நல்ல நண்பர்களுடன் பயணிப்போம்.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."
ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பனின் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு.
திருக்குறள்:788
நம் வாழ்வின் பெரும்பகுதி உறவுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.அவ்வாறே மனித வாழ்வுக்கு நண்பர்களும் தோழர்களும் இன்றியமையாதவர்கள். நட்பு பற்றிய பல அறவுரைகளை நம் வாழ்வில் அறிந்திருப்போம்.'கூடா நட்பு கேடாய் முடியும்.' 'உன் நண்பனை காட்டு நீ யார் என்று சொல்கிறேன்.' இப்படியான அறிவுறுத்தல்களை வளரும் தலைமுறைக்கு நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.நல்ல நட்பானாலும் கெட்ட நட்பானாலும் ஈர்ப்பு வருவதற்கு ஒரு காரணம் தான்.நம்மிடம் உள்ள பண்பு.அதை பொருத்தே நட்பும் அமைகிறது.நிறைய மனிதர்கள் நம்மோடு அன்பாக பழகியிருப்பார்கள்,அவர்களோடு சிரித்து பேசி மகிழ்ந்திருப்போம்.சிலர் நமக்கு நலன் விரும்பிகளாக இருந்திருப்பார்கள்.எல்லோரையும் நாம் நண்பர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவதில்லை.ஒரு மனிதனின் வாழ்வில் நல்ல நட்பை போன்று போற்றுதற்குறிய பகுதி எதுவும் இல்லை.அப்படியொரு நல்ல நட்பு அமைவதும் இறைவனின் அருட்கொடை தான்.பெற்றோர்,வாழ்க்கைத்துணை இந்த இரண்டு உறவுகளுக்கு பின் மிக முக்கியமான அருட்கொடை நண்பர்கள்.
ஒரு உண்மையான நண்பன் மகிழ்ச்சியான நேரத்திலும் துயரமான நேரத்திலும் உங்களை ஆதரிக்கும் ஒருவராக இருந்துவிட்டால் அந்த நட்பு நம் வாழ்வில் கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு என்றே சொல்ல வேண்டும்.அந்த நட்பை நாம் சிரமப்பட்டு சேர்த்து வைத்த அறிய பொக்கிஷமாய் பாதுகாத்து கொள்ளவேண்டும். இப்படிபட்ட நட்பே ஆறுதலையும் ஆதரவையும் வாழ்வில் மகிழ்ச்சியையும் அதிகரிக்க உதவுகிறது.நண்பர்கள் நமது மதிப்புகள், நடத்தை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் எவ்வளவு செல்வாக்கு செலுத்தலாம் என்பதை நண்பர்கள் புரிந்து கொண்டு நடந்தால் அந்த நட்பு நீடித்து நிலைத்திருக்கும். இஸ்லாமிய வரலாற்றில் தோழமையின் முக்கியத்துவம் மிகவும் வலுவானது. இதை இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களும் அவர்களை தூதராக ஏற்றுக்கொண்ட முதல் நம்பிக்கையாளர் ஹஜரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் வாழ்விலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.பெரும் துயர் காலங்களிலும்,சோர்ந்து கிடக்கும் நேரத்திலும்,எதிரிகள் சூழ்ந்து உயிருக்கு அச்சமூட்டும் நேரத்திலும், மடமையிலிருந்து ஒரு சமூகத்தை மீட்டெடுக்கவும், பசி,துன்பம் இன்பம்,வறுமை,வெற்றி என்று மறுமை வாழ்வின் வெற்றியிலும் நண்பராக்கி கொண்டு நபிகளாரை நேசித்த 'கலீலுர் ரஸூல்' தூதரின் நண்பர் என்று அழைக்கப்பட்டவர் தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்.இந்த தோழர்கள் வாழ்வில் நாம் கற்றுகொள்ள வேண்டிய கண்ணியங்கள் தான் அதிகம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் வரலாற்றின் பக்கத்தில் நம் சந்ததிகளுக்கு முன்னுதாரணமாய் படிப்பித்து கொடுக்க வேண்டிய சத்திய வாழ்வு இது.நபிகள் நாயகத்தின் நெருங்கிய நண்பரும் இஸ்லாத்திற்கு மாறிய முதல் ஆணும் அபூபக்கர் சித்தீக் (ரலி) ஆவார்.மக்காவில் நபியை துன்புறுத்திய போது,அபூபக்கர் சித்தீக் அவர்கள் மட்டும் தன் நண்பரின் கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராக இருந்ததால் தொடர்ந்து நபிகளாரை ஆதரித்தார். துரோகத்தினால் மதீனாவுக்கு நபிகளார் ஹிஜ்ரத் சென்ற போதும், அபூபக்கர் (ரலி) அவர்கள் நபியுடன் சென்றார்.இந்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக மாறியது மட்டுமல்லாமல் உண்மையான நட்பின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
பரஸ்பர நம்பிக்கை, ஆதரவு மற்றும் இறவனுக்காக அன்பு கொண்டதால் நபிகள் நாயகம் அபுபக்கர் சித்தீக்(ரலி) அவர்களை மிகவும் மதிப்பவர்களாகவும் நேசிப்பவர்களாகவும் இருந்தார்கள், அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் நபியவர்களால் "எனது தோழர்" மற்றும் "என் நண்பர்" என்று அழைக்கப்பட்டார். உண்மையான நட்பு என்பது நம்பிக்கை, விசுவாசம் மார்க்க பணிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது, மேலும் அவர்களின் நட்பே இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் உள்ளது. நம்முடைய நண்பர்களுக்கு நாம் யார் என்பதை புரிந்து கொண்டு நம்மை வடிவமைக்கும் திறன் இருப்பதால், நாம் அவர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.ஒரு நல்ல நண்பன், நீங்கள் தேர்வு செய்யும் சரியான பாதையில் உங்களோடு ஒன்றாக பயணிப்பார். கருத்து வேறுபாடுகள் வந்தால் அதை ஆரோக்கியமாக முடித்து வைப்பார்.உங்கள் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டு இயல்பு மாறாமல் பயணிப்பவரே ஒரு நல்ல நண்பர் ஆவார். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், இறை நம்பிக்கையாளர்கள் தங்கள் தோழர்களைத் தேர்ந்தெடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்களால் நம் கருத்துக்களும் நடத்தையும் பெரிதும் பாதிக்கபடலாம்.எனவே கூட்டாளிகளை கவனமாகத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தையும் ஒரு தனிநபரின் வாழ்க்கையில் அவை ஏற்படுத்தும் தாக்கத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுத்தினார்கள்.'ஒரு வலுவான நட்பு என்பது நம்பகத்தன்மை மற்றும் அமானத்தின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது'.
இந்த உலகில் நட்பு என்ற பெயரில் ஒழுக்க வரம்புகளை பேனாமல் போதை கலாச்சாரத்தால் சீரழியும் இளம் தலைமுறையினர் நட்பின் நீதியை தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு நல்ல நண்பன் தன் நண்பனின் மானத்தை இழக்க நேரிடும் நிலைக்கு ஒருபோதும் தள்ளமாட்டான்.எனவே நமது இறையச்சத்தையும் , வாழ்வையும் வளர்ச்சிப்பாதை நோக்கி உந்தும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியம்.இக்லாஸ் மற்றும் நம் நலனில் உண்மையான அக்கறை கொண்டு செயல்படுவதே இஸ்லாத்தில் நட்பின் அடித்தளமாக உள்ளது.உண்மையான நண்பர்களுக்கு ஒருபோதும் தவறான நோக்கங்கள் இருக்காது.மேலும் நட்பில் ஒருவருக்கொருவர் சிறந்த நலன்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய தனிப்பட்ட தொடர்புகளில் நம்பகமானவர்களாக இருக்கவும், தன் நண்பனின் நம்பிக்கையைப் பேணவும், முக்கியமான விஷயங்களைப் பற்றி நண்பர்களிடம் உண்மையாக நடந்துகொள்ளவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. கூடுதலாக, உண்மையான நட்புக்கு விசுவாசமும் ஆதரவும் அவசியம்.நல்ல சந்தர்பத்தில் அல்லது துயரமான சந்தர்பத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஊக்கம் அளிக்க வேண்டும். நேர்மையான நண்பர்கள் ஒருவர் மீது ஒருவர் இரக்கமும் அனுதாபமும் கொண்டு ஒருவர் மற்றவரின் தவறுகளை மன்னிப்பார்கள்.இன்றைய காலத்தில் நண்பர்கள் என்று கூறிக்கொண்டு சிறிது காலம் பயணித்து விட்டு பிறகு அவர்களின் இரகசியங்களை அம்பலமாக்கி ஓருவர் மீது ஒருவர் சேற்றை வாரி அடித்து கொள்பவர்களாக உள்ளனர்.
"பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்". அல்குர்ஆன் 43:67
ஆதாயத்துக்காக நட்பை பயன்படுத்துபவர்கள் மறுமையில் இவ்வாறு எதிரிகளாகி விடுவர்.
சிறந்த நண்பர்கள் தங்கள் தொடர்பில் வைத்திருக்கும் அடிப்படை பண்புகள் இரக்கம் மற்றும் மரியாதை ஆகியவை. நண்பர்களின் பின்னணிகள் வேறுபட்டிருக்கலாம் ஆனாலும் ஒருவருக்கொருவர் கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.ஒருவரின் ஆளுமை மற்றும் நடத்தையை உருவாக்குவதிலும் வீழ்த்துவதிலும் நட்புக்கு மிக முக்கிய பங்கு உண்டு.எனவே இறையச்சம், நன்னெறி மற்றும் நற்செயல்களை ஆதரிக்கும், உண்மையான நண்பர்கள் தங்கள் உறவைப் பலப்படுத்திகொண்டு இறைவனை நெருங்குகிறார்கள். நண்பர்களின் வெற்றி மற்றும் நல்வாழ்வை விரும்புவது நட்பின் மிக உயர்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.
ஒரு முஸ்லிம் தன் நண்பரின் செழிப்பு, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) கூறுகிறார்கள்.கூடுதலாக
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களின் வாழ்க்கையை நாம் கூர்ந்து கவனிக்கும்போது, அவர்களின் குணத்தில் இஸ்லாத்தின் உண்மையான சாரமும் போதனைகளும் முஹம்மது நபி (ஸல்) மற்றும் அபுபக்கர் (ரலி) அவர்களின் நட்பில் இருக்கும் விசுவாசம் மற்றும் நம்பகத்தன்மையிலிருந்து அற்புதமான உதாரணங்களையும் உத்வேகத்தையும் நாம் பெற வேண்டும்.வரும் தலைமுறைகள் நட்பை தேர்ந்தெடுக்கவும் தகுதி செய்து கொள்ளவும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கலிஃபத்துர் ரசூலின் வரலாற்றை கூறி வழிநடத்த வேண்டும். "நல்ல நண்பர்களுக்கு ஒளியால் ஆன மேடை ஒன்றை அமைத்து அதன் மீது அவர்களுக்கு இருக்கை அமைத்து மறுமையில் அல்லாஹ் கண்ணியப்படுத்துகிறான்".
- நபிமொழி.
எனவே நல்ல நண்பர்களோடு பயணித்து ஈருலக வாழ்வில் கண்ணியம் பெற இறைவன் அனைவருக்கும் அருள்புரிவானாக.
Comments
Post a Comment