காணி நிலம் வேண்டும்.
மாலை 5.30 மணி. குழந்தைகளை டியூஷன் அனுப்பிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள் மலர். வாசல் ஒரத்தில் பலாகன்றும் கொஞ்சம் பசலை செடிகளும் தொட்டியில் வைத்து வளர்த்து வந்தாள். அவற்றுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு,வீட்டினுள் சென்று காப்பி டம்ளரோடு வந்தாள்.வாசலில் உள்ள நாற்காலியில் அமர்ந்து முதுகை சாய்த்து ஆசுவாசப்படுத்தி கொண்டு சிறிது சிறிதாக காப்பியை அருந்தினாள். மலரின் கண்கள் எதிர் வீட்டு மாமரத்தை நோக்கியது. இளம் மாந்தளிர்கள் மாலை வெயில்பட்டு நிறங்கள் மாறி காற்றில் மின்னியது. மலரின் சிந்தனை தான் இழந்த இளம் வயது கிராமத்து வாழ்வை ஏக்கத்தோடு நினைக்க ஆரம்பித்தது. அப்பா நிலக்கிழார். பழைய காலத்து முறை மாடி வீடு. வீட்டு வாசலில் வரிசையாக மரங்கள். வேப்பமரம், தென்னை, மயில் கொன்றை மரம். அதன் அருகில் மனோரஞ்சிதம் மரம் தை மாதம் பூக்களை பிரசவிக்கும். அதன் மணம் நாசியை துளைத்து ஆரோக்கியம் புத்துயிர் பெற செய்துவிடும்.வீட்டின் பின்புறம் போர்செட். வாய்க்காலில் சிலுசிலுவென பளிச்சென்று தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். அதை ஒட்டி கண்ணுக்கெட்டியதூரம் வரை நெற்பயிர்கள் பச்சைபசேலென காற்றில் அசைந்தாடி கொண்டிருக்கும். வீட்டுக்கு அருகில் மாட்டுகொட்டகை. சிறிது தள்ளி உரக்குழி. காய்ந்த இலை தழைகள், மாட்டுசாணம் எல்லாம் அதில் கொட்டுவார்கள். அதை ஒட்டிய வாழை தோப்பு. அதிகாலையில் அம்மா எழுந்து வாசல் கூட்டும் சத்தத்திலேயே விழிப்பு வந்துவிடும். சத்தம் வராத ப்ரூம்ஸ்டிக் அல்ல. தெண்ணங்குச்சிகளால் ஆன விளக்கமார்.சாணம் கரைத்து வாசல் தெளிக்கும் மணம் என்னை தட்டி எழுப்பும். இப்போது போஸ்ட்டர் சாப்பிடும் மாட்டு சாணம் போல் மணம் இருக்காது.அதிகாலையிலே பால் கறக்கும் தாத்தா வந்துவிடுவார். நான் விழித்த உடன் கண்களை கசக்கிகொண்டே நேரே மாட்டு கொட்டகைக்கு செல்வேன். அங்கிருக்கும் கருங்கல்லின் மேல் வேடிக்கை பார்க்க அமர்ந்துகொள்வேன். பால்தாத்தா மாட்டின் கால்களை கயிற்றால் கட்டுவார் .பால் வாலியை தொடையிடையில் வைத்து மாட்டு மடியில் தண்ணீர் அடித்து கிண்ணத்தில் உள்ள எண்ணையை விரல்களில் தொட்டு பால் கறக்க ஆரம்பிப்பார்.பால் வாளி நிறைய நிறைய பீய்ச்சும் சர்... சர்...சத்தம் மாறிக்கொண்டு வருவதை ரசித்து கேட்டு கொண்டிருப்பேன். அப்பா அதிகாலையில் வயலை சுற்றிபார்க்க செல்வார். என்னை பார்த்து என்னம்மா பல் விளக்கி முகம் கழுவலையா?! என்பார். ஓடிபோய் கொல்லை புறத்தில் பல் விளக்கி முகம் கழுவி சூடான பசும்பாலுடன் திண்ணையில் ஆச்சியோடு அலவலாவிக்கொண்டே ரசித்து குடிப்பேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை விளை நிலங்கள். தூரத்தில் அப்பா நெல்வயலை நோட்டமிட்டு கொண்டிருப்பார். லேசான காலை பனி மூட்டத்தில் நாற்றங்காலில் கிளிகூட்டம் வந்து ஆய்வு செய்யும். ஆச்சி பரபரப்பாக போய் அதுகள விரட்டு ! ன்னு சொல்லும். ஆஹா.....! இதை விட பொிய வாய்ப்பு இருக்குமா என்ன?! வரப்பில் ஓடுவேன். பச்சைபசேலென்று பொசு பொசுவென நாற்றங்கால், இதமான பனித்துளியும் குளிர்ச்சியும் சேர்ந்து என் பாதங்களுக்கு வேகம் கூட்டி ஓடவிடும். ச்சோ.... ச்சோ...... என உற்சாகத்தோடு சத்தம் போட்டு கொண்டே ஓடுவேன். பத்து நாாட்களே பதிநைந்து நாட்களே ஆன நாற்றுகள் என் பாதத்தில் அழுந்தி மீண்டும் மெல்ல சேதமின்றி எழுந்து நிற்கும் துன்பத்திலும் மீண்டு எழும் விவசாயிகளை போல!. கிளிகள் பறந்த பின் போர்செட் ஓடும் வாய்க்கால் நீரில் காலை கழுவி குளித்து உண்டு பள்ளிக்கு சென்று விடுவேன். மனசு மட்டும் வீட்டை சுற்றி கொண்டிருக்கும். மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது வாசலில் வரும் குழம்பு மணத்தை வைத்தே மூளை உற்சாகமாகிவிடும். உணவருந்தி, வீட்டுபாடம் முடித்து கொல்லைப்புறத்தின் உயரமான திண்ணையில் பாய் விரித்து ஆச்சி மடியில் படுத்து கதைகள் கேட்பேன். வேப்பமரத்து பூக்களின் மணம் வீசும். அம்மா இரவு உணவு சமைத்து எட்டு மணி வாக்கில் மல்லிகை பூக்களை பறிப்பாள். மின் விளக்கின் அரை வெளிச்சத்தில் கிளுவை மரத்தில் படர்ந்து லேசாக மலர்ந்து பளிச்சென்று பறிக்க காத்திருக்கும்
மல்லிகை பூக்களை முடிந்த வரை பறித்து வந்து திண்ணையில் கொட்டி பேசிக்கொண்டே கட்டுவாள். மல்லிகை மணமும் மரங்களின் காற்றும் ஆச்சியின் கதையும் கண்களை மெல்ல சொக்க வைத்து உறக்கம் வந்து விடும். கொசுக்கடி இருக்காது. ஏர் கண்டிஷன் கிடையாது. பின் அப்பா தூக்கிச்சென்று வீட்டினுள் கிடத்துவார்.வயல்களில் அறுவடை முடித்த பின் அடுத்த பயிர் சாகுபடி செய்ய தண்ணீர் பாய்ச்சுவார்கள். காற்று சிலு சிலு வென வீசும். வாத்து மேய்பவர்கள் வருவார்கள். வாத்து கூட்டம் பேக் பேக் பேக் என்று கத்திகொண்டே அலட்டலாக அசைந்து அசைந்து வரும்.வாத்துகாரா் அப்பாவிடம் பேசுவார். அப்பா சொல்வார் நிலத்திலுள்ள மண் புழுக்களை எல்லாம் திண்ணும்பா வேண்டாம் என்பாா்.வாத்துகாரா் விடமாட்டார். நானும் வாத்துகாரா் மனநிலையில் தான் அனுமதிக்காக காத்திருப்பேன். சரி போ என்று அனுமதி கொடுப்பார் அப்பா. அதை கேட்டதுதான் தாமதம். வீட்டின் கொல்லை புறத்துக்கு மின்னல் வேகத்தில் விரைவேன். வாத்து கூட்டத்துக்கு முன் நான் அங்கிருப்பேன். அவை இறங்கும் காட்சியை காண என் சந்ததிகளுக்கு கொடுத்து வைக்கவில்லை.வரப்பில் கால்களை மடக்கி சறுக்கிகொண்டு தண்ணீருக்குள் வாத்துக்கள் செல்லும் காட்சி கண் இமைக்க முடியாத நொடிகள். வயல் தண்ணீருக்குள் அங்கங்கே உரக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட எருமுட்டுக்கள் குவிந்திருக்கும். அதில் காடைகள் முட்டையிட்டு செல்லும் காட்சியை ரசிப்பது தான் வேலை. பசி மறந்து விடும் வாத்துகாரா் கையில் ஒரு கூடையை வைத்து கொண்டு தண்ணீரில் வாத்து முட்டைகளை தேடி சேகரிப்பார். பிறகு அவருடைய நேரம் முடிந்ததும் வாத்துகளை ஓட்டி சென்று விடுவார். என்ன செய்வது வருத்தமாக இருக்கும். பின்பு கோடை காலத்தில் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக இடையர்கள் ஓட்டி வருவார்கள். பனை ஓலையால் செய்த பெரிய கூண்டு, வித்தியாசமான முறையில்
ஆபரணங்கள் இவையெல்லாம் பார்க்கும் போதே ஆர்வத்தை தூண்டும். இந்த கூண்டில் ஆட்டை அடைப்பாா்களா?! இவர்கள் தூங்குவதற்கா என்ற கேள்விகள் மனதில் ஓடும். ஒரு நாள் தன் தந்தையிடம் இடையர்கள் பனைமட்டை கேட்டபோது தன் சந்தேகத்தை தீர்த்து கொள்ள அவர்கள் தங்கி இருக்கும் களத்து மேட்டுக்கு சென்று பார்த்தாள் மலர்.ஆடு மேய்ப்பர்கள் நிழலுக்காக அந்த கூடையை ஒரு நீண்ட குச்சியை வைத்து முட்டு கொடுத்து அதனுள் அமர்ந்து ௳ணவருந்தினார்கள். மலருக்கு அந்த காட்சியை கண்டதும் விழிகள் நீண்டது. எப்படிபட்ட யோசனை என்று வியந்தாள். ஆடுமாடுகள் உச்சிவேளையில் கத்தினால் ஆச்சி சொல்லும் மழை வரும் என்று. கணிப்பு தப்பாமல் மழை தூறல் போட்டு விட்டாவது செல்லும். அதிகாலையிலேயே பட்டப்பிறாந்து கத்துதே... இன்னைக்கு வெயில் பலமா இருக்கும்னு சொல்லும். கணிப்பு தப்பாது அப்படித்தான் கொளுத்தும். இந்த காலத்தில் இரவு பகல் தெரியாமல் மனிதம் உழைத்து உழைத்து கூண்டுகிளிகளாய், விஞ்ஞான அடிமைகளாய் வாழ்கிறோம். உழுத வயலில் மண்கட்டிகளுக்கிடையே எள்செடிகள் வளர்ந்து வெள்ளை நிற பூக்கள் பூக்கும்.அப்பாவுக்கு தெரியாமல் பறித்து வந்து மாலை கோர்த்து கழுத்தில் போட்டு சகோதரிகளோடு விளையாடுவோம். ஊரில் பம்புசெட்டுகளை தேடி விடுமுறை நாட்களில் வயது வந்த இளம் பெண்கள் குளிக்க வருவார்கள் . அப்படியே எள் செடியின் இலைகளை அரைத்து தேய்த்து குளித்துவிட்டு,கதை பேசி கொண்டே வீட்டுக்கு செல்வார்கள்.பருத்தி சாகுபடி செய்தால் முதலில் வரும் பிஞ்சி காய்களை அப்பாவுக்கு தெரியாமல் தின்று விடுவதில் மலருக்கு அலாதி இன்பம். அதன் சுவையும் இனிப்பும் மீண்டும் களவாடி திண்ணச்சொல்லும். அப்பா விவசாயத்தோடு தன் பெண் மக்களுக்கு கல்வி கற்று கொடுப்பதிலும் முனைப்போடு இருப்பார்.சித்திரை மாத பள்ளி விடுமுறை நாட்களில் "வெயிலில் அலையாதே படுத்து உறங்கு"என்பார்.தூங்குவதுபோல் நடித்து விட்டு அப்பா குறட்டை விடும் நேரத்தில் 4ஆவது வீட்டு டீ கடை பெரியம்மாவை பார்க்க ஓடுவேன். அவர் மகள் என் தோழி,வள்ளியோடு விளையாடுவேன்.சிறிய மூங்கில் கட்டை மேல் மணல்போட்டு சாணை பிடிக்க அரிவாளை தீட்டுவார் பெரியப்பா. சிறிது நேரம் செல்லச்செல்ல மணல் கறுப்பு துகளாக மாறி விடும். அரிவாள் முனை ஜொலிக்கும். அப்பா விழிப்பதற்குள் மூச்சிறைக்க வீடு வந்து சோ்வேன்.கதிர் அறுத்து நெல் அடித்து பிரிக்கும் போது வரும் மணம் கோமாவில் இருப்பவர்களை கூட எழுப்பிவிடும்.விவசாயிகள் மும்முரமாக நெல் தூற்றுவதும், எங்கே மழை வந்தால் நெல் நனைந்துவிடுமோ என்று விவசாயிகள் பரபரப்பாக வேலை செய்யும் காட்சி எந்த IT அலுவலகத்திலும் பார்க்க முடியாது பத்தாயத்தில் காய்ந்த நெல்லை மூட்டையிலிருந்து பிரித்து கொட்டும்போது மகிழ்ச்சி வெள்ளம் மடை திறந்து ஓடும். கிட்டத்தட்ட ஐந்நூறு மூட்டைகள் நிறையும். ஒரு வருட கூட்டு குடும்பத்திற்கான உணவு கிடங்கு அந்த பத்தாயம் தான். விழாக்கள், சடங்குகள் அனைத்துக்கும் போதுமானது.களம் கூட்டுவதும்,வைக்கோல் போர்போடுவதும் மனிதனின் ஆயுளை கூட்டும் அழகிய காட்சிகள். வைக்கோலை மாட்டு வண்டியில் அத்தை வீட்டுக்கும் அப்பா அனுப்புவார். வைக்கோல் போர் சிறிது சிறிதாக உயரும் போது அதன் மேல் ஏறி நின்று குதித்து குதித்து ஒரே விளையாட்டு மகிழ்ச்சி தான். ட்ராம்ப்போலின் விளையாட்டு அப்போதே ஆடியாச்சு. தென்னை மரத்தில் பாலை அறுத்து தட்டும் தட்... தட்.... சத்தம் களையத்தில் ஈ மொய்க்கும் கள்,அப்பத்தாவோடு புளி ஓடு நீக்கி, கொட்டை எடுத்து கொடுப்பது, இயந்திரத்தில் அப்பத்தா உளுந்து உடைக்க நான் தவிடு கலந்து கொடுத்தது.ஊரவைத்த நெல்லை அவித்து களத்தில் படர்த்தி.....நெல்லை கால்களால் தரவி விளையாடியது. இவை எல்லாம் நெஞ்சில் நீங்காத நினைவுகளாய் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க ,நிலங்கள் அப்பார்ட்மண்ட் வீடுகளாகின. அப்பாவை போன்ற மதிக்கத்தக்க விவசாயிகளும் இன்று குறைந்து வருகின்றனர். விவசாயமும் தத்து பிள்ளையாகி விட்டது. பாலூற்றி மாம்பழ சோறூற்றி பயிர் செய்த காலம் காணாமற் போனது.இனி பயிர் செய்ய மண் இருக்குமோ என்னவோ?! காலம் ஓடியது.மலருக்கு திருமணம் ஆனது. நகர்புற வாழ்க்கைக்கு மாற வேண்டிய கட்டாயம். நடுநிசியிலும் வாகன இரைச்சல், கூர்காவின் விசில் சத்தம். 400 சதுரடியில் இரண்டு அறைகள் கொண்ட வீடு. வவ்வால்களின் வாழ்க்கை. குழந்தைகள் விளையாட இடம் இல்லாமல் பரிணாம குறைவின் வாரிசுகளாய் மாறுகிறார்கள். பாடச்சுமைகள்,தொலைக்காட்சி,மொபைல்கேம்ஸ் விளையாட்டுகள். பள்ளிக்கூட செய்முறை பயிற்சியில் சிட்டு குருவி, தவிட்டு குருவி, அணில், பசுமாடு எல்லாம் அரியவகை உயிரினங்கள் பட்டியலில் ஒட்டி பள்ளிகூடத்திற்கு எடுத்து செல்கிறார்கள்.மீண்டும் அந்த ஆரோக்கியமான நாட்கள் இனி வாராதா என்ற ஏக்கத்தோடு விழியோரம் நீர் கசிய, உறைந்த இதயத்தோடு தன் மாடி வீட்டு தோழியின் குரல் கேட்டு புன்னகைத்து கொண்டே வரவேற்றாள் மலர்.அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்றாள் தோழி.மலர் ஆர்வத்துடன் அம்மா வீட்ல கொல்லை புறம் இருக்கா என்றாள். இருக்கிறது என்றாள் தோழி.அப்படின்னா இந்த பலாக்கன்றை "நிலத்தில் ஊன்றி வை". என அன்போடு கொடுத்து அனுப்பினாள் மலர்.பாரதியின் "காணி நிலம் வேண்டும்" நினைவு வந்தது .(முற்றும்)
Comments
Post a Comment