குடும்ப உறவை சிதைக்கும் நடைமுறைகள்.

"மனிதர்களே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.அவனிலிருந்தே அவனது துணையை படைத்தான். அதன் மூலமாக ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கி பெருகச் செய்தான். எந்த இறைவனை முன்னிருத்தி ஒருவருக்கொருவர் உரிமைகளை கோருகிறீர்களோ அந்த இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கிறான்". குர்ஆன்(4:1)உலகில் எந்த உயிரினமும் குடும்பமாக வாழ நிர்பந்தம் இல்லை.மனித இனத்துக்கு மட்டுமே இந்த வழிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாய தேவையும் உள்ளது.திருமண பந்தத்தை பற்றி இஸ்லாம் கூறும்போது இரு மனங்கள் இனணகிறது என கூறுவதில்லை. "ஆன்மாவும் ஆன்மாவும் இணையும் பந்தம்" என்றே வர்ணிக்கிறது.ஓரு குடும்பம் என்பது மனிதர்கள் வாழும் இடம் மட்டுமல்ல.நம்பிக்கை, அன்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை உயிர்களாகவும்,உருவங்களாகவும்
காணும் இடமாகவும் உள்ளது. இறையச்சம் தான் இந்த குடும்ப இயக்கத்தின் மையப்புள்ளி. அந்த இறையச்சம் யாராவது ஒருவரிடம் எடுபட்டு விட்டால் குடும்பத்தில் விரும்ப தகாத நிகழ்வுகள் ஆரம்பித்து விடும்.அதற்கு அன்றாட உலக நிகழ்வுகளே நம் கண் முன் உதாரணமாக காண முடிகிறது.குடும்ப வன்முறை அதிகரிக்கிறது.இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? தான் விரும்பியதை செய்வதற்கு தடை இருக்க கூடாது என்ற எண்ணம் தான் முதல் காரணம்.நம் விருப்பம் சரியா தவறா?அது எப்படிப்பட்ட பலனை தரும் அதன் விளைவு என்ன என்ற ஒரு நிமிட சிந்தனை இல்லாமல் போவதால் விளைவு பல வழக்குகளுக்கு வழி வகுத்து விடுகிறது.கணவன் மனைவி என்கிற இரு பாலினத்தின் அன்பிலும் நம்பிக்கையிலும் துளிர்க்கும் உறவுதான் குடும்பமாக மாறுகிறது.இந்த நம்பகத்தன்மை உடைபட்டு விட்டால் அந்த குடும்பத்தில் அன்பு மகிழ்ச்சி அனைத்தும் அலங்கோலமாகி விடும்.காலத்தை சற்றே பின் நோக்கி பார்த்தால் எளிமையாக புரிந்து கொள்ளலாம். அயல் நாட்டிலோ அசலூரிலோ வேலை பார்த்த பாட்டன் மாதம் ஒரு முறை எழுதும் கடிதத்தை கண்டவுடன் பாட்டி எழுத படிக்க தெரிந்தவர்களிடம் காதலையும் கடிதத்தையும் எடுத்தோடுவாள். அளவுக்கதிகமான சம்பாஷனைகள் எதுவும் எழுதி இருக்க மாட்டார்.அந்த நாலு வரியும் குடும்ப நலனை விசாரித்து தான் எழுதி இருப்பார். அவர்களின் புரிதல்,ஒன்றாக இணைந்து செயல்படும் திட்டமிடல், உடல் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஒற்றுமை சிந்தனை இவையெல்லாம் இன்று நொடிக்கொரு முறை அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ளும் தம்பதிகளிடையே காண முடியவில்லையே ஏன்? தாத்தா தான் படும் வேலை சூழலின் சிரமங்களை சொன்னதில்லை.பாட்டி குடும்ப நெருக்கடிகளை தாத்தாவிடம் சொன்னதில்லை.குடும்ப நலனும் கடமையுணர்வும் மட்டுமே உள்ளத்தை உந்தியது.இன்றைய தலைமுறை குடும்பத்தை தவிர மற்ற எல்லா செயல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
குடும்பத்தாருக்கு முன்னுரிமை கொடுக்காமல் வெளியில் நட்பு வட்டத்தை ஏற்படுத்தி கொள்பவர்கள் குற்றச் செயல்களால் காவு வாங்கபடுகிறார்கள்.குடும்ப பொறுப்புகளை உதறி வாழவும் சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடுகளை மீறுவதும் நாகரீகம் என்று போகிறார்கள் பிறகு நிர்க்கதியாகி போகிறார்கள். சுய பச்சாதாபம் என்ற நோய் இன்று எல்லோரையும் தொற்றியுள்ளது.தான் மட்டுமே குடும்ப பாரத்தை ஒற்றையாக சுமப்பதான எண்ணங்களால் குடும்பத்தில் வாக்குவாதமும் சண்டையும் முற்றுகிறது. உறவுகளுக்குள் மெல்லிய உணர்வுகள் சிதைக்கப்படும் போது,கவனிப்பதற்கு யாரும் இல்லாத போது, அவரின் குரல்கள் நம் காதுகளில் விழாத போது,கண்ணீரை துடைக்க கரங்கள் வராத போது, கடமைகளை மறக்கும் போது,உரிமைகளை நிராகரிக்கும் போதும் அதுவே நம்மை பதுங்கி தாக்கும் ஆயுதமாக உருவெடுக்கிறது. பொறுமை சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு இவை எல்லாம் இன்று தேவையற்ற வார்த்தைகளாகி போய்விட்டது. 'ப்ரைவெசி'என்ற ஒற்றை வார்த்தை உள்ளங்களை ஆக்கிரமிப்பு செய்து இரகசியங்களின் கருந்துளையாய் குடும்பத்தில் சுழன்று வருகிறது.குடும்ப தேவைகளை பரஸ்பரம் கலந்தாலோசிக்க நேரம் இருப்பதில்லை.ஏனென்றால் ப்ரைவெசி.அலுவலகம் முடிந்து வீடு வந்தாலும் தனிமையை விரும்புவர்களிடம் குடும்ப தேவைகளை பேச ஆரம்பித்தால் கொஞ்சம் நிம்மதியா விட்டுத் தொலையேன் எனும் வார்த்தையை கேட்டு அறுந்து விழும் குரல் தூரமாக பயணிக்க ஆரம்பிக்கிறது.இதன் விளைவாக கணவன் மனைவியை நட்பு வட்டாரத்தில் விமர்சனம் செய்கிறான். மனைவியும் கணவனை உறவினர்களிடம் குறை கூறுகிறாள். மூன்றாவது நபர் மூலம் ஒருவரின் பதிவு மற்றவருக்கு தெரியும் போது இருவரும் தங்களுக்குள் ஏற்கனவே வைத்திருந்த பகைமை நெருப்பின் பிழம்பு பற்றி எரிந்து குடும்ப கட்டமைப்பை உரு குலைத்து விடுகிறது.இந்த இடைவெளி மனம் விட்டு பேச இருவருக்கும் மனமில்லாமல் போனதால் தான்.வலை தள ஸ்டேட்டஸ்களில் புகைப்படங்களில் மட்டுமே தம்பதிகளாக வாழ்வில் இனிமை கண்டுவிட முடியாது. முகநூலில் நேரத்தை செலவிடும் நமக்கு,யாரோ ஒருவரின் செயலை பாராட்டி லைக் போடும் நமக்கு நம் குடும்பத்தாரை பாராட்டி ஊக்குவிக்க கவனம் போதவில்லை. அன்பையும் அரவணைப்பையும் நம் குடும்பத்தாரிடமிருந்து தொடங்க மறந்து விடுகிறோம்.குடும்பத்தில் அமைதி இல்லை குழந்தைகள் திருமண பந்தத்தில் நம்பிக்கை இழந்து 'லிவ் டூ கெதர்' என்று நெறிகெட்டு போகும் எண்ணம் வருகிறது. பெற்றோரின் ஒற்றுமை இல்லாத நடவடிக்கைகள் எதிர் பாலினத்தின் மேல் நம்பிக்கை இழந்து ஒரின சேர்க்கையாளர்கள் உருவாகிறார்கள். விளம்பரங்களில் பார்க்கும் கவர்ச்சி வாழ்க்கை வீட்டில் வர வேண்டும் என முயற்சி செய்து இறுதியில் 'இ எம் ஐ' கட்ட முடியாமல் தோல்வியும் கவலையும் கவ்வி கொள்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும் தெரியாத இரகசியங்களை கைபேசி கலெக்ட் செய்து விடுகிறது.அச்சு முறிந்த வண்டியில் பாரம் ஏற்றுவதால் பலன் உண்டா?குடும்பத்தை விட்டு வெளியில் சென்றால் தான் நிம்மதி என்பது போன்ற எதிர் மறை சிந்தனைகள் அதிகரித்து வருகிறது.சீர் பெறாத உள்ளம் எங்கு சென்றாலும் நிம்மதி பெற வழி கிட்டாது.எட்டு தலைமுறைக்கு முன் நடு இரவில் பசி என அழும் குழந்தைக்கு விறகடுப்பை ஊதி எரியவிட்டு உணவு சமைத்து கொடுத்த தாயின் பாசம் இன்று இல்லை.ஆன்லைனில் உணவு பதிவு.தாய்மையின் பாசப்பிணைப்பும், பொறுப்புணர்வும் அறுபட்டு விட்டது.சேமிப்பு எண்ணத்தை சிதறடிக்கும் நுகர்வு கலாச்சாரம்.அப்பா ஒட்டு மொத்த குடும்பத்துக்கு எடுத்து வரும் துணிமணிகள் தான் அழகு கண்ணியம் என்ற நிலை மாறி ஆளுக்காள் பர்சேஸிங் செய்து கொள்ளும் போது ரசனை என நாம் நினைக்கலாம்.சற்று உற்று நோக்கினால் கட்டுபாடுகள் கழன்று செல்வது தெரியும்.இது போன்ற நுகர்வு கலாச்சாரத்தால் இடர்பாடு நேரங்களில் சேமிப்பு இல்லாமல் குடும்ப சச்சரவுகள் அதிகரித்து நிம்மதியை தொலைத்தவர்கள் நிறைய பேர்.மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்றோர் வழக்குச்சொல் உண்டு.இன்று தனிக்குடும்பங்களில் உள்ள பிரச்சினைகள் தான் சமூக பிரச்சினைகளாக மாறுகிறது.அயல் நாடுகளில் பொருளீட்டும் கணவன் வீடு திரும்பும்போது கைபேசியில் ப்ளாக் செய்யப்படும் ரகசிய உறவுகள் அதிகரித்து வருகிறது.'மானுண்டு எஞ்சிய கழிலி நீராய்' என உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள் நிலை மாறி பொருளீட்டும் மோகத்தால் திசைகொருவராய் பயணிக்கிறார்கள்.நகைகளும் பத்திரங்களும் பத்திரப்படுத்தி வைக்கும் பெட்டகத்தில் கூட அத்தனை பாஸ் வேர்டுகள் இருந்திருக்காது. கைபேசியின் பாஸ்வேர்டுகள் நம்பிக்கையான உறவுகளுக்கிடையே சந்தேகங்களுக்கு வழி வகுத்து விடுகிறது.பூட்டப்பட்ட இதயங்களில் உள்ள இரகசியங்கள் பொது வெளியில் அம்பலமாகும் போது தான் குடும்ப நிர்வாகத்தில் நாம் அசட்டையாக இருந்து விட்டோமே என கை சேதப்பட்டு நிற்கிறோம். கணவனின் சொத்துக்கள் அவனது அமானிதங்களை பாதுகாத்து ஒப்படைக்கும் பெண் சுவனத்தின் எந்த வாசல் வழியாக வேண்டுமானாலும் செல்லலாம் என இஸ்லாம் கூறுகிறது. குடும்பத்தில் வயதானவர்கள் புறக்கணிக்கப்படும் போது, அவர்களின் அறிவுரைகள் நிராகரிக்கப்படும் போது அடுத்த தலைமுறை 'தான் தோன்றிகளாகி' விடுகிறார்கள் என்பது இன்றைய நிதர்சனமான உண்மை.மூத்தவர்கள் உள்ள குடும்பங்களில் இது போன்ற ஒழுக்க சீர்கேடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. முறையாக குடும்ப உறவுகளின் கடமைகளை நிறைவேற்றாமல் சமூக நீதியையும் காப்பாற்ற இயலாது.பார் போற்றும் தலைவனாக இருந்தாலும் மறுமையின் கேள்வி கணக்கில் கணவன் மனைவி பற்றி கொடுக்கும் சான்றிதழும் மனைவி கணவனை பற்றி கொடுக்கும் சான்றிதழ் தான் உண்ணதமானது என இஸ்லாம் கூறுகிறது. நாகரீகம் என்ற பெயரில் காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் மனித குலத்தின் ஒழுக்க விழுமங்களின் ஊற்றாக திகழும் குடும்ப நெறிகளை புறக்கணித்தால் முதலுக்கே மோசம்.அடித்தளம் இல்லாமல் அந்தரத்தில் கோட்டை கட்டி வாழ்வது சாத்தியமா? வீட்டுக்கு கட்டுப்படாதவர்களுக்கு சமூகம் பாடம் கற்பித்து விடுகிறது. குடும்பத்திலிருந்துதான் உலகத்தின் ஆக்கங்களும்,ஒழுக்கச் செறிவும், கலைகளும்,கண்ணியமும், நிர்வாகமும்,வரலாறுகளும் தோன்றுகிறது.உலக வளங்களை ஆட்சி செய்யும் ஒரு இனம் குடும்ப நெறிகளில் பிறழ்ந்தால் அது உலகத்தில் அனைத்து கட்டமைப்புகளையும் உருகுலைப்பது மிக எளிதாகி விடுகிறது.நாம் படைத்த இறைவனால் கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம்.நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்.நம் பொறுப்புகளை குறித்து விசாரிக்க பட இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு ஈருலக வாழ்வில் வெற்றி பெற அல்லதை கலைந்து நல்லதை பெற செயல்படுவோம். வலிமையான ஆரோக்கியமான குடும்பத்திலிருந்து தான் வலிமையான சமூகமும் உருவாகிறது என்பதை நினைவில் கொண்டு செயல்படுவோம்.
மீண்டும் நினைவுக்கு "நீங்கள் ஒருவருக்கொருவர் எந்த உறவைக் கொண்டு உரிமைகளை கோருகிறீர்களோ அதற்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்".என்ற இறை வசனத்தின் அடிப்படையில் நம் குடும்ப நெறியை அறம் பிறழா வண்ணம் வாழ்வதே பிரச்சினைகளுக்கு தீர்வாகும்.


Comments

Popular posts from this blog

இஸ்லாம் வலியுறுத்தும் ஜனநாயகம்.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்.

பெண் அதிகாரம் அளித்தலின் (Women empowerment). அணுகுமுறைகள்.