பள்ளிவாசலும் நானும்.
சிறு வயதிலேயே என்
பெற்றோர் உன்னை
அறிமுகம் செய்தார்கள்.
உன் அமைதியும் அழகும் கண்டு
என் விழிகள் விரிந்தன!.
வண்ணக் கம்பளம் விரித்து
ஆளுயர விளக்குகளோடு
வடிவான பள்ளிமேடை.
அத்தர் மனமும் தூய்மையும்
குர்ஆன் வசனத்தின்
ரீங்காரமும் என்னை
கவர்ந்திழுத்தது...
உன் தூய்மையும் தெளிவும்
யாரையும் கவர்ந்து விடும்.
இதமான குளிர்காற்றில்
மனம் நிறைய ஆவலோடு
உன்னை சந்திக்க விரைவேன்.
சில்லென்ற தடாக நீரில்
என்னை தூய்மை படுத்தி
உள்ளே நுழைவேன்.
உன் சுகந்தத்தில் நான்
சுவனத்திலிருப்பதாய்
உணர்வேனே!
இறைவனை சந்திக்க
நாடுவோரின் இணைப்பு
பாலம் அல்லவா நீ!
உள்ளத்தில் எத்தனை
பாரங்கள் அழுத்தினாலும்
என் பாதங்களை நீ
இலேசாக்கி விடுவாயே!
முகவரி தெரியாதவருக்கும்
அடைக்கலம் தரும்
விருட்சமல்லவா நீ!
மனித உள்ளங்களின்
மேடு பள்ளங்களை
சமன் செய்யும் காட்சியை
உன்னிடம் காணலாம்.
நோன்பு காலங்களில் நீ
மிளிரும் அழகில்
குழந்தைகளையும்
இளைஞரையும்
முதியவரையும்
உன்னிடம் இழுத்து விடுவாயே!
தடி ஊன்றி வருபவரும்
தவழும் குழந்தையும்
உன்னில் அமைதி பெறுவர்.
உதவி கேட்பவர்களுக்கு
ஒருங்கிணைப்பு செய்யும்
காருண்யமல்லவா நீ!
உன்னை சந்திக்காத நாட்கள்
என் வாழ்வில் வரும் என
நினைத்ததில்லை.
காலம் பல காரணங்களுக்காக
நமக்குள் இடைவெளியை
ஏற்படுத்தினாலும்.... நம்
பந்தம் உறுதியானதல்லவா?!
ஆயுள் விடைபெற்ற பின்னும்
அருகிலே இருத்திக் கொள்ளும்
என் உறவே!
எத்தனை எத்தனை
இயற்கை சீற்றத்திலும் உன்
அழைப்பின் சாளரங்களை
தாழிடாத கடமையின்
உச்சமல்லவா நீ!
உன்னை காணாது என்
கண்கள் வறண்டு விட்டது.
உள்ளத்தின் தாகம்
கானலாய் நீள்கிறது.....!
உன்னை சந்திக்க எத்தனிக்கும்
பாதங்கள் எப்போது
இதம் பெறும்?!
நம் சந்திப்புக்கு என்னை போலவே
நீயும் மன்றாடுவாய் இறைவனிடம்
என எனக்குத் தெரியும்!
நம் சந்திப்பின் இனிய நாளை
எதிர்நோக்கியவனாய்.......
எனதருமை பள்ளியே...!
Comments
Post a Comment