தனிமனித சீர்திருத்தமே சமுதாயத்தின் சீர்திருத்தம்
இஸ்லாம் ஒரு மனிதன் புறத்தோற்றத்திலும் அகத்தோற்றத்திலும் தூய்மையாகவும் சிறந்த பண்புகளுடன் விளங்கவும் வலியுறுத்துகிறது.
ஒரு மனிதன் எல்லாச் செயல்களையும் இறை திருப்தியை நாடி மட்டுமே செய்ய வேண்டும்.உலக ஆதாயம், புகழ், பாராட்டு ஆகியவற்றை நாடாமல் மனத்தூய்மையுடன் செயல்படுவதே உண்மையான சீர்திருத்தத்தின் முதல் படி ஆகும்.
இதில் ஆன்மீகம் முக்கிய பங்கு வகுக்கிறது.பொறாமை, பேராசை, பெருமை, கர்வம், கோபம், வெறுப்பு, கபடம் போன்ற அக நோய்களிலிருந்து உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி மாற்றாக பணிவு, தாராள குணம், அன்பு போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திகிறது.ஒருவேளை
பாவம் செய்துவிட்டால் பிறகு உடனடியாக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரி, அந்தப் பாவத்தை மீண்டும் செய்யமாட்டேன் என்று உறுதியான முடிவெடுப்பது சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாக இஸ்லாம் போதிக்கிறது.
தனிமனிதச் சீர்திருத்தம் நன்னடத்தை என்பது ஆன்மீக வழிபாடுகளுடன் முடிவடைவதில்லை. அது ஒருவரது அன்றாட நடத்தையிலும் பிரதிபலிக்க வேண்டும்.
பேசுவதிலும், ஒப்பந்தங்களிலும் உண்மையாக இருப்பது.
புறம் பேசுதல் கோள் சொல்லுதல் வீண் பேச்சு ஆகியவற்றிலிருந்து நாவைப் பாதுகாத்து கொள்வது.
துன்பங்கள், சோதனைகள் மற்றும் ஏமாற்றங்களின் போது பொறுமையோடும் சகிப்புத்தன்மையுடன் இருப்பது.
பிறருக்கு உதவுதல் மற்றும் மக்களுக்குப் பயனளிப்பதே சிறந்த மனிதனின் பண்பு என்று இஸ்லாம் கூறுகிறது. பிறரின் தேவைகளைப் பூர்த்தி செய்வது சீர்திருத்தப்பட்ட உள்ளத்தின் அடையாளம் ஆகும்.
பெருநாவலர் வள்ளுவன் கூறியதுபோல், 'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்ற எண்ணம் முன் சென்ற சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தது.பெரும்பாலும் மூத்த தலைமுறையினரிடம் தனிமனித ஒழுக்கம் என்பது ஒரு குடும்பத்தின் நற்பெயருக்கும், ஒரு சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் காரணமான அறம் சார்ந்த வாழ்க்கையாக இருந்தது.
ஏனென்றால் தனி நபர்களை கொண்டே ஒரு சமுதாயம் உருவாகிறது.அவ்வாறே தனிநபரின் தரம் உயரும்போதுதான் சமுதாயத்தின் ஒட்டுமொத்தத் தரமும் உயரும்.தனிமனிதன் தன் தகுதியையும் மதிப்பையும் உயர்த்திக் கொள்ளும்போது அந்த நேர்மறை செயல்பாடுகள் மற்றும் பண்புகள் அவரின் குடும்பம், வேலை செய்யும் இடம் அக்கம் பக்கம் எனப் படிப்படியாகப் பரவி இறுதியில் ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் தரத்தை உயர்த்தி ஒரு முற்போக்கான ஆரோக்கியமான மற்றும் செழிப்பான சமுதாயத்தை உருவாக்குகிறது.
எனவே, சமுதாய மாற்றத்துக்கான தொடக்கம் தனிமனித மாற்றத்திலிருந்தே தொடங்குகிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
நமது முன்னோர்கள் ஒழுக்க மீறல்களுக்கு மன்னிப்பு கேட்பதும், தவறைத் தானே உணர்ந்து திருத்திக் கொள்ளவில்லை என்றால் சமூகச் சலுகைகள் மறுக்கப்படுவது போன்ற ஒழுங்குபடுத்தும் முறைகளை சமூகத்தில் நடைமுறைபடுத்தினர். இவையெல்லாம் தனிநபர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தவறுக்கு மன்னிப்பு கேட்பதும், பொறுப்பேற்பதும் ஒழுக்கத்தின் முக்கிய அங்கமாக பார்க்கப்பட்டது.
வலுவான சமூகக் கட்டுப்பாடுகளும் நீதிக் கோட்பாடுகளும் நாம் சமூகத்தின் அங்கமாக இருப்பதற்கான தேவையையும் தனிமனிதன் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளவும் உதவியது.சுய கட்டுப்பாடு, புலனடக்கம், மற்றும் எளிமையான வாழ்க்கை நேர்மை, பணிவு, கருணை போன்ற அறங்கள் நீதிக் கதைகள் மூலமாக வலியுறுத்தப்பட்டன.இந்தக் கதைகள் நெறி தவறுவதன் விளைவுகளை எடுத்துரைத்தன.மேலும் நல்ல செயலுக்கும் தீய செயலுக்கும்
பாவம், புண்ணிய பலன்கள் உண்டு என்ற நம்பிக்கைகள் இருந்ததால் தனிநபர்கள் சமுதாயக் கண்காணிப்பு இல்லாத இடங்களிலும் தவறு செய்யப் பயந்தார்கள்.
பெரும்பாலும் கூட்டு குடும்ப அமைப்பு மற்றும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் கண்காணிப்பு போன்றவற்றால் இயல்பாகவே பிள்ளைகள் தவறான பாதையில் செல்ல வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தது.அன்புடனும் அதே சமயம் கண்டிப்புடனும் ஒழுக்கம் போதிக்கப்பட்டது.கல்வி முறையில் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. (Emphasis on Discipline in Education) வெறும் அறிவைப் போதிப்பது மட்டுமல்லாமல் நன்னடத்தை, நீதி போதனை வகுப்புகள் மற்றும் வாழ்க்கைக் கல்வி ஆகியவை இடம் பெற்றிருந்தது மட்டுமல்லாமல் ஒழுக்கத்தை போதிப்பதே முதன்மையாகக் கருத்தப்பட்டது.
எனவே தனிமனித ஒழுக்கம் என்பது வாழ்வில் இடைவிடாமல் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் வாழ்வின் அஸ்திவாரமாகவும் பார்க்கப்படுகிறது.இஸ்லாமியப் பார்வையில் தனிமனித ஒழுக்கம் மற்றும் உளத் தூய்மை (தஸ்கியா) என்பது மிக முக்கியமான அம்சமாகும்.மனிதனின் சுயநலம் மற்றும் மன இச்சைகள் போன்ற தீய குணங்களை பல்வேறு ஆன்மீக நிலைகளின் வழியாக தூய்மை செய்து இறைவனின் விருப்பத்திற்கு அடிபணிந்து வாழும் நிலைக்கு மாற்றுவதே தஸ்கியா ஆகும். இது ஒரு தொடர்ச்சியான மற்றும் தனி மனித சீர்திருத்தத்திற்கான ஆன்மீகப் பயிற்சியாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு மனிதனின் உள்ளமே சீர்திருத்தத்தின் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது.
நாம் பார்க்கும் புற தோற்றத்தை விட அக தோற்றமே ஒரு மனிதன் மீதான மதிப்பை உயர்த்துகிறது.எனவே உண்மையான மாற்றம் என்பது ஒவ்வொரு தனிநபரின் உள்ளத்திலிருந்தும், மனசாட்சியிலிருந்தும், ஒழுக்கத்திலிருந்தும் வர வேண்டும். வெறும் சட்டங்களை மாற்றுவதாலோ அல்லது பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்வதாலோ மட்டும் சமுதாய முன்னேற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது.
ஒரு கட்டிடத்தின் செங்கற்கள் சரியாக இல்லாவிட்டால், கட்டிடம் பலவீனமடைவது போல், தனிநபர்கள் சீராக இல்லாவிட்டால், சமூகமும் பலவீனமாகவே இருக்கும்.
சமூக பொறுப்புகளில் தலைமை வகிக்கும் ஒவ்வொருவரிடமும் இந்த சுய சீர்திருத்தம் வர வேண்டும்.
அரசியல் அல்லது அதிகாரம் மூலம் திணிக்கப்படும் சீர்திருத்தங்கள் நிரந்தரமானவை அல்ல.
மாறாக தனிப்பட்டவர்களாகவே நீதி, நேர்மை, உண்மை, பொதுநலன் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும்போது, அது சமுதாயத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி ஒட்டுமொத்த சமூகத்திலும் சீர்திருத்தத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக ஒருவர் தனது வீட்டைச் சுற்றியுள்ள பகுதியிலோ அல்லது பொது இடங்களிலோ குப்பையைக் கீழே போடுவதை நிறுத்தி, குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவது என்று உறுதியான முடிவெடுக்கிறார்.
இந்தத் தனிநபர், தனது முடிவைச் செயல்படுத்தும் போது, அதைப் பார்க்கும் மற்றவர்களும் மெல்ல மெல்ல அதே பழக்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள்.
ஒரு குடும்பத்தில், பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று ஒரு தனிநபர் அல்லது பெற்றோர் எடுக்கும் முடிவானது, பல குடும்பங்களைப் பின்பற்றி, இறுதியில் பெண் கல்விக்கான சமூக ஏற்பை (Social Acceptance) உருவாக்கியது.இப்படி தான் ஒரு தனி மனிதன் பதிக்கும் சீர்திருத்த தடம் சமூகத்தின் சீர்திருத்தத்திற்கு வழி காட்டுகிறது.
உயர்ந்த ரசனையோடு கலை, இலக்கியம்,கலாச்சாரத்தை செழுமைபடுத்த முயற்சி செய்வது போல் பகுத்தறிவு கொண்ட ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களின் உரிமைகளை மதித்து,சமூகத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு தனி மனித ஒழுக்கம் பேணுவதால் மட்டுமே
சமூகத்தில் குற்றச் செயல்களைக் குறைத்து அமைதியாகவும், பாதுகாப்பாக வாழ்வது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினரை தூய்மையான சமூகத்தில் வழிநடத்தவும் முடியும்..
ஒரு நாட்டில் நல்லாட்சி உருவாகவும், நீதியான அரசியல் அமைப்பு நிலைக்கவும் சீர்திருத்தம் அடையாத, ஒழுக்கமற்ற தனிமனிதர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் எவ்வளவு சிறந்த சட்டங்கள் இருந்தாலும் அவை தோல்வியடைந்து போகும். மட்டுமல்லாமல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை மாற்றியமைக்க வேண்டுமென்றால் தனிமனித ஒழுக்கத்தை பின்பற்றும் ஒருவரால் மட்டுமே சாத்தியப்படும்.
ஆகவே தனிப்பட்ட ஒழுக்கம் ஒருவருக்கு மேம்படும்போதுதான் பொது வாழ்விலும் நீதி நிலைபெறும்.
அதனால்தான், "மாற்றத்தை நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும்." என்ற கொள்கை மிகவும் முக்கியமானது. தனிமனிதர்கள் மாறும் போது, சமுதாயம் தானாகவே முன்னேற்றப் பாதையில் செல்லும்.
"சமுதாயச் சீர்திருத்தம் என்பது கிளைகளைச் சீர்திருத்துவது அல்ல, அது வேரைச் சீர்திருத்துவது. அந்த வேர்தான் ஒவ்வொரு தனிமனிதனின் ஒழுக்கமும், ஆன்மீகமும்"
மௌலானா மௌதூதி (ரஹ்).
Comments
Post a Comment