சிறகுகள்.
கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு எல்லா தளங்களிலும் எதிரொலிக்கிறது.குறிப்பாக மாணவர்களின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.பள்ளிகூடங்கள் எப்போது திறக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் பயமும் ஒரு சேர குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.பள்ளிகூட நினைவுகள் மாணவர்களிடம் நீர்த்து போய் கொண்டிருக்கிறது. கல்லூரி செல்லும் மாணவர்கள் மனதில் தங்கள் எதிர்காலத்தை பற்றிய கேள்விகள் மட்டுமே தொக்கி நிற்கிறது. என்னதான் ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் அன்றாட பரபரப்புகளுக்கு இடையில் கல்வி சாலைக்கு செல்லும் புத்துணர்வு பயணம் தடைபட்டு விட்டதே!.அம்மாவின் பரபரப்பான அடுக்களை அழகிழந்தது போல் காட்சியளிக்கிறது. பள்ளியில் நண்பர்களோடு பரிமாறி கொள்ளும் உணவு போல் வீட்டில் அறுசுவை செய்தாலும் சாப்பிட நாட்டமில்லை. பெற்றோர் பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து செல்ல தன் பிள்ளைகளை தேடி அவர்கள் பைகளை வாஞ்சையோடு வாங்கி கொண்டு, "மிச்சம் வெக்காம சாப்ட்டியா" என கேட்கும் பாசமும் ஒரு வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் கிடைக்கவில்லை. எப்போது இயல்பு நிலை வாழ்க்கை வரும் என்ற ஏக்கம் இருந்தாலும் குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே நிர்வகிப்பதில் பெற்றோருக்கு சவால்களும் சிக்கல்களும் அதிகரிக்கின்றன. காணொளி கல்வி பல மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விடுவதால் தற்கொலைக்கு முயல்கின்றனர்.குழந்தைகளின் கையில் இரு பக்கமும் கூரான வாளாக இருக்கும் அலைபேசி ஒருபுறம்,
கட்டை விரலை தானம் கேட்கும் கல்வி கொள்கை மறுபுறம். குழந்தைகள் , மாணவர்களின் இலக்கு நோக்கிய வாழ்க்கை பயணம் திசை மாறுகிறது.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்."காலம் சுருங்கி விடும்.கல்வி குறைந்து விடும்; ஹர்ஜ் (கொலை) பெருகி விடும்"என்று கூறினார்கள். பண்ணிரண்டு வயது உடைய குழந்தைகள் சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் திறக்கிறார்கள். பதின் பருவ மாணவர்கள் ஆன்லைன் சூதாட்டங்களில் சிக்கி உயிரழக்கின்றனர். வாழ்வை வளமாக்கும் கனவுகளோடும், கடனோடும் கல்லூரி சென்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிறது. ஆனாலும் குறுகிய நோக்கில் இப்பிரச்சனைகளை பார்க்க முடியாது இந்தியாவின் எதிர்காலம் திசை மாறுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.நடைமுறை பயிற்சி வகுப்புகள் (ப்ராக்டிகல்) கொண்ட சில பட்ட படிப்புகளை காணொலி மூலம் கற்பது சாத்தியமாகுமா? மாணவர்கள் இந்த ஏகலைவ கல்வி கொள்கையிலிருந்து மீள கொரோனா இரக்கம் காட்டுமா?! என்றாலும் வரலாற்றில் கொரோனாவை விட கடுமையான காலகட்டங்களை மனித சமூகம் கடந்து வந்திருக்கிறது.அதற்கு நம்பிக்கை தான் உந்து சக்தியாக இருந்துள்ளது.உருகுலைந்த ஹிரோஷிமா நாகசாகி இன்று நம்பிக்கை எனும் துளிரால் பூத்து குலுங்குகிறது.போர் நடக்கும் நாடுகளில் அடுத்தடுத்து விழும் குண்டுகளின் ஆபத்திலும் புகைப்படலத்துகிடையே புத்தகங்களை நெஞ்சோடு அணைத்து ஓடும் இளைஞனின் நம்பிக்கையை என்னவென்று கூறுவது!எல்லா உறவுகளையும் இழந்து திக்கு தெரியாமல் அகதி முகாமில் வாழும் குழந்தையின் நம்பிக்கையை என்னவென்று கூறுவது!இந்த உள்ளெழுச்சி சிந்தனைகள் தான் மனித இனத்தின் ஆக்கத் திறவுகோல்.இடர்பாடு நேரங்களில் மனிதன் பயன்படுத்தும் சக்திவாய்ந்த ஆயுதம் நம்பிக்கை தான். பெருங்கடல்களை கடந்து செல்லும் பறவையின் இலக்கு நோக்கிய பயணமும் நம்பிக்கையில் தான்.இவைகளெல்லாம் நம் கண் முன்னே உதாரண காட்சிகளாக உள்ளது.இறைவன் உயிர்களை படைக்கும் போதே அதன் உள்ளங்களில் நம்பிக்கையை வைத்து விட்டான்.நாம் எவ்வழியில் அதை உந்துகிறோம் என்பதை பொறுத்து நம் இலக்கும் உள்ளது.எனவே சோதனை காலத்தில் மாணவர்கள் துவண்டு விழாமல் பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேட வேண்டும்.தன்னம்பிக்கையை மெருகூட்ட கடுமையான காலகட்டம் தான் வாய்ப்புகளை தருகிறது. நம்பிக்கையோடு திட்டமிட்டு செயல்படுங்கள், செயல்படுத்துங்கள் உயரே பறக்கலாம்."நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது". குர்ஆன்(94:5;6)
.
Comments
Post a Comment