அவலங்கள்

மனித வாழ்வின் முக்கிய பகுதியாக பொருளாதாரம் அங்கம் வகிக்கிறது."அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை "என்ற வாசகத்தை சாதாரணமாக யாரும் கடந்து போய் விட முடியாது.பொருளாதாரம் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழி வகுக்கிறது.வறுமை பல தீய செயல்களுக்கு வழி வகுக்கிறது.அப்படிபட்ட வலிமை வாய்ந்தது இந்த பொருளாதாரம்.மக்களின் வாழ்வை இந்த பொருளாதாரம் நிறைவுபடுத்திவிட்டதா என்றால் கேள்விதான் மிஞ்சுகிறது.அசல்,லாபம், நட்டம் இதுதான் பொருளாதாரத்தின் அடிப்படையாக விதியாக உள்ளது.இந்த மூன்று கருவிகளும் சமநிலையான ஒர் பொருளாதாரசூழலை சமூகத்தில் உருவாக்க வில்லை எனில் அங்கே கடன் கொள்கை பொருளாதாரத்தின் மற்றொரு முக்கிய பகுதியாக உருவெடுக்கிறது.கடன் கொள்கை தவறில்லை.ஆனால் அதோடு வட்டி கடன் என்ற கொள்கை தான் தவறு.இது ஒரு பொருளாதார அநீதி மட்டுமல்ல.மனித குலத்தின் நிம்மதியையும் குலைத்து விடுகிறது.இந்த வட்டி கொள்கை உலகத்தின் பணம் புழங்கும் எல்லா நிறுவனங்களிலும் காணமுடிகிறது.உதாரணமாக வங்கிகள் , சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி சதவிகித கவர்ச்சி விளம்பரங்களை கொடுக்கிறது.கடன் வாங்கும் போது, கடன் கொடுக்கும் போது , நகை சேமிப்பு திட்டங்கள்,பங்கு சந்தைகள் , வர்த்தக நிறுவனங்கள் என எந்த துறையிலும் வட்டி இல்லாமல் இல்லை. ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்து பண மதிப்பிழப்பு, இயற்கை பேரிடர்கள், கொரோனா நோய் தொற்று போன்றவற்றால் உலக பொருளாதாரமும் சீரழிந்து ஆறு ஆண்டுகள் பொருளாதாரத்தில் பின்னடைவு நிலை ஏற்பட்டுள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகிறது.
மனிதர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில்,சவால்களை எதிர்நோக்கி மனித சமூகம் அலை கழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், உயிர் குடிக்கும் ஒட்டுண்ணிகள் மனித சமூகத்துள் வீரியமாக செயல்பட்டு வருகிறது.உணவு தட்டுப்பாடு,வேலை இல்லாத சூழலில் வாழ்வை நடத்த போராடி கொண்டிருக்கும் மக்களின் தினசரி வாழ்வை அணு அணுவாக இந்த கந்து வட்டி எனும் ஒட்டுண்ணி கொன்று கொண்டிருக்கிறது. பெண்கள் இந்த கந்து வட்டியின் முதலாளிகளாக இருப்பதுதான் வேதனை தரக்கூடியதாக இருக்கிறது. நம் இந்தியாவில் பொருளாதாரத்தில் முன்னேற துடிக்கும் ஏழைகளுக்கு இன்னொரு பெயர் உள்ளது.நடுத்தர வர்க்கம்.இவர்களுடைய தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நெருக்கடி நேரங்களில்,பள்ளி கல்லூரி பருவ கட்டணங்கள்,தொழில் மேம்பாடு,திடீர் மருத்துவ செலவுகள் இப்படி பல்வேறு காரணங்களுக்காக இவர்களிடம் போய் சிக்கி கொள்கிறார்கள்.இப்படி சிக்கிக் கொள்பவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகிறது.உதாரணமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் ஒருவர் கந்துவட்டி காரரிடம் வாங்குகிறார்.பத்தாயிரத்துக்கு இரண்டாயிரம் வட்டி.எட்டாயிரம் மட்டும் தான் வட்டி போக கைக்கு வரும்.இந்த இரண்டாயிரம் வட்டிபணம் வாராவாரம் தொடரும் எதுவரை எனில் பத்தாயிரம் வாங்கியதை திரும்பி கொடுக்கும் வரை அதாவது பத்து மாதங்கள் ஆனாலும் ஒரு வருடம் ஆனாலும் இந்த நிலை தொடரும்.இதற்கு அத்தாட்சியாக அரசாங்க உபயோகத்துக்கு மட்டுமே உரிய ஒரிஜினல் ஆதார் கார்டு ,ரேஷன் கார்டு,ஒட்டர் கார்டு,பாஸ்போர்ட், வாகன லைசென்ஸ்கள், சொத்து பத்திரங்கள் இவற்றை பெற்று கொள்கிறார்கள். ஆதாரை எதற்கெல்லாம் ஆதாரமாக்கி கொள்கிறார்கள் பாருங்கள்.மாதாமாதம் வரும் பத்தாயிரம் சம்பளத்தில் வீட்டு வாடகை, விலைவாசியின் மிரட்டல்கள்,குழந்தைகளின் எதிர்காலத்தை தரமான கல்வி மூலம் ஸ்திரமாக்கும் கனவு,மருத்துவ செலவுகள்,உறவினர்களை தக்கவைத்துக்கொள்ள விசேஷ செலவுகள் இப்படி எத்தனை சவால்கள்?!இவை அனைத்தையும் சமாளிக்க முடியாமல் திணறும் தன் கணவரின் வருமானத்தை சார்ந்து வாழும் பெண்கள்தான் இந்த கந்துவட்டியின் நொறுக்கு தீனி.காரணம் என்னவெனில் இந்த ஏழை இல்லத்தரசிகளிடம் கணவனின் சொற்ப வருமானத்தில் நகைசேமிப்பு,பணம் சேமிப்பு இவை எல்லாம் இருக்க வாய்ப்பு இல்லாததும்,தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயமும்,கொடுத்து உதவ முடியாத சூழலில் உள்ள உறவுகளும் ,கடனையே கந்து வட்டிக்கு மட்டும் தான் வாங்க முடியும் என்ற சமூக பொருளாதார சூழலும் இந்நிலைக்கு காரணியாக மாறுகிறது.அசலை கொடுத்து முடித்து விடலாம் என ஏதோ ஒரு நம்பிக்கை உத்வேகத்தில்தான் வாங்குகிறார்கள்.ஆனால் அது சாத்தியப்படாத நிலையில் வட்டிக்காரன்(காரி) யின் வசூல் வேட்டை திட்டம் ஆரம்பிக்கிறது.முதல் கட்டம். ஒரு மனிதனின் சுயகொளரவத்தை கேவலமான வார்த்தைகளால் தொட்டு பார்க்கும்.அடுத்த கட்டம் வீட்டு பெண்களின் தன்மானத்தை வார்த்தைகளால் சீண்டி பார்க்கும்.அதிலும் வசூல் ஆகவில்லையா எலும்பை போட்டால் நன்றி காட்ட துரிதமாக செயல்படும் சில கயவர்களை வீட்டுக்குள் புகுந்து குறிப்பாக பெண்களை அபகரிக்க முயற்சிப்பது,வீட்டில் உள்ள பொருட்களை அபகரிப்பது, வாகனங்களை அடாவடியாக பறிமுதல் செய்வது இவை எல்லாம் அரங்கேறும்.நாம் பார்க்கும் கட்டடங்கள் உள்ளே இப்படிப்பட்ட போராட்ட நிகழ்வுகள் நடந்தேறி கொண்டிருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?! "கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என கேட்டதுண்டு.உழைப்பின் பயனை வட்டி எனும் பெயரில் தட்டிபறிக்கும் மனிதர்களால் கடனாளி நிம்மதியின்றி தூக்கமின்றி எப்போதும் கவலையிலும் மனக்குழப்பத்திலும் ஆழ்ந்து விடுகின்றனர்.மக்கள் பின் தங்கிய சமூகத்தவராக மாறுவதும் இந்த வட்டி பொருதாரத்தினால் தான்.வட்டி ஈவு இரக்கம், சகோதர உணர்வு, ஒருவருக்கொருவர் உதவும் பண்பை சீரழித்து விடுகிறது.இதன் விளைவாக கடனாளி கட்டிக்காத்த கௌரவம் வீதிக்கு வரும் போது அல்லது குடும்பத்தோடு தற்கொலை செய்யும் போது நமக்கெல்லாம் ஒருநாள் செய்தியாக தெரியும்.கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடி செய்து அதற்கு காரணம் சொல்லும் அரசாங்கம் சாமானியனின் பொருளாதார சுமையை மறந்தது ஏன்?பசி கொடுமையில் உள்ளவன் முன் அமர்ந்து விருந்து உண்ணும் இரக்கமற்ற சமூக பொருளாதாரம் எப்போது மாறும்? ஒரு பக்கம் மேக் கிங் இந்தியா, மறுபுறம் குடிசைகளை மறைக்க நெடுஞ்சுவர்.நகை வாங்க ஒரு விளம்பரம் விற்க ஒரு விளம்பரம்.வா வா என்றழைக்கும் பகட்டு வியாபார உலகம், கவர்ச்சி விளம்பரங்கள்,ஆன்லைன் வர்த்தகங்கள், பெண்கள் சுய முன்னேற்றம் என்ற பெயரில் பெண்கள் மூலம் குடும்பங்களுக்கு பொருளாதார அழுத்தங்கள் கொடுக்கும் மைக்ரோ பைனான்ஸ்கள்.எங்கள் வங்கியில் கணக்கு வைப்பு இருந்தால் இத்தனை சதவிகிதம் வட்டி கிடைக்கும் என வாக்குறுதிகள். வாடிக்கையாளர்களை அதிகமாக கொண்டு வரும் அலுவலருக்கு டைமண்ட் ஸ்டார், ப்ளாட்டினம் ஸ்டார் என ஊதியஉயர்வு,ஏதோ உலக பொருளாதாரத்தை சமண்படுத்தியவர் போல் கவுரவ உயர்வு என தினமும் மனித மனங்களை அலைக்கழிக்கும் பொல்லாத பொருதாரமாக மாறிக்கொண்டிருக்கிறது.n95 முகக்கவசம் அணிபவர்கள் ஒருபுறம்.கவசம் வாங்க காசில்லாமல் கொய்யா இலையை பாதுகாப்பு கவசமாக்கி கொள்ளும் ஏழை தொழிலாளி ஒருபுறம்.உங்களுடைய சென்செக்ஸ்ம் நிஃப்டியும் பொருளாதார சூதாட்டம் என்பது எத்தனை சாமானியனுக்கு தெரியும்? மக்களுக்கு சேவை செய்வதாக சொல்லி வாக்கு சேகரிக்கும் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சனைகளை பேச நேரலையில் வந்தாலும் கொடிகளின் வண்ணங்களாகவே பேசுகிறார்களே தவிர பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதில்லை.இன்று கல்வி சாலைகளிலும் பொருளாதாரத்தின் ஆதிக்கம் மேலோங்கி நிற்பதை பார்க்க முடியும்.ஒரே வகுப்புக்கான பள்ளிக்கட்டணங்களின் ஏற்றத்தாழ்வு நம்மை சிந்திக்க வைக்கிறது.தரமான கல்வியின் விலைதான் என்ன? என்று கேள்வி எழுகிறது.நாமும் விட்டில் பூச்சிகளை போல் மீண்டும் மீண்டும் கவர்ச்சி வெளிச்சத்தில் வீழ்ந்து மடிகிறோம்.நவீன ஆண்டான் அடிமை காலத்தில் நாம் வாழ்கிறோம் இதுதான் நிதர்சனமான உண்மை.ஆன்லைன் கல்வி கற்க ஸ்மார்ட் போன் வாங்க வசதியற்ற பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.அவள் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவும் மாய்ந்து போகிறது.கல்வி கேந்திரங்கள் சந்தேக சாவுகளின் கூடாரங்களாகி விட்டது.எங்கே சென்றார்கள் தேசத்தின் பாதுகாவலர்கள்?நசுக்கபடுபவனின் குரல்கள் கேட்கவில்லையா?குடும்பங்களை முன்னுதாரணமாக வைத்து பட்ஜெட் தாக்கல் செய்தவர்களுக்கு பல குடும்பங்கள் வாழ்விழந்து நிற்கதியாவது தெரியவில்லையா?தன் மக்களின் ஆக்கமும் அழிவும் ஒரு ஆட்சியாளரின் கையில் தான் உள்ளது.நானூறு கோடி செலவு செய்து விதானங்கள் அமைத்து இறைவனை காண்பதை விட ஏழை குடிமகனின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றி கொடுத்தால் போதும்.அவனின் மகிழ்ச்சியான சிரிப்பில் இறைவனைக் கண்டு விடலாம்.ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனமாக இருந்த நாடுகள் இன்று சோலைவனமாக மாறியதும் ஆட்சியாளர்களால் தான்.கல்வி கற்காதவர்களால் இது சாத்தியமானது என்பது இங்கு கவனிக்கபட வேண்டிய விஷயம்.இன்று உலக பொருளாதார நிபுணர்கள் எதிர்காலத்தை நினைத்து பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது என்றால், நிர்வாகம் சோடை போனதன் விளைவாகத்தான் இதை பார்க்க முடிகிறது.இந்த கோளாறு பிடித்த இயந்திரத்தின் பாகங்கள் மாற்றபட்டால் மட்டுமே தீர்வு காண முடியும்.அதற்கு திறன் பெற்றவர்கள் ஒளிந்து கிடக்காமல் இந்த பாழ்பட்ட பொருளாதார கொள்கைகளை நீக்கி புதியதோர் விதி செய்ய வேண்டும்.ஒரு நாட்டின் வளத்தை சாமானியனின் ஆரோக்கியமான வாழ்க்கையை கொண்டு சொல்லி விட முடியும்.அரபுலக ஆளுநர் ஹஜ்ரத் உமர் அவர்களை பார்க்க வேறு நாட்டிலிருந்து தூதுவர் ஒருவர் வருகிறார்.நாட்டின் ஆளுநரை சந்திக்க வேண்டும் என ஒருவரிடம் மாளிகைக்கு வழி கேட்கிறார் தூதுவர்.அந்த மனிதர் அதோ மரத்தின் நிழலில் ஒய்வெடுக்கிறார் பாருங்கள் அவர் தான் எங்கள் ஆளுநர் என கூறுகிறார்.மரத்தின் நிழலில் அளுநரா என அந்த தூதுவர் திகைக்கிறார்.எதிரிகளை பற்றிய அச்சமற்ற உறக்கம்.உள்நாட்டு கலவரங்கள் இல்லை.சாதி சமய பூசல்கள் இல்லை.நிறவெறி தாக்குதல்கள் இல்லை.சமநிலையான பொருளாதார கொள்கை.வறுமை இல்லை.கடமைகளை நிறைவு செய்துவிட்டு நிம்மதியாக உறங்கினார்.இதுதான் ஒர் ஆட்சியாளரின் வெற்றி.இன்று நம் வரி பணத்தில் ஒருவரின் உயிருக்கு கோடிகணக்கில் செலவு செய்கிறோம்.உணவின்றி உறக்கத்திலேயே இறந்து போகும் மக்கள் ஒருபுறம்.இராணுவத்தை பலப்படுத்தும் திட்டம் ஒரு புறம்.சிந்தித்து பாருங்கள் யாருக்காக இந்த கோட்டை சுவர்கள் பலப்படுத்துகிறது?முரண்பாடுகள் நிறைந்த திட்டங்கள்.அணு ஆயுதங்களின் உற்பத்திகளை கொண்டு ஒர் நாட்டின் முன்னேற்றம் நிறைவு பெறுவதில்லை.நிலையான, நிறைவான,நீதியான பொருளாதார கொள்கைகள் இருந்தால் நாட்டின் வளம் தன்னால் உயரும்.தூய அரசாங்கம் அமைக்க விரும்பும் எவராக இருந்தாலும் முதலில் தூய பொருளாதார திட்டங்களை வகுத்து வாருங்கள்.அப்போதுதான் களவு, கொலை , கொள்ளை போன்ற தீமைகள் அழியும்.காலம் முழுக்க பாடுபடும் உழவனுக்கு கிடைக்கும் விலையில்லா அரிசியின் தரம் எப்போது உயரும்? விவசாயிகளை ராஷ்ட்ரிய கோமாளிகளாக பார்க்கும் அவலங்கள் என்று மாறும்? அவர்களின் கோரிக்கைகள் எப்போது பரிசீலிக்கபடும்?எல்லா துறைகளிலும் தூய்மை இந்தியாவைத் தான் நாங்கள் கனவு கண்டோம் அது துயர இந்தியாவாக மாறுகிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது.அல்லி இலையை தூக்கினால் ஆயிரம் பொத்தை என்று ஒரு சொளவடை உண்டு அதுபோல் இந்த ஓட்டைகளை சரி செய்யாமல் அகண்ட பாரத கனவு கப்பலை ஏழைகளின் கண்ணீரில் ஓட்ட முடியுமா என்ன?! கேள்விகள் ஆயிரம் பதில் யாரிடம்? மக்களின் குரலாக .....
                                வீ. ஆயிஷா கஜினி.         

Comments

Popular posts from this blog

இஸ்லாம் வலியுறுத்தும் ஜனநாயகம்.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்.

பெண் அதிகாரம் அளித்தலின் (Women empowerment). அணுகுமுறைகள்.