சுற்று சூழல் சீரழிவு மனித சமுதாயத்தின் பேரழிவு.


இந்த பேரண்டத்தில் எத்தனையோ கோள்கள் உள்ளன.மனிதன் வாழ அனைத்து தகவமைப்பு கூறுகளும் உள்ள கிரகம் பூமி மட்டும் தான்.இயற்கை என்ற வார்த்தையை அனுபவிக்கும் சுதந்திரம் வேறு எந்த கிரகத்திலும் கிடையாது. பூமியில் நம்முடைய சுதந்திரம் கட்டுப்பாடற்ற நவீன சிந்தனைகள் நோக்கி பயணிப்பதால் சுற்றுச்சூழல் சீரழிவு என்பது இன்று உலகளாவிய பிரச்சினையாக இருக்கிறது.இயற்கை தன் ஆற்றலுக்கு முன்னால் மனிதனும் அவனுடைய கண்டுபிடிப்புகளும் ஒன்றுமே கிடையாது என்பதை அவ்வப்போது நிரூபித்து கொண்டுதான் இருக்கிறது.ஆனாலும் நாம் உணர்வு பெறவில்லை.இதன் விளைவாக நாம் வெப்ப மாறுபாடுகளை தாங்கி கொள்ளகூடிய திறனற்றவர்களாகி விட்டோம்.வெயில் காலத்தில் வெயில் சூட்டின் தாக்கத்தால் புலம்புகிறோம்,மழைக்காலத்தில் வெள்ளம் வந்து விட்டது என்று புலம்புகிறோம்.பனிக்காலத்தில் வாகனம் ஓட்டி செல்ல பாதை தெரியவில்லை என்று புலம்பி
கொண்டிருக்கிறோம்.இந்த புலம்பல் இயற்கை மீதான பிணைப்பை நாம் அறுத்து கொண்டு அச்சுறுத்தலை மட்டுமே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது. சுற்றுப்புறத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் தொடங்க வேண்டிய ஒழுக்கப்பண்பு என்று தான் நான் சொல்வேன்.உலகம் முழுதும் கடுமையான இயற்கை சூழலையும் பேரழிவையும் நாம் எதிர்கொள்வதற்கு காரணம் நம்முடைய கரங்கள் உருவாக்கி வைத்தவைதான். சமூக சீர்கேடுகளை சரி செய்ய புறப்படுகிறேன் என்று நாம் சூளுறைக்கிறோம்.ஆனால் நம் வீட்டுக்கு அருகிலேயே நடைபாதையில் கொட்டிக்கிடக்கும் கழிவுகளோடு நம் வீட்டு கழிவுகளையும் சேர்த்து கொட்டிவிட்டு வரும் சமூக அக்கறை கொண்ட சீர்திருத்தவாதிகளாக நாம் இருக்கும்வரை எதையும் நம்மால் மாற்ற முடியாது. இந்த சுயநலம் கலந்த அலட்சிய போக்கு ஒன்றே போதும் இந்த சமூகத்தின் மீதும் வருங்கால சந்ததியின் மீதான ஆரோக்கிய வாழ்வின் மீதும் நமக்கு அக்கறையில்லை என்பதை காட்டுகிறது.
மனித பயன்பாடுகள் அதிகரித்து வருவதால் மாசுபாடுகளும் அதிகரிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.நம் சோம்பேறித்தனமும் அலட்சியமும் இவற்றிற்கு ஒரு மறைமுக காரணம் என்பதையும் நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.ஒவ்வொரு வீட்டிலும் கழிவுகளை தரம் பிரித்து வைத்து துப்புரவு பணியாளர்களுக்கும், மறுசுழற்சிக்கும் ஒத்துழைப்பு தருகிறோமா?!
பாலிதீன் ஒழிப்பை முழுமையாக நாம் கடைப்பிடித்தோமா! என்பதை நம்மை நாமே பரிசீலித்து கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும். மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள்,குப்பை கிடங்குகள், வாகன பயன்பாடுகள், மற்றும் பலவற்றிலிருந்து வெளிப்படும் நச்சுக்கள் காரணமாக காற்றின் தரம் குறைகிறது.இதன் விளைவாக நுரையீரல் புற்றுநோய்,மாரடைப்பு, சுவாச கோளாறுகள் போன்ற நாள்பட்ட நோய்களால் ஏராளமானோர் இறக்கின்றனர்.இதனால் மனித இனம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை.பல்லுயிர் ஜீவராசிகளும் இந்த பாதிப்புக்கு ஆளாகிறது.நாகரீக தேவை, சுகாதாரம் என்ற பெயரில் நாம் செயல்படுவதால் இயற்கையின் சுழற்சியை சீர்குலைக்கிறோம்.நம் வாழ்விடத்தை வசதிபடுத்திக் கொள்ள விலங்குகளின் இயற்கை வாழ்வை கடுமையானதாக மாற்றிவிடுகிறோம்.நீர் நிலைகளில் மிதக்கும் குப்பைகளும் பாட்டில்களும் பார்ப்பதற்கு சகித்துக்கொள்ள முடியாத வேதனையை ஏற்படுத்துகிறது.பொறுப்பில்லாத ஒரு சமூகமாக மாறிவிட்டோம் என்பதற்கு இவையெல்லாம் தான் சாட்சி.
காடழிப்பு,மணல் சுரண்டல் , பாலைவனமாக்கல், நிலச் சீரழிவு,போன்ற செயல்பாடுகளால் புவி வெப்பமயமாகிறது. இதனால் பனி மலைகள் உருகி தூண்டப்படும் கடல் மட்ட உயர்வு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உருவாக்கியுள்ளது.ஆழி பேரலையால் சுழட்டபடுகிறோம்.ஆனாலும் தீர்வு நோக்கி செயல்பட மறுக்கிறோம்.நீர் மேலாண்மை குறைபாட்டினால் விளைநிலங்கள் முழு பயனை பெறமுடிவதில்லை.
காலநிலை மாற்றம் மற்றும் முறைப்படுத்தப்படாத பாசன வழிகளால்
உணவுப் பஞ்சத்திற்கும் வழிவகுக்கிறது.
பூமி முழுவதும் மனிதனால் தான் சீர் குலைக்க பட்டு வருகிறது என்பதை நாம் உணரவேண்டும்.மற்ற உயிர்களையும் அவைகளுக்கு இந்த இயற்கையின் மீது உள்ள தார்மீக உரிமைகளையும் இரும்பு கரங்களால் உருகுலைத்து வருகிறோம்.நம்மோடு இந்த உலகில் பயணிக்கும் மற்ற உயிரினங்களுக்கு இந்த பூமியின் மீதுள்ள அன்பும்,கடமையை நிறைவேற்றும் பொறுப்புணர்வும் ஒருபோதும் நமக்கு இருப்பதில்லை.மனிதன் உண்மையில் நன்றி கெட்டவன் என்பதை அவ்வப்போது நிரூபித்து கொண்டுதான் இருக்கிறான்.
விண்வெளியை கூட விட்டு வைக்க வில்லை அங்கும்
குப்பை மேடுகள் .மேற்கூறியவற்றில் பெரும்பாலானவை சுற்றுச்சூழல் சீரழிவுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்கள். இயற்கையாகவே உருவாகும் காட்டுத்தீ, நிலச்சரிவு, சுனாமி, பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், சூறாவளி போன்ற பல இயற்கை நிகழ்வுகள் நடந்தாலும் அதை ஏற்று கொண்டு தன்னை மீண்டும் உயிர்ப்பித்து கொள்ளும் ஆற்றல் பூமிக்கு இயல்பாகவே உண்டு.ஆனால் மனிதர்களின்
முறையற்ற நில திட்டமிடல், நகரமயமாக்கல் மற்றும் வளர்ச்சி போன்ற கூறுகள் சுற்று சூழல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.சுரங்கத் திட்டங்கள், வெப்ப ஆலைகள், அணுமின் நிலையங்கள் ,சாய பட்டறை கழிவுகள், உர ஆலை கழிவுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை மோசமாக்குவது மட்டுமல்லாமல் நீர்நிலைகளை ஈவு இரக்கமின்றி விழுங்குகிறது.இந்த அபாயகரமான கழிவுகள் உணவுச் சங்கிலியில் எளிதில் நுழைந்து வருகிறது.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிலம் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.இயற்கை வாழ்விடங்கள் நகர வளர்ச்சியின் தேவைக்காக நிறைய அழிக்கப்பட்டுள்ளன.மண்ணை விற்று விட்டு மாடி தோட்டங்களை உருவாக்குவதில் பெருமை ஒன்றுமில்லை.'தவுட்டுக்கு தங்க சுவற்றை எழுதி கொடுப்பது' போன்றது தான்.உயிர் காற்றை உருவாக்கும் மரங்களை வெட்டி விட்டு போன்சாய்களை வீட்டுக்குள் வளர்க்கும் நம் அறிவை என்னவென்று கூறுவது.இயற்கை உணவுகளை தவிர்த்து ஹைபிரிட் என்ற கலப்பு உருவாக்கங்கள் மனிதனின் ஆரோக்கியத்தை குறைக்கிறது.பட்ட பின் ஞானம் தேடி மீண்டும் இயற்கை வாழ்வுக்கு திரும்பிவிடும் ஒருசிலரால் இயற்கை வாழ்க்கை முறை வசதிகள் மற்றும் உணவுக்கு அதிக விலை கொடுத்து பெறும் நிலையை நாமே உருவாக்கி கொண்டோம்.அனுமதி இல்லாத இடங்களில் உருவாவதை தடுக்க வேண்டும்.குப்பை கொட்டும் வசதி ஏற்படுத்தி கொடுக்காத குடியிருப்பு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.பெரும்பான்மையான சுற்று சூழல் கெடுதிகள் நகர் புறத்திலிருந்து தான் உருவாகிறது.எனவே நகரமயமாக்கலின் எதிர்மறையான விளைவுகளில் இருந்தும் இயற்கை சீற்ற பாதிப்புகளில் இருந்தும் தப்பிக்க வேண்டுமென்றால் சரியான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு மேலாண்மை மூலம் மட்டுமே சரி செய்ய முடியும்.ஜப்பானில் "கின்ட்சுகி" என்றொரு கலை உண்டு.பல வருடங்களாக நமக்கு பயன்பட்ட கோப்பை உடைந்து போனபின் அதை தூக்கி எறியாமல் தங்கம் கலந்த பசைகளால் அந்த பாத்திரத்தை ஒட்டி மேலும் மெருகூட்டி அழகு சேர்த்து புதிய பரிமாணத்தை கொடுப்பார்கள்.இந்த கலை நமக்கு உணர்த்தும் அறிவுரை இதுதான்.இந்த இயற்கையை முடிந்த அளவு மீட்டு கின்ட்சுகியை போல் புத்துயிர் பெற செய்ய வேண்டும்.அது இந்த இயற்கையின் மீதும் சுற்று சூழலின் மீதுமுள்ள அன்பை வெளிப்படுத்தினாலொழிய சாத்தியமில்லை.இவை எல்லாம் வளர்ச்சி என்று போகிற அவசரத்தில் நாம் சொன்னால் நம்மை விட இரக்கமற்றவரும் தண்டனைக்கு தகுதியான வேறு யாரும் இருக்க முடியாது.இயற்கையிடமிருந்து நாமும் இரக்கத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.


இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியது:-
உங்கள் கைகளில் ஒரு செடியின் துளிர் இருக்கும் போது உலக வாழ்வின் இறுதி நேரம் வந்து விட்டால், முடிந்த வரை அதை நடவு செய்து விடுங்கள்.

Comments

Popular posts from this blog

இஸ்லாம் வலியுறுத்தும் ஜனநாயகம்.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்.

பெண் அதிகாரம் அளித்தலின் (Women empowerment). அணுகுமுறைகள்.