சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.
சுதந்திர இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.இந்திய முகப்பின் சிறப்பே பன்முகத்தன்மை கொண்ட மக்கள் வாழ்வது தான்.இந்தியாவின் பிரச்சனைகளும் பன்முகத்தன்மை கொண்டதுதான். இந்திய சமூக பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் தோற்றம்,சிக்கல், சமூக சூழல் போன்றவற்றை பகுப்பாய்வு செய்தால் தான் முடியும்.அதிகமான பிரச்சினைகள் கலாச்சார தேவையை அடிப்படையாக கொண்டு தான் இங்கே உருவாகிறது.தகவல் மற்றும் தொழில்நுட்பத்தின் பெருக்கத்துடன், மக்களிடையே உலகளாவிய சமூக கண்ணோட்டமும் விழிப்புணர்வும் ஏற்படுகிறது. ஆனால் மக்கள் அதை பெருமளவு பொழுது போக்கிற்காக மட்டுமே பயன்படுத்தி காலத்தை விரயமாக்கி விடுகின்றனர். மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வெகுஜன மக்ளுக்கான வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் இயங்கவில்லை என்பது வருத்தமான ஒன்று.அவ்வாறு அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்கள் நிறைவேற்றினால் தான் வெற்றிகரமான வாழ்வை மக்கள் பெற முடியும்.இன்றைய இந்தியா நகர மயமாதல்,தொழில் மயமாதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருவதால் மக்கள் அடிப்படை தேவைகளை,விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள நகர்ப்புறம் நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாக நகர்புறங்களில் அதிகப்படியான மக்கள் தொகை நெரிசல், மாசுபாடு, நகர்ப்புற வறுமை மற்றும் வேலையின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. நாட்டின் ஒரு சில பகுதிகளே தொழில்மயமாக்கலில் செறிவடைந்துள்ளன.அதுபோல் ஏனைய நகரங்களும் வளர்ச்சி பாதையில் சென்றாலொழிய வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய முடியாது.மேலும் சில கலாச்சாரத் தேவையால் மக்களிடையே புரிதல் குறைந்து அவ்வப்போது சாதி மத மோதல்,பிரச்சினைகள் மோசமடைந்து வருகிறது.இதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சவால் விடும் சூழல் உருவாகிறது. இந்திய துணை கண்டமான சுதந்திர தேசத்தில் இனவாத , மத வாத அரசியல் என எத்தனை எத்தனை குளறுபடிகள் உருவாகிவிட்டது?!.சமூகத்தில் விரும்பத்தகாத சூழ்நிலையையும் சிக்கல்களையும் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி விடுகிறது.இது போன்ற உணர்ச்சிவசப்பட கூடிய சூழலில் தான் இன்றைய இந்திய மக்கள் பெருமளவில் தன் ஆக்க சக்தியை வீணடித்து விடுகிறார்கள்.
ஆனால் நம்மை இருநூறு ஆண்டுகள் அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷாருக்கு இந்தியாவின் வளங்களோடு மக்களின் மனித வளத்தை அள்ளிசெல்லும் ஒரே நோக்கம் மட்டும் தான் இருந்தது.
நாம் சுதந்திரம் பெற்ற பின் நம் ஒவ்வொருவரின் உள்ளங்களில் கட்டிவைதிருந்த சர்வாதிகாரிக்கும் சேர்த்து சுதந்திரம் கொடுத்து சமூக ஒற்றுமையை கெடுத்து விடுகிறோம்.மாட்டிறைச்சி தொடங்கி ஹிஜாப் உரிமை,CAA,NRC விலக்கு கேட்டு போராடும் நிலையில் சுதந்திர இந்தியா மாறிவிட்டது. இன்னும் இது போன்ற தனி மனித உணர்வுகளை பொது பிரச்சனைகளாக்கி செயல்படுவதால் சமூகத்தின் முன்னேற்றமும் தடைபட்டு விடுகிறது.
பாலின சமத்துவமின்மை இந்த நூற்றாண்டிலும் உயிரோடுதான் உலவுகிறது.பணி இடங்களில் உள்ள நெருக்கடிகள் ஆண், பெண்,மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது.நாடு முன்னேற்ற பாதையில் சென்றாலும் இலக்கை நோக்கிய உறுதியான நடை போட்டு செல்கிறதா?!என்றால் அது சவால்கள் நிறைந்த கேள்வி குறி தான்.மேற்கத்திய கலாச்சாரத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தி கொண்டு அதைத்தான் நாம் முன்னேற்றம் என்று இதுவரை சொல்லி கொண்டிருக்கிறோம். இந்திய மக்களின் சுயம் என்ன என்பதை கருத்தில் கொண்டு செயல்பட மறந்துவிட்டோம்.
இதன் விளைவாக மக்களும் எதை பின்பற்றினால் நிம்மதியும் இன்பமும் கிடைக்குமோ அதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை கொண்டவர்களாக மாறி வருகின்றனர்.ஒரு பால் உறவு திருமணங்கள் போன்றவை இதற்கு உதாரணம்.சினிமா மோகம், நாகரீகம் என்பதன் அர்த்தம் புரியாமல் வழிதவறும் இளைய தலைமுறை.சீர்கெடும் குடும்ப உறவுகள் என மக்களே தேடி போய் ஆபத்தில் மாட்டி கொள்ளும் இந்த அதி தீவிர சுதந்திர மனப்பான்மையை என்னவென்று வர்ணிப்பது?.நாடு நவீன முன்னேற்றத்தை நோக்கி செல்வது போல் அநீதிகளும், மடமைகளும்,அக்கிரமங்களும், லஞ்ச லாவன்யங்கள்,தனி மனித உரிமை மீறல்கள்,மத காழ்ப்புணர்ச்சிகள் போன்றவை புதிய வடிவெடுத்துள்ளது. சமூக ஆர்வல்களும்,சமூக செயல் பாட்டளர்களும் அவ்வப்போது இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண குரல் கொடுக்கவும் செய்கிறார்கள். இந்தியாவில் மிகவும் பரவலாக இருப்பது ஊழல். தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகம் இரண்டிலுமே லஞ்ச ஊழல் பிரச்சனைகள் உள்ளது.இது விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாளப்பட வேண்டியது. கல்வி,மனித வளங்கள்,இயற்கை வளங்கள், வர்த்தகம் எல்லாவற்றிலும் குறுக்கு பாதையில் செல்வதற்கு மறு பெயரே வளர்ச்சி என்றாகிவிட்டது. சாதி,மத அரசியல்
நாட்டின் வளர்ச்சிக்கேற்ப திட்டங்களை வடிவமைப்பதில் குளறுபடிகள்.பட்ஜெட் என்ற பெயரில் பொருளாதாரத்தின் நாடியை நெறிக்கும் திட்டங்கள் என சோதனையோட்ட இரயிலாகத்தான் இந்தியா இன்றும் சென்று கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை..ஆனால் நாம் ஒன்றை மறந்து விட கூடாது. கொளுத்தும் வெப்பத்திலும்.கொலை பட்டினியாலும்,பெண்களின் மானத்தாலும்,தியாகத்தின் இரத்தத்தாலும் சொல்லொன்னா துயரின் வண்ணங்களால் தீட்டப்பட்டது தான் இந்திய தேசிய கொடி . 75 ஆண்டுகள் உருண்டோடி விட்டது இன்னும் எங்கெங்கெல்லாம் உரிமைகள் மறுக்கபடுகிறதோ அந்த இடங்களில் எல்லாம் போராட்ட குரல்கள் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது.
பல வண்ணங்களால் மிளிரும் இந்தியாவை அதன் இயல்பான வண்ணங்களிலேயே விட்டுவிட்டால் குடிமக்கள் பதட்ட நிலை இல்லாமல் வாழ எதுவாக இருக்குமே!வானவில்லை ஒரே நிறமாக மாற்றினால் எப்படி அழகற்றதாய் பொருளற்றதாய் இருக்குமோ அவ்வாறு தான் இந்திய இறையாண்மயும் இந்திய மக்களின் வாழ்வும் பல வண்ணங்களால் உணர்வுகளால் தீட்டப்பட்டது.அதன் இயல்பிலேயே இருந்து விட்டு போகட்டுமே!.ஒரு நாள் கூத்துக்கு மீசை வைக்கும் திட்டங்களுக்காக அதிக பொருட்செலவுகளை தவிர்த்து , மக்களின் வரிப்பணத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தினால் இன்றைய நடப்பு சிக்கலானபண வீக்கத்தை சரிசெய்யலாம். வளர்ச்சி பாதை என்பது சமூக பொருளாதாரம்,மக்களின் பாதுகாப்பு,கல்வி,சுகாதார மேம்பாடு,வேலை வாய்ப்பு மேம்பாடு,நீர் மேலாண்மை,சுற்று சூழல் மேலாண்மை,சட்ட ஒழுங்கு,சமநீதி இப்படி மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டால் தான் இந்திய சுதந்திரம் முழுமையடையும்.மிக சிறிய வளங்களை கொண்ட நாடுகள் பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்தி உயர்ந்து விடுகிறது. அபரிமிதமான வளங்களை கொண்ட இந்தியா தேசம் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.எனவே
"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு". (செங்கோண்மை: 544)
குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் மாநிலத்து வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து வாழ்வும் நிலைபெறுவதாகும்.
Comments
Post a Comment