இறைவழிபாடும் மன ஆரோக்கியமும்.

"அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலமே இதயங்கள் அமைதியடைகின்றன" (குர்ஆன் 13:28)

இஸ்லாம் என்ற வார்த்தையின் மூலமே 'சமாதானம்' மற்றும் 'கீழ்ப்படிதல்' என்ற பொருளை குறிக்கிறது. இறைவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் மட்டுமே உண்மையான மன அமைதியைக் கண்டடைய முடியும் என்பதே இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்.இஸ்லாம் மன ஆரோக்கியத்தை ஆன்மீகத்தின் ஒரு அங்கமகவே பார்க்கிறது. 
மனம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இல்லாமல் ஒருவரால் முழுமையாக இறை வழிபாடுகளில் கவனம் செலுத்த முடியாது.எனவே வழிபாட்டின் தொடக்கமாக முறைப்படுத்தப்பட்ட அம்சங்களில் முதன்மையானது
ஒளு (உடல் தூய்மை). உலக சிந்தனைகளிலிருந்து மனதை விடுவித்து, இறை வழிபாட்டிற்காக மனதைத் தயார்படுத்தும் ஒரு பாலமாக ஒளு செயல்படுகிறது. 
ஒளுவின் கட்டாயக் கடமையை திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்.உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக்கொள்ளுங்கள். உங்கள் கால்களை கணுக்கால் வரை கழுவிக் கொள்ளுங்கள்." (குர்ஆன் 5:6). 

இஸ்லாத்தில் ஒளு என்பது தொழுகை போன்ற வழிபாடுகளுக்கு முன் செய்யப்படும் ஒரு கட்டாயமான உடல் தூய்மைச் செயலாகும். இதன் முக்கியத்துவம் வெறும் உடல் சுத்தத்தோடு நின்றுவிடுவதில்லை. அது மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தவும் அமைதிப்படுத்தவும் உதவும் ஒரு சக்திவாய்ந்த உளவியல் பயிற்சியாகும்.
அன்றாட வாழ்வின் சோதனைகளால் தளர்ந்த நிலையில் இருக்கும் மனிதனின் முகத்திலும், கை கால்களிலும் தண்ணீர் படும்போது அது நரம்புகளை அமைதிப்படுத்தி, மனதிற்கு உடனடி புத்துணர்ச்சியை அளிக்கிறது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "கோபம் ஷைத்தானிடமிருந்து வருகிறது; ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டான்; நெருப்பை தண்ணீர் தான் அணைக்கும். எனவே, உங்களில் ஒருவருக்குக் கோபம் வந்தால், அவர் ஒளு செய்து கொள்ளட்டும்." (நூல்: அபூதாவூத்). 

ஒளு நேரடியான கோபத்தின் ஆதிக்கத்தை குறைக்கும் யுக்தியாக இஸ்லாம் கூறுகிறது.
சோம்பல், மன அழுத்தம் அல்லது கோபமான மனநிலையில் இருக்கும்போது ஓருவர் ஒளு செய்யும் போது அந்த எதிர்மறை உணர்வுகளிலிருந்து கவனத்தைத் திருப்பி, நிகழ்காலத்திற்கு மனதைக் கொண்டுவர உதவுகிறது.துன்பம்,இன்பம்,இழப்பு என்று எத்தனை உணர்வுகள் நம்மை ஆட்கொண்டாலும் ஒரு நாளில் ஐவேளையும் தொழுகைக்காகவும் உடல் தூய்மை நடைமுறைப்படுத்தப்படும் போது உடலும்,மனதும் தூய்மையாகவும் சமணிலையோடும் நேர்மறையான ஆற்றலில் பயணிக்கவும் உதவுகிறது.

"நிச்சயமாக மறுமை நாளில் என் சமூகத்தார், ஒளுவின் அடையாளமாக முகம், கைகால்கள் பிரகாசிப்பவர்களாக அழைக்கப்படுவார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி). 
இந்த நம்பிக்கை ஒருவரின் சுயமரியாதையையும் இறைவனுடனான தொடர்பையும் பலப்படுத்தி மனித மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.

அடுத்படியாக தொழுகை (ஸலாத்).
"நிச்சயமாக தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும், தீமையிலிருந்தும் தடுக்கிறது" (குர்ஆன் 29:45). 
ஒழுக்கமான வாழ்க்கை முறை, மன அழுத்தத்தையும் குழப்பத்தையும் குறைக்கும் என்பது உளவியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.

தொழுகை என்பது வெறும் உடல் அசைவுகள் மட்டுமல்ல. அது ஒரு முழுமையான தியான நிலையாகவும்,மன அமைதிக்கான நேரடித் தொடர்பாகவும் விளங்குகிறது. ஒரு நாளைக்கு ஐந்து முறை, உலகக் கவலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு,பிரபஞ்சத்தின் அதிபதியிடம் திரும்புவது மனதை மறுசீரமைக்க (reset) உதவுகிறது. தொழுகையில் உள்ள ஒவ்வொரு நிலைக்கும் ஆழமான உளவியல் அர்த்தம் உண்டு. குறிப்பாக ஸஜ்தா (சிரம்பணிதல்) நிலையில் ஒரு மனிதன் தனது நெற்றியை தரையில் வைக்கும்போது தன் அகங்காரம், கவலைகள்,பாரங்கள் அனைத்தையும் விட்டு இறைவனிடம் சரணடைந்து விடுகிறான். இது மனிதனுக்கு மனரீியாக ஆழ்ந்த விடுதலையுணர்வையும், பணிவான பண்பையும் உருவாக்குகிறது.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்வில் எந்தவொரு சிரமத்தை எதிர்கொண்டாலும், தொழுகையின் பக்கம் தான் திரும்புவார்கள். ஒருமுறை நபிகளார் தன் தோழர் பிலால் (ரலி) அவர்களிடம், "பிலாலே, தொழுகைக்கு அழைப்பு விடுங்கள் அதன் மூலம் எங்களுக்கு நிம்மதியைத் தாருங்கள்" என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத்). 
தொழுகை என்பது ஒரு கடமை என்பதையும் கடந்து அது ஒரு ஆறுதல் மற்றும் மன அமைதிக்கான செயலாகவும், உலக விவகாரங்களால் ஏற்படும் மன பதற்றத்தை குறைக்கவும் உதவுகிறது.
அவ்வாறே குர்ஆன் ஓதுதலும் இதயத்திற்கான சிகிச்சை என்றே சொல்லலாம்.

"மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு உபதேசமும் இதயங்களில் உள்ள நோய்களுக்கு ஓர் அருமருந்தும் (ஷிஃபா) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும் அருளும் வந்துள்ளன." (குர்ஆன் 10:57).

மனித உள்ளங்களில் எத்தனையோ அறைகள் உள்ளன.ஒவ்வொரு அறைகளின் காட்சிகளும் வேறுபடுகின்றன ஆகவே இந்த குர்ஆன் வசனம் உள்ளத்தின் நோய்களை(வஹ்ன்) குறிப்பிடுகிறது.அவை பொறாமை,பேராசை மற்றவர்களை ஒப்பீடு செய்து பொறாமை கொள்வது போன்ற மன அமைதியைக் கெடுக்கும் எண்ணங்களால் மன அழுத்தம், மன நிறைவின்மை,சந்தேகம், கவலை,உலகத்தின் மீதான அதீத பற்று மற்றும் மரணத்தை வெறுக்கும் எண்ணம் ஆகியவை அடங்கும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.  

இந்த தீய குணங்களை மனதிலிருந்து அகற்ற குர்ஆனின் நல்லுபதேசங்கள் வழிகாட்டுகிறது.குர்ஆனை ஓதுவதும் அதன் பொருளை சிந்திப்பதும்,இறைவனின் பண்புகளை அறிவதும் மனதிற்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது.
முறையான உச்சரிப்போடு ஓதப்படும் குர்ஆனின் கிராத்(rhythm) ஒசைக்கு மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

குர்ஆனின் வசனங்கள் சோதனைகளில் மனிதன் பொறுமையாக இருக்கவும், வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை இறைவனின் பரீட்சையாகக் கருதி பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் முக்கியப் போதனை ஆகும். 
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மக்காவில் முஸ்லிம்கள் சொல்லொணாத் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். அந்த இக்கட்டான காலகட்டத்தில் திருக்குர்ஆன் வசனங்கள்தான் அவர்களுக்கு மன உறுதியையும், ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்தன.
குர்ஆனின் வசனங்களை பொருளுணர்ந்து ஓதும்போது, இறைவன் நேரடியாக நம்முடன் பேசுவது போன்ற உணர்வவையும் ஏற்படுத்துகிறது.

துஆ (பிரார்த்தனை)
துஆ என்பது இறைவனுடன் நடத்தும் ஒரு தனிப்பட்ட உரையாடல்.நமது அச்சங்கள், ஆசைகள், கவலைகள் அனைத்தையும் எந்தத் தடையுமின்றி கொட்டுவதற்கான ஒரு வாய்ப்பு. உளவியல் ரீதியாக நமது பிரச்சினைகளை வாய்விட்டுச் சொல்வதே மனச்சுமையை பாதியாகக் குறைத்துவிடும். அந்தப் பிரச்சினைகளைக் கேட்கும் சக்தி உலகின் மிக உயர்ந்த சக்தியாக இருக்கும்போது அது மிகப்பெரிய நம்பிக்கையையும், மன நிம்மதியையும் தருகிறது.

உதாரணமாக திருக்குர்ஆனில் நபிமார்கள் கடினமான சூழல்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததற்கான உதாரணங்கள் நிறைந்துள்ளன. மீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபி, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட அய்யூப் நபி, தன் சகோதரர்களால் ஏமாற்றபட்டு, கிணற்றில் எறியப்பட்ட யூசூஃப் நபி, அடிமையாக விற்கப்பட்டு வீண்பழி சுமந்து சிறை சென்ற போதிலும் அவர்கள் பொறுமை மற்றும் துவாவை கைவிடவில்லை. இறுதியில் இறைவன் உயர்ந்த பதவியை அளித்தான். எதிரிகளின் முற்றுகைக்கு உள்ளான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்தில் கண்கள் கலங்க செய்த பிரார்த்தனையும் அதானல் கிடைத்த பலன்களும் துஆவின் வலிமைக்கு சிறந்த சான்றுகளாகும். இதனால் தனக்குக் கிடைத்த அருட்கொடைகளுக்காக மனிதன் இறைவனுக்கு நன்றி செலுத்துபவனாகவும்(ஷுக்ர்) ஆகிறான்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலை மற்றும் கடந்த காலத்தைப் பற்றிய துக்கத்திலிருந்தும்,
இயலாமை மற்றும் சோம்பலினால் செயல்பட முடியாத நிலையில் இருந்தும்,
கோழைத்தனம் கஞ்சத்தனம் மன தைரியமின்மை மற்றும் பிறருக்கு உதவ மனமில்லாமை போன்றவற்றிலிருந்தும்
கடன் மற்றும் பிறரின் ஆதிக்கம் - சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்கள்
ஆகிய அனைத்திலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதுபோன்றே திக்ர் (இறை தியானம்)
இறை நினைவில் மனதை ஒருமுகப்படுத்துவது (Mindfulness).
தேவையற்ற சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும்போது, இறைவனின் திருநாமங்களை உச்சரிப்பதன் மூலம் கவனத்தை ஒரு நேர்மறையான மையத்திற்குத் திருப்புகிறோம். இது தொடர்ச்சியான எதிர்மறை சிந்தனை சுழற்சியை(Mood swings) உடைக்க உதவுகிறது. மனநிலை மாறும் நேரங்களில் இறைவனின் பண்புகளை நினைவு கூறுவதன் மூலம் நம் உள்ளத்தின் சஞ்சலங்கள் அடங்கிவிடுகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் இறை நினைவுடன் இணைந்திருக்கச் செய்து, மனதை சமநிலையில் வைத்திருக்க திக்ர் உதவுகிறது.

இன்னும் தான தர்மங்கள் (ஸதகா) பிறருக்கு உதவுவதுலும் கொடுப்பதிலும் கிடைக்கும் மகிழ்ச்சி மனதிற்கு பெரும் நிறைவைத் தரும். இது "Helper's High" என்று நவீன உளவியலில் கூறப்படுகிறது. மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்கள், "தர்மம் செய்வது பாவங்களை அழிக்கிறது, தண்ணீர் நெருப்பை அணைப்பதைப் போல" என்று கூறியுள்ளார்கள். இது மனதிலுள்ள கறைகளை அகற்றி மனதைத் தூய்மையாக்குகிறது.

இறைவனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவனின் உள்ளத்தில் இறைவனால் வெறுக்கத்தக்க ஆசைகள் இருக்காது. தூய்மையான எண்ணமே 
இறைவனை நினைக்க தூண்டுகிறது.அதுபோன்றே இறை வழிபாடுகளான தொழுகை,நோன்பு, குர்ஆன் ஓதுதல்,ஸதகா,திக்ரு போன்றவை சடங்குகள் அல்ல.அவை மனதை ஒழுங்குபடுத்தவும் சீரமைக்கவும்,அமைதிப்படுத்த உதவும் சக்திவாய்ந்த உளவியல் கருவிகளாக உள்ளது.பொறுமை, நன்றி செலுத்துதல்,தர்மம் செய்தல், மன்னித்தல் போன்ற இஸ்லாமியப் பண்புகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம், ஒரு முஸ்லிம் நிலையான மன அமைதியையும், உண்மையான மகிழ்ச்சியையும் அடைய முடியும். 

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால் முழு உடலும் சீராக இருக்கும். அது சீர்கெட்டால் முழு உடலும் சீர்கெடும். அதுதான் இதயம் ஆகும். (ஸஹீஹுல் புகாரி)
                                    
                            

Comments

Popular posts from this blog

இஸ்லாம் வலியுறுத்தும் ஜனநாயகம்.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்.

பெண் அதிகாரம் அளித்தலின் (Women empowerment). அணுகுமுறைகள்.