சாதிக்கும் பெண்கள்.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
____ பாரதியார்.
கரி படிந்த சுவற்றை பார்த்து கொண்டு கனவுகளையும்,கவலைகளையும் அடுப்பு தீயில் கொளுத்தி சமையல் செய்து கொடுத்த வைராக்கிய அம்மாக்கள் தான் இன்று சாதிக்கும் பெண்களின் முன்மாதிரிகள் என்றால் மிகையல்ல.படிக்க தெரியாவிட்டாலும் பால் கணக்கை கோடுகளால் வரைந்து நிர்வாகம் செய்யும் ஆற்றல் பெற்றவள்.என்றாலும் தன் திறமைகளை அடுக்களை சார்ந்த நிர்வாகத்துக்கு மட்டுமே ஒதுக்கபட்டவள்.இவ்வாறே பெண்கள் பல தடைகளையும் பாலின பாகுபாட்டையும் வரலாற்றில் எதிர்கொண்டுள்ளனர்.எத்தனை சவால்கள் பெண்களுக்கு இருந்தபோதிலும், மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்காக முக்கிய பங்காற்றியுள்ளனர்.இன்று அடுக்களை முதல் அணு அறிவியல் வரை பெண்கள் தொடாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வரலாறு முழுவதிலும் பெண்களின் சுவடுகள் பதிந்துள்ளது.எனவே ஒரு பெண் சாதனை எனும் மைல்கல்லை எட்டிவிட்டாள் என்று சொல்வதை விட அவள் தான் வரலாற்றை உருவாக்குவதில் முதல் சுவடு பதித்தவள் என்றே சொல்ல வேண்டும்.
அவளே பெண் சமூகத்தின் முதல் நம்பிக்கை ஒளியாகிறாள்.சில காலம் மட்டுமே குறிப்பிட்ட துறைகளை தவிர இதர துறைகளை தேர்ந்தெடுக்க பெண்கள் தயங்கினர்.மேலும் பொருளாதார ரீதியான பாலின சமத்துவம் அடைய இன்னும் நீண்ட தூரம் அவர்கள் செல்ல வேண்டி இருந்தாலும், தற்போதைய பெண்களின் பொருளாதார முன்னேற்ற விகிதம் என்பது குறிப்பிடத் தக்க வகையில் உள்ளது என்பதை மறுக்க முடியாது.கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் சாதித்த பெண்கள் விட்டுச்சென்ற தடங்களே இன்றைய கால பெண்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது.பொதுவாகவே பெண்களுக்கென்று குடும்பத்தில் கூடுதல் கடமைகள் இருக்கிறது. உணர்வால் பின்னப்பட்ட இந்த குடும்ப சவால்களை தாண்டி அவள் சமூகத்தில் சாதிப்பது என்பது இருமடங்கு பாரம். ஆனால்
திட்டமிடல் மற்றும் கட்டுக்கோப்பான செயல்பாடுகள் மூலமாக பெண்கள் வெற்றி அடைகிறார்கள். டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி ஆண்கள் கல்லூரியில் படித்த முதல் பெண் மாணவி. இவர் அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவ மனையில் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கல்வியோ, பொருளாதாரமோ,வயதோ ஒரு தடையே இல்லை என்பதற்கோர் எடுத்து காட்டு.
மதுரை மாவட்டத்தின் கள்ளந்திரி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து,கிராமப்புற மகளிரின் உழைப்பை உறிஞ்சும் கந்து வட்டியை ஒழிக்க பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினார் சின்னப்பிள்ளை அவர்கள்.பிறகு மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து அதன் மூலம் கிராமப்புற பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார்.எழுத படிக்க தெரியாவிட்டாலும் தன் உயரிய நோக்கத்தினால் சின்னப்பிள்ளையின் பெயர் தமிழக வரலாற்று பக்கங்களில் இடம் பெற்றது.இவரது மகளிர் மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டி, "ஸ்திரீ சக்தி புரஸ்கார்" எனும் இந்திய அரசாங்கத்தின் விருதை வென்றார்.
பெண்களுக்கு தீமையைக் கண்டு அஞ்சி ஒடுங்காமல் எதிர்த்து போராடும் வல்லமை வேண்டும்.கென்யாவின் முன்னாள் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக மாத்தாய் தைரியமாக எழுந்து நின்றார்.அவரது தனித்துவமான நடவடிக்கையினால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அரசியல் ஒடுக்குமுறைக்கு ஆதரவை ஈர்த்தார்.தன் தேசத்தின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க உத்வேகத்தோடு பணியாற்றினார்.குறிப்பாக கென்ய பெண்கள் தங்கள் நிலையை மேம்படுத்தி கொள்ள ஊக்குவித்தார்.
ஜனநாயக அமைதிக்கான பங்களிப்புக்காக வங்காரே மாத்தாய் 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
மாசிடோனியாவில் பிறந்து இந்திய மகளாகவே வாழ்ந்து மறைந்தவர் அன்னை தெரசா. "அமைதி என்பது ஒரு புன்னகையில் தொடங்குகிறது". என்ற தாரக மந்திரத்தால் அன்பை வசப்படுத்தி கொண்ட கை விளக்கேந்திய காரிகை.சகிக்க முடியாதவற்றை கூட சாதனைகளாக்கியவர்.அதிகாரத்தின் கரத்தை அன்பு கரங்களாக மாற்றிய புன்னகை முகம்.சமூகத்தால் புறக்கணிக்க பட்டவர்கள்,சமூகத்துக்கு சுமையாக பார்க்கப்பட்டவர்களை அரவணைத்த தாயுள்ளம் கொண்டதால் வரும் தலைமுறையினருக்கும் அவர் 'அன்னை தெரசா' ஆனார். தனித்துவமான சிந்தனை பெற்ற பெண்களே ஆளுமை மிக்க துறைகளில் தடம் பதித்து தங்களை சமூக அடையாளங்களாக மாற்றுகின்றனர்.சாதிக்கும் பெண்கள் தாம் செய்த சாதனைகளின் மூலமாகவோ, தவறுகள் அல்லது குறைபாடுகள் மூலமாகவோ பாடங்களைப் பெறுவது மட்டுமல்லாமல் தன் திறமைகளை மெருகேற்றவும் முனைகிறார்கள்.கடினமான ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள்,இலக்கை அடைய தீவிரமாக உழைக்க வேண்டும்.தொடர்ச்சியான முயற்சிகள் செய்த வண்ணம் தங்களை உயிர்துடிப்போடு வைத்து கொள்ள வேண்டும்.உயர்ந்த மற்றும் தொலைதூர இலக்கை நோக்கி பயணிக்க எத்தனிப்பவர்கள் கவனத்தை குவித்து ஒரே நோக்கத்துடன் செயல்படுதல் அவசியமாகிறது.மேலும் வெற்றி பெற வேண்டும் என்ற மன உறுதியுடன் செயல்பட வேண்டும்.சாதனை என்ற சொல்லே சிரமத்துடன் தொடர்புடையது தான்.எனவே
நாம் தேர்ந்தெடுக்கும் களம் நம் திறமைக்கு ஏற்ப சிரிதாகவோ பெரிதாகவோ சவாலானதாகவோ இருக்கலாம்.அதை செய்வதற்கு தொடர்ச்சியான தீவிர முயற்சியும்,இலக்கை அடையும் குறிக்கோளுடன் செயல் பட வேண்டும்.பாராட்டு பெறுவதை விட சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதே பெண் சாதனையாளர்களின் இலக்கு நோக்கிய பயணம் ஆக இருந்துள்ளது. எனவே சரித்திர சுவடுகளை தொடர காத்திருப்பவர்கள் பயணம் வைராக்கியத்துடன் தொடரட்டும்...!
"உங்கள் ஆன்மா உங்கள் எதிரியைப் போன்றது. அது உங்களின் தீவிரத்தை கண்டால்,உங்களுக்குக் கீழ்ப்படிகிறது.உங்களிடம் பலவீனத்தைக் கண்டால்,உங்களைக் கைதியாக்கி கொள்கிறது".
______ இப்னு கையும் (ரஹ்)
Comments
Post a Comment