சமூக ஊடகங்களில் நன்மையும் தீமையும்..

ஒவ்வொரு மனிதனின் அகத்திலும் ஆழமாக ஊடுருவி செல்வதால் தான் ஊடகம் என்ற பெயரோ..?!.காரியாபட்டி முதல் கசகஸ்தான் வரை எல்லாமே ஊடகங்களில் பார்த்து கொள்ளும் வசதி வரவேற்கத்தக்கது தான். அன்றாட வாழ்வில் ஊடக செயலிகள் தான் மனிதனுக்கு ஊக்கி எனும் அளவுக்கு வாழ்க்கை நகர்கிறது என்றால் அது மிகையாகாது.துரித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு தேவை தான் ஊடகம்.இதன் பலனாக உடனுக்குடன் உலக நிகழ்வுகள் மற்றும் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.உலகம் முழுவதும் விரல் நுனிகளில் உலா வந்து விடலாம். செல்லும் இடமெங்கும் செயலிகள் மூலம் பண பரிவர்த்தனைகள். பறந்து விரிந்த இணைய வழி வர்த்தக உலகத்தின் மூலம் ஆடை அணிகலன்கள் வியாபாரம் ஒரு புதிய பரிமாணம் பெற்றுள்ளது.இணையம் தொலைந்த உறவுகளை தேடவும்,தொடரவும் ஒரு இணைப்பு பாலமாக செயல்படுகிறது. தூரங்கள் இதன் மூலமாக குறைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.தகவல் திரட்டல்,தகவல் பரப்பப்புதல், விண்வெளி காட்சிகள்.போர் நடக்கும் நாடுகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு துரித கதியில் போர்க்கால உதவி செய்ய முடிகிறது.எண்ணற்ற தகவல் சேகரிப்புகள்,கண்களால் காண முடியாத இயற்கையின் அறிய காட்சிகளை கூட காண முடியும் என்றால் வியப்பின் உச்சம் தான் இந்த வலைதளம்.சிக்கலான வேளைகளில் உயிர் காக்க உதவும் இடப்பகிர்வு(location sharing)மூலம் உதவி தேடுவதற்கு ஒரு ஆபத்பாந்தவனாகவும் செயல்படுகிறது.அறிவுத்திறமயை வெளிப்படுத்த வலைதளங்களில் சாதிய வர்க்க வரையறைகள் இல்லை என்ற நிலை பாராட்டதக்கது. திறமைசாலிகள் எளிய வழியில் இலக்குகளை அடைய சமூக ஊடகங்கள் உதவி கரம் நீட்டுகிறது.நாம் போடும் லைக்குகளும்,கமெண்டுகளும் மற்றவர்களின் வாழ்வில் மலர்ச்சியையும்,ஊக்கத்தையும் கொடுக்கிறது.புரட்சி,சமூக சீர்திருத்த சிந்தனைகள், நாகரிகம், பண்பாடு,இயற்கை, இசை,விஞ்ஞானம், கலைகள், இலக்கியம்,மருத்துவம் என சகலமும் கிடைக்கும் ஓர் உலக சந்தை தான் வலைதளம்.சில நேரஙகளில் கனத்த இதயத்தை லேசாக்கும் பதிவுகளும், கோமாளி சேட்டைகளுக்கும், சிரிப்புக்கும், சிந்தனைக்கும் நம்மை கடத்தி செல்லும் ஒரு பொழுதுபோக்கு சாதனமாக செயல்படுகிறது.மருத்துவ உதவிகளுக்கும்,சமூக ஆர்வர்களுக்கும்,உதவி கரம் நீட்டும் அமைப்புகளின் வளர்ச்சிக்கும், ஒருங்கிணைப்புக்கும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சமூக வலைதளம் பேருதவியாக உள்ளது.உணவு கலாச்சார ஒருங்கிணைப்பு இதன் மூலம் பெண்களின் அடுப்படிக்கு புதிய பரிமாணத்தை கொடுத்து விட்டதென்றே சொல்லலாம். வீட்டுக்குள்ளேயே கிடந்து சமைத்து கொடுத்தாலும் பாராட்டு கிடைக்காத பெண்களுக்கு இந்த சமூகத்தின் சாளரம் வழியே ஒரு சுதந்திர காற்று வீச வழி கிடைத்துள்ளது உண்மைதானே!இணையம் மூலம் மறந்து போன பாரம்பரிய கலைகள் உயிற்பெறுகிறது.ஆகவே உலகம் சுற்ற ஒரு எளிமையான வழி தான் சமூக ஊடகம்.என்றாலும் அதுவே அறிவு உலகத்தின் வெற்றியாகி விடாது. முழுமையாக விஞ்ஞானத்தை மட்டுமே சார்ந்து வாழும் இந்த நிலையை அறிவு செருக்கு அல்ல அறிவு சுருக்கம்தான் என எண்ண தோன்றுகின்றது. மனிதர்களின் பரந்துபட்ட செயல்பாடுகள் அனைத்தும் ஒரு சிறு புள்ளியில் அடங்கிவிட்டால் அது சோம்பேறித்தனத்துக்கு வழிவகுத்து விடும்.வலைதலங்களின் தாக்கத்தால் மனித ஆற்றல் குன்றி வருவதுதான் பெரும் சொகச்செய்தி.
நூறு தொலைபேசி எண்கள் வரை நினைவில் வைத்திருந்த மனித ஆற்றல் குறைந்து தன்னுடைய தொலைபேசி எண்ணே தெரியாமல் தடுமாறும் நிலைவந்துவிட்டது.ஒரு நாள் வலைதள நிகழ்வுகளை நோட்டமிட முடியாவிட்டால் இழக்க கூடாததை இழந்து விட்டது போன்று ஒரு மனினுடைய உணர்வுகள் இயல்புநிலையை இழந்து விடுகிறது.வலைதளம் என்பது மனிதர்களிடமிருந்தே தகவல்களை திரட்டி மனிதர்களுக்கு சுருங்க கொடுப்பது தான். இதில் சாதகங்கள் அதிகம் இருந்தாலும் பாதகமும் அதே அளவு உள்ளது.குழந்தைகள் செயலிகளில் விளையாடி செயல்படாமலேயே உலகை தொலைத்து விட்டார்கள்.சிறு வயதிலேயே கண் மற்றும் மனநோய்களுக்கு ஆளாகிறார்கள். நம்முடைய அன்றாட செயல்களை வலை பதிவுகளாக்கி வலையில் சிக்கி வாழ்வின் நிம்மதியை தொலைத்தவர்கள் நிறையபேர் என்பதில் சந்தகமேயில்லை.நம் செயல்பாடுகள் அனத்தும் நீண்ட நேரம் ஒரே இடத்திலேயே புதைந்து விடுகிறது.இதனால் ஆரோக்கிய குறைபாடுகள் மற்றும் புதிய வகை நோய்கள் உருவாக சமூக வலைதலங்களில் அதிக நேரத்தை செலவிடுவதும் ஒரு காரணமாகிறது. மேலும் மனிதர்கள் சமூகத்தோடு பழகுவதும் தூரமாகி வருகிறது.சில சங்கங்கள் தங்கள் பதிவுகள் மூலம் சமூக ஒற்றுமையை குலைக்கவும் வழி கோலிவிடுகிறது. எழுத்து சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் சில நேரங்களில் சமூக விரோத குழுக்களுக்கு தீனியாகி சமூக ஒற்றுமையை குலைத்து விடுகிறது.குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய தாய்மார்கள் போய் ஊடகசோறு ஊட்டி விடும் தாய்மார்கள் பெருகிவிட்டனர். எதிர்பார்ப்புகளும்,இழப்புகளும் உறவுகளுக்குள் அதிகரித்து உறவுகளின் நம்பகத்தன்மைகளை குறைந்துவிட்டது.அரசியல் செய்திகள் உலக செய்திகள்,வரலாறுகள், அகழ்வாராய்ச்சிகள் என்ற பெயரில் வசதிகேற்றார் போல் உண்மை நிலையை திரித்து பரப்பவும் சிலருக்கு வசதியாகி விட்டது.அதில் 'பொய்யாமொழி' புலவர் திருவள்ளுவரை கூட மிச்சம் வைக்கவில்லை.அருவருக்கத்தக்க விஷயங்கள் கூட trending என்ற பெயரில் இளம் தலைமுறையினரின் சீரழிவுக்கு வழிகாட்டுவது மிகவும் வருத்தமான விஷயம் தான்.'இலை மறை காயாக' இருந்த விஷயங்கள் பொதுவெளியில் உலவுவதால் வெட்க்கமற்ற சமூகமாக மாறும் அபாயமும் உள்ளது.சமூக வலைதளங்கள் குடும்ப உறவுகளில் இருந்து இளம் தலைமுறையினரை பிரித்து விட்டது.ஆம்! கூப்பிட்ட குரலுக்கு பதில் வர தாமதமாகிவிட்டது.தன் வீட்டிலுள்ள பெற்றோருக்கும் மூத்தவர்களுக்கும் பணிவிடைகள் செய்ய மறந்து போய் விடுகிறார்கள்.ஆனால் வலை தளங்களில் உதவி கேட்பவர்களுக்கு முன்நிற்கிறார்கள்.அண்டை வீட்டுக்காரர்களோடு அறிமுகமாக கூட மனம் வரவில்லை.அந்த அளவுக்கு அதிகமாக உள்ளத்தை ஆக்கிரமித்து விட்டது வலைதளங்கள்.அதீத தன்னம்பிக்கையின் விளைவாக விளம்பர மனப்பான்மை மக்களிடம் பரவலாக தொற்றி கொண்டுள்ளது. மற்றவர் மீதுள்ள வன்மங்களை படமெடுத்து பரப்பவது போன்றவற்றினால் உயிர்கள் காவு வாங்கப்படுவது போன்ற விசயங்கள் சமூகவலைதளின் பின்னடைவுகள் ஆகிறது."யார் தன்னுடைய சகோதரனின் கண்ணியம் மற்றும் மான மரியாதைக்கு களங்கம் ஏற்படுவதை விட்டும் தடுக்கின்றாரோ அவருடைய முகத்தை அல்லாஹ் மறுமையில் நரகத்தை விட்டும் தடுப்பான்" (நபிமொழி) அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்: திர்மிதி.செய்திகளை படிக்காமலேயே அது இட்டுகட்ட பட்டதா உண்மையா என்று ஞானம் இன்றி பரப்பி விடுவது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் குழப்பத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.கிசு கிசு (gossips) என்ற பெயரில் மற்றவர் வாழ்வின் அந்தரங்கங்களை தோண்டி எடுத்து வியாபாரமாக மாற்றுவதும் அதை பொழுதுபோக்குக்குகாக பேசி சண்டை போட்டு கொலை வரை செல்லும் விசயங்களை அறியாமை என்று சொல்வதா முட்டாள்தனமானது என்று சொல்வதா!இப்படிப்பட்ட மனநிலையை காத்து கொள்ள இஸ்லாம் இவ்வாறு கூறுகிறது"முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்." 49:11.(குரான்).இந்த நிலை எவ்வாரென்றால் ஒரு அறியா குழந்தையின் கையில் உள்ள இருமுனை கூர்வாள் தான் இந்த சமூக வலைதளம். சமூக வலைதளம் எனும் இப்படிபட்ட அறிவுநெருப்பை விளக்கேற்றவும் பயன்படுத்தலாம் வீட்டைகொளுத்தவும் பயன்படுத்தலாம். தேவைக்கு பயன்படுத்துவதால் மனித சமூகத்தின் வளர்ச்சி பாதைக்கு நம்மை கொண்டு செல்லும். தீமைக்கு பயன்படுத்தினால் சமூக அழிவிற்கு வழிவகுக்கும் என பகுப்பாய்வு செய்து நடக்க உறுதியேற்போம்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்."இறைவா! நிச்சயமாக நான் பிரயோசனம் தராத அறிவிலிருந்தும் பயப்படாத உள்ளத்தை விட்டும் நிரப்பம் அடையாத ஆன்மாவை விட்டும் விடையளிக்கப்படாத (அங்கீகரிக்கப்படாத) பிரார்த்தனையை விட்டும் உன்னிடத்தில் நான் பாதுகாப்பு கேட்கின்றேன்". (நூல் : முஸ்லிம்).எனவே அறிவின் உச்சத்தை தொடும் ஒவ்வொரு விடயத்திலும் நாம் மற்றவருக்கு பயனுள்ளவராக வாழ இறைவன் அருள்புரிவானாக. ஆமீன்!.



Comments

Popular posts from this blog

இஸ்லாம் வலியுறுத்தும் ஜனநாயகம்.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்.

பெண் அதிகாரம் அளித்தலின் (Women empowerment). அணுகுமுறைகள்.