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
போர் செய்வது போன்ற விளையாட்டுகள்,மிருகங்களை கொல்வது போன்ற ஈவு இரக்கமற்ற கேம்கள் இளைஞர்களிடம் உளவியல் ரீதியான மாற்றங்களை உருவாக்குகிறது.சட்டென்று வரும் கோபம், பொறுமையிழப்பது, அவசரபுத்தி, பார்க்கும் பதிவுகளை கொண்டு மட்டுமே செயல்களை கட்டமைத்து கொள்வது ஆகியவை இளைஞர்களின் கல்வி மற்றும் செயல்திறனை பாதிக்கின்றன.தூக்கக் குறைபாடு சமூக ஊடகப் பயன்பாட்டுடன் தொடர்புடையதாக இருப்பதால் மாணவர்களின் ஒட்டுமொத்த உடல்நலமும் பாதிக்கிறது.வாசிப்பு என்பது அற்று போய் டிஜிட்டலில் ஒருவர் வாசிப்பதை கேட்கும் நிலை உருவாகிவிட்டது.இணையம் ஒரு சக்தி வாய்ந்த கருவி.அதன் பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பதில் விழிப்புடன் இருந்தால்தான் நாம் எதிர்மறை பாதிப்புகளை குறைக்க முடியும்.

இணைய வீடியோ பகிர்வுகள் உலகம் முழுவதும் கலாச்சார தாக்கத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்துகிறது. பாரம்பரியம் என்ற பெயரில் பிரிவினைவாதம் எல்லாம் ஒழியும் நிலை உருவாகி புதிய சமூகம் உருவாக சிறிதளவு வழிவகுத்தாலும், பெரும்பான்மையான விஷமிகளால் தவறான சமூக விரோத வழிகாட்டல், ஆபாசம்,நூதன திருட்டுக்கள், பிரிவினைவாதம் போன்றவையும் இணையத்தின் மூலம் இளைஞர்களிடையே விதைக்கப்படுகிறது.இவை இடைவெளிகளால் ஏற்படும் சிக்கல் தான்.எனவே மற்றவர்களின் பதிவுகளை வைத்து மனம் போன போக்கில் ஒப்பீடு செய்து பார்க்காமல் எதிர்மறை செய்திகளை புறக்கணிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ள வேண்டும். உண்மையான நண்பர்களோடு நேரடி தொடர்புகளை வலுப்படுத்தி கொள்ள வேண்டும். சமூகத்தோடு உள்ள நேரடி பிணைப்பை நாம் குறைதுகொண்டால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் சமூகம் நம்மை தனிமைபடுத்திவிடும்.

ஒப்பனையான புகைப்படங்கள் மற்றும்
டிக்டோக் நடனங்கள், இன்ஸ்டாகிராம் ரீல்கள், ட்வீட்கள் போன்றவை விரைவாக வைரலாகி, புதிய போக்குகளை இளைய சமூகத்தில் உருவாக்குகின்றன. இதன் மூலம் ஊடகங்களை எத்தனை சதவிகித ஆண் ,பெண் பயன்படுத்துகின்றனர். அவர்களின் ஆர்வம் மற்றும் குறிப்பிட்டு அவர்கள் எதை தேர்வு செய்கிறார்கள் என்பதை பொறுத்து அந்த செயலிகள் மேம்படுத்தபடுகிறது.
இளம் வயதுடைய பெண்களும் ஆண்களும் பேசிக்கொள்ளவும் கூச்சமற்று போகவும் வெகுவாக செயலிகள் பயன்படுகிறது.இவற்றின் பயன்பாடு என்னவோ நல்ல நோக்கங்களுக்காக தான்.ஆனால் அதில் உள்ள விருப்பத்தேர்வுகள்(option) தான் 
வில்லங்கத்திற்கு வழிவகுத்து விடுகிறது.

சில நேரங்களில் சிக்கலான தரவுகளை உடனடியாக பெற உதவுகிறது என்றாலும் இளைஞர்களின் கவனத்தையும் நேரத்தையும் விரயம் செய்கிறது.எதிர்காலமே யூடியூப் வருமானத்தை நம்பி தான் இருக்கிறது என்றும் யூடியூப் வீடியோ வருமானத்தில் வீடு கட்டுகிறேன்,கடை வைத்துவிட்டேன் என்று கூறுவது எதிர்கால தலைமுறையின் சிந்தனை திறன் மற்றும் ஆக்கசக்தியை மழுங்கடிக்கிறது.வருமானம் ஈட்டகூடிய செயலிகளால் அச்சுறுத்தல்களுக்கும் இளைஞர் சமுதாயம் ஆளாகிறது. ஆன்லைன் கேம்கள்,சூதாட்டம் போன்றவற்றால் சைபர் மிரட்டலுக்கு ஆளானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகிறது. 

ஆன்லைன் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகள் மனநலப் பிரச்சினைகளை அனுபவித்துள்ளனர். சைபர் மிரட்டலுக்கு முக்கிய காரணங்களாக தோற்றம், கல்வி இனம்,மற்றும் பாலியல் ஆகியவற்றை காரணமாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆன்லைன் வேட்டையாடுபவர்கள் குழந்தைகளுடன் கேமிங் தளங்கள், அரட்டை தளங்களை(chat rooms) போன்றவற்றை அணுகுவதன் மூலம் இளம் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகங்களை சந்திக்கிறார்கள்.
வேட்டையாடுபவர்கள் பெரும்பாலும் இளம் பெண்களாக போல் நடித்து இது போன்ற குற்றங்களை செய்கின்றனர். நூறு சதவிகித பாதுகாப்பு என்பது சமூக வலைதளங்களில் ஒருபோதும் கிடையாது.இது போன்ற செயலிகளை பயன்படுத்துவோரின் தரவுகளை கொண்டு இதை விட மேம்படுத்தப்பட்ட செயலிகள் உருவாக்கபடும்போது அடுத்து அதை நோக்கி ஓடுபவர்களாக நாம் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

இன்றைய தலைமுறைக்கு பெற்றொரோடும், உடன்பிறந்தவர்களோடும் உரையாடல் மற்றும் பிணைப்பு குறைந்துவிட்டது. இன்றைய தலைமுறையினரில் 13 வயது முதல் 17 வயதுடைய பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் 95% பேர் ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றர்.AI வீடியோ உருவாக்கங்களும் அதன் பயன்பாடுகளும் இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.இதன் பயன்பாடுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளாவிட்டால் விளைவுகள் எதிர்காலத்தில் மனித இனம் தனக்கே உரிய மாண்புகளையும் தொலைத்துவிடுமோ என்ற அளவுக்கு இன்றைய தலைமுறையினர் மத்தியில் டிஜிட்டல் பயன்பாட்டின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

இளைஞர்களின் நுகர்வோர் பழக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. சேமிப்பு பழக்கம் குறைந்து கடன் வாங்கும் சமூகமாக மாறிவிட்டார்கள். சமூக ஊடக தளங்கள் மற்றும் மார்கெட்டிங் இன்ஃப்ளூயன்சர்கள் ஆகியவை தூண்டி விடுகின்றன.பிறகு பார்த்து கொள்ளலாம் இப்போது வாங்கி கொள்ளலாம் என்று ஒரு ரூபாய் முன்பணம் செலுத்தி உறுதியற்ற நிதி பயன்பாட்டில் (Emi) சிக்கி கடனாளிகளாக மாறுகின்றனர்.விளம்பரங்களால் தூண்டப்பட்டு எதிர்பாராத ஷாப்பிங் காரணமாக திட்டமிடப்பட்ட பட்ஜெட்டை மீறுகிறார்கள்.தேவை இல்லாவிட்டாலும் விளம்பரங்களில் பார்ப்பதை எல்லாம் வாங்கும் சமூகம் ஆகிவிட்டது.
Crypto மோசடிகள்,சைபர் மிரட்டல்கள்,இலவச ஸ்கிராட்ச் கார்டுகள்,
AI போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சுரணடல் ஆபத்துகள் சாவாலாக உள்ளது.வணிக திருட்டுக்கள்,
இணையவழி நிதி மோசடிகள் போன்றவை இளைஞர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உருவாகியுள்ளன. 
பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல் புகார் கொடுக்க முன் வர வேண்டும். அப்போதுதான் இது போன்ற தவறுகளை கட்டுபடுத்த முடியும்.

இளம் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் படங்கள், வீடியோக்கள், ஸ்டைலான தோற்றம் மற்றும் நண்பர்களுடன் நேரடியாக உரையாடுவது போன்றவை அவர்கள் தங்களைப் பற்றி காட்டிக்கொள்ளவும், மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் வழி வகுக்கிறது.ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒப்பனை செய்துள்ள பக்கத்தை மட்டுமே பெரும்பாலும் காட்டுவார்கள்.இயல்பு வாழ்வில் வேறு சூழலில் வேறு நிலையில் இருப்பார்கள்.இதுதான் டிஜிட்டல் தளங்களின் நிதர்சன வடிவம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தீங்கு விளைவிக்கும் மென்பொருள்களை (Malware) கொண்டு தகவல் திருட்டு நடைபெறுவது போன்றவற்றை தடுக்க தங்கள் மொபைல்களில் பாதுகாப்பை உறதிபடுத்தி கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் ஊடகத்தை பயன்படுத்தும் திறன்கள் குறைவாக இருப்பவர்கள் 
கவர்ச்சிகரமான பகுதிநேர அல்லது ஆன்லைன் வேலைகள் வழியாக வரும் 
தவறான தகவல்கள் மூலம் சிக்கல்களை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

பள்ளிகளில் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் இணைய பாதுகாப்பு பாடங்களை பாடத்திட்டத்தில் இணைப்பதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம்.இதனால் மாணவர்கள் ஆன்லைன் அபாயங்களை அடையாளம் காணவும்,பாதுகாப்பு அமைப்புகளைப் வலுவாக்கவும், சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடையாளம் காணவும்,ஆன்லைன் துன்புறுத்தல் போன்றவற்றை சமாளிக்கவும் உதவுகிறது.

சிறுவர் மோசடிகளை தடுக்க வயது சரிபார்ப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் பயன்பாடு முக்கியமான ஒன்றாகும்.குறிப்பாக சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வீடியோக்கள் அல்லது விளம்பரங்கள் போன்றவற்றை பார்க்காமல் தடுக்க வேண்டும்.அதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சாதனங்களில் பெற்றோர் கட்டுப்பாடுகளை (parental control)நிறுவலாம். மற்றும் பெற்றோரும் குழந்தைகள் முன்பு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
திரை நேரத்தை(screen time) குறைக்க வாசிப்பு,பிற கலைகளை கற்பிப்பது,குழந்தைகளின் தனி திறமைகளை கண்டறிந்து ஊக்கம் அளிக்க வேண்டும்.மற்றும் குடும்ப விளையாட்டுகள் போன்ற ஆஃப்லைன் நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.பெற்றோர்கள் பாதுகாப்பான ஆன்லைன் நடத்தையை குழந்தைகளுக்கு புரிய வைத்து அதன் ஆபத்தை புரியவைப்பது மற்றும் தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியம்.பெற்றோர்கள் மட்டுமல்லாது கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆகிய அனைவரின் பொறுப்பும் கூட .இருந்தாலும் பெற்றோரே பாதுகாப்பு வரிசையில் முதலாமவராக செயல்பட வேண்டும்.

இந்த டிஜிட்டல் தளம் என்பதே சிக்கலான கண்ணிவெடி களம் தான்.
எல்லா கண்டுபிடிப்புகளும் நன்மைக்காக தான் தொடங்கப்படுகிறது. ஆனால் முடிவு பரிதாபமாகி விடுகிறது.சிறு வயதில் கேட்ட கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.ஒரு அரசன் நந்தவனத்தில் அமர்ந்து பூக்களை ரசித்து கொண்டிருக்கிறான். அவன் வளர்க்கும் பாசமான குரங்கும் அவனருகில் அமர்ந்திருக்கிறது. தென்றல் வீச வீச அரசனுக்கு சுகமாய் தூக்கம் வருகிறது.எனவே தன் உடைவாளை எடுத்து குரங்கிடம் கொடுத்து விட்டு யாரும் என்னை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறேன் என்று கூறிவிட்டு கண்ணயர்ந்து விட்டான்.இப்போது தென்றல் காற்றில் பறந்து வந்த தேன் பூச்சி அரசனின் மேல் வட்டமடிக்கிறது. தொந்தரவு செய்யும் பூச்சியை விரட்ட முயன்று தோற்று போன குரங்கு அரசன் கொடுத்த உடைவாளை எடுத்து தேன் பூச்சியை வெட்ட முயல்கிறது.அந்தோ பரிதாபம் அரசனின் தலை உருண்டுவிட்டது.தேன் பூச்சியோ தப்பித்து விட்டது.முட்டாள் அரசனை போன்று நம் அறிவை அறிவியல் உலகிடம் ஒப்படைத்து விட்டு அது நம் தலைமுறைகளை ஈடேற்றி விடும் என்று நினைத்ததுதான் நம்முடைய தவறு.அது குரங்கின் கைகளில் உள்ள வாளை போன்று இன்றைக்கு செயல்பட்டு வருகிறது.முறையான அனுபவமும் பயிற்சியும் இல்லாத பயன்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடியவை என்பதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்குமே தவிர வாழ்க்கையாகி ஆகி விடாது.என்பதை உணர்ந்து செயல்பட்டால் வரும் தலைமுறை ஆரோக்கியமான சிந்தனைகளோடு கூடிய உலகை உருவாக்கலாம்.

                               வீ. ஆயிஷா கஜினி.


Comments

Popular posts from this blog

இஸ்லாம் வலியுறுத்தும் ஜனநாயகம்.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்.

பெண் அதிகாரம் அளித்தலின் (Women empowerment). அணுகுமுறைகள்.